திலீபன் எனும் திறனாளன்…

தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன். 

திலீபன் பம்பரமாய் சுழன்று விடுதலைக்காய் 24 மணித்தியாலமும் உழைத்தவன். இன்றுடன் எட்டு நாட்கள், 192 மணித்தியாலங்கள் தண்ணீர், உணவு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் காட்சியை பார்க்கும் போது அவரை முதன்முதலில் சந்தித்த நாட்கள் என் நினைவில் நிழலாடின.

அவரை முதன் முதலில் சந்தித்து உரையாடியது சுபாஸ் வீட்டில், அன்று திலீபன் என்னை அழைத்து சென்று சுபாஸ் வீட்டு தலைவாசலில் இருந்த சாய்மனை கதிரையில் இருந்து செய்யப்படவேண்டிய வேலைகளை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித் தந்ததும் பின்னர்  நண்பர்கள் சுபாஸ், நவம், சுகு, விக்கினா, நகுலேஸ்,  அஜித், குட்டி சிறி என்று எங்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாகி திலீபனுடன் வேலை செய்யத் தொடங்கியதுமாக நாட்கள் நகர்ந்தன.

திலீபன் எப்போ எங்களை இந்தியா பயிற்சிக்கு அனுப்புவார் என்ற எண்ணத்துடன் தீலிபன் வரவை எதிர்பார்த்து மேஜர் சுபாஸ் வீட்டு தலைவாசலில் எல்லோரும் காத்திருப்போம் தலைமறைவாக அரசியல் பணி செய்த காலம். திலீபன் நினைத்த நேரம் தான் சந்திப்பு நிகழும்.

அமைப்பில் இணையும் தவிப்பில் இருந்த நண்பர்களாக எங்களுக்குள் சில விடயங்களை கதைப்போம் அவற்றில் ஒன்று  இந்தியா சென்று பயிற்சி பெற்று செல்லக்கிளி அம்மான் வீரமரணத்தின் பின் ஒட்டிய போஸ்டரில் நின்றது போல் எஸ்.எம்.ஜி துப்பாக்கியுடன் நின்று  நாங்களும் படம் எடுக்க வேண்டும், மற்றது மானிப்பாயில் யூலை மாதத்தில் திருப்பதி புத்தக சாலையின் வாசலில் இராணுவத்தால் படுகொலை செய்த மக்களிற்கும், எங்கள் நண்பர்களுக்காகவும் அதே இராணுவத்தை திருப்பி அடிக்க வேணும் என்ற மனக்குமுறல் உடன் உலாவந்தோம்.

திலீபன் இந்தியாவுக்கு இந்தக் கிழமை அனுப்புகிறேன் என்று கூறி பல மாதங்கள் கடந்து விட்டது.  ஒரு நாள் அவர் வரவை எதிர்பார்த்து சுபாஸ் வீட்டில் எல்லோரும் காத்திருந்தோம் வழமை போல் அன்றும் வந்து சாய்மனை கதிரையில் அமர்ந்த திலீபனை நோக்கி, எப்போ என்னை அனுப்ப போகிறியள் என்று அஜித் கேட்டான். கேட்ட கையோடு மேசையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு சாய்மனை கதிரையில் படுத்திருந் திலீபனை பார்த்து இந்தமுறை பேய்க்காட்டினால் குத்துவன் என்று கோபமாக கிட்ட வந்தான் நாங்கள் எல்லாம் பாய்ந்து அவனை பிடித்து கத்தரிக்கோலை பறித்துக் கொண்டோம். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத மயான அமைதி தலைவாசலில் குடி கொண்டது.

அமைதியாக அஜித்தை அழைத்து புத்திமதி கூறிவிட்டு அடுத்தமுறை கட்டாயம் அனுப்புவேன் யோசிக்க வேண்டாம் உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் கூறி விடைபெற்றார். அதன் பின் நாங்கள் அஜித்தை நீ மொக்கு வேலை பார்த்து விட்டாய் என்று எல்லோரும் வாய்க்கு வந்த படி பேசினோம்.  ஆனால் அடுத்த முறை தலைவாசல் சந்திப்பில் அஜித்தை காணவில்லை. தீலிபன் எங்கள் குழுவில் அவனை மாத்திரம் இந்தியா அனுப்பி விட்டார்.

