அமெரிக்க சினிமாவின் ஊடாக சுதந்திரத்தின் அழியாத சக்தியைப் போற்றும் வகையில், அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
‘Freedom 250’ என்ற தொனிப்பொருளில் ஜூலை 2ஆம் திகதி இரவு நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், பிரதம விருந்தினராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார். அத்துடன் நூற்றுக்கணக்கான இலங்கைப் பங்காளர்கள், அரச அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
இரண்டரை நூற்றாண்டுகளாக அமெரிக்காவை வடிவமைத்த தனிநபர் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தன்னாட்சி போன்ற விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் தூதரக வளாகம் ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் இடமாக மாற்றப்பட்டிருந்தது.
இங்கு வருகை தந்திருந்த அதிதிகளை வரவேற்று உரையாற்றிய, தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் கருத்து தெரிவிக்கையில்,
எமது தேசம் உலகிற்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்றான சினிமாவை போற்றுவதன் மூலம் அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். ‘தி விஸார்ட் ஆஃப் ஓஸ்’, ‘அவெஞ்சர்ஸ்’, ‘ஈ.டி.’, ‘அவதார்’ மற்றும் இலங்கையில் படமாக்கப்பட்ட ‘தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள், துணிச்சலாகக் கனவு காண்பதற்கும், புதிய சாத்தியங்களை கற்பனை செய்வதற்குமான சுதந்திரத்தையே பிரதிபலிக்கின்றன.
அமெரிக்க சினிமாவின் பரிணாம வளர்ச்சியை காட்டும் வகையில், ஊமைப் படங்கள் முதல் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி டார்க் நைட்’ வரையான திரைப்படங்களின் தொகுப்புகள் திறந்தவெளித் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