எங்கள் குழுவில் கோபம் கொண்ட நண்பன் விக்கினா ரெலி என்ற இயக்கத்தில் இணைந்து விட்டான் சுகு அதிரடிப்படை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டான் குட்டிச்சிறி நான் சுபாஸ் திலீபன் பின்னால் நம்பிக்கையோடு திரிந்தோம். நவம் ரெலோ இயக்கத்திற்கு சென்றுவிட்டார். எங்கள் நண்பர்கள் வட்டம் சுருங்கத் தொடங்கியது நகுலேஸ் வெளிநாடு சென்றுவிட்டார்.

இத்தனை குழப்பங்களையும் அந்த ஆரம்ப காலங்களில் எங்கள் வட்டத்திற்குள் அமைதியாக சந்தித்து பொறுமையாக எல்லாப் பிரச்சனைகளையும் முகம் கொடுத்த திலீபன் அன்றும் அமைதியின்,  பொறுமையின் சிகரமாக இருந்தான் இன்று அமைதியாக உணர்வு இழந்து கிடக்கும் நிலையில் காணும்போது வேதனையாகயிருந்தது.

நான்கு நாட்களின் பின்னர் ரெலோ நவத்தை இந்தியா அனுப்பவில்லை திரும்ப வந்து திலீபனுடன் கதைத்து சேர்ந்துவிட்டார் போராளிகளினது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பொறுமையாக எப்படி இந்த விடுதலை இயக்கத்தை வளர்த்தார் என்பதிற்கு இச்சம்பவங்கள் சிறு  எடுத்துக்காட்டுகளே.

அந்த நாட்களில் நவாலியில் களைவோடை அம்மன் கோவிலில் இருந்த ஐயாவிடம் கதைத்து விட்டு சாப்பாடும் வேண்டி சாப்பிடுவதும் வழக்கம். இப்படி ஒரு நாள் அங்கிருந்து சயிக்கிளில் வெளிக்கிட்டு சிறு கறுப்பு சூட்கேஸ் ஒன்றுடன் வட்டுக்கோட்டை வீதியில் ஏறி நவாலி சேச்சடி என்ற இடத்திற்கு நான் சுபாஸ் நவம், திலீபனுடன் அங்குள்ள நண்பர்களான செல்லக்கிளி, மற்றும் ரவியை சந்திப்பதற்காக சேச் வாசலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அவர்களுடன் தீலிபன் கதைத்துக் கொண்டு நின்றார். எதிர்பாராமல் டேவிற்சனை தேடி சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒழுங்கையால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்தது தெரிந்தவுடன் எங்களை மெதுவாக கலைந்து செல்லுமாறு பணித்துவிட்டு தான் பஸ்ஸிற்கு போகும் பயணிமாதிரி நின்று கொண்டார். நானும் சுபாசும் எதிரில் உள்ள ஒழுங்கை ஒன்றில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஜீப் வண்டி சொல்லி வைத்தமாதிரி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றது. தீலிபனிடம் இறங்கி கதைத்து கொண்டு நின்றார்கள். தீடீர் என்று தீலிபன் சூட்கேஸால் சுழட்டி அடிப்பது தெரிந்தது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் ஒழுங்கையால் ஓடி விட்டோம். அன்று கண்முன்னால் அந்த அமைதியான திலீபனின் துணிவையும், தந்திரத்தையும் கண்டோம். பொறுமை, செயல்திறன், வீரம், சமயோசித புத்தி என பல திறன்களை ஒருங்கே கொண்ட திலீபன், இன்றைய தினம் தன் இனத்தின் உறுதியை உணர்த்த உணர்விழந்து கிடக்கிறான்.

திலீபனின் திறனோடும், பயிற்சியோடும் வளர்ந்த பலர், 33 ஆண்டுகளின் பின் உலகெங்கும் சிதறி கிடைக்க அவர் கனவும், சொந்த மண்ணும் இன்னமும் அந்த மக்கள் புரட்சிக்காக காத்திருக்கிறது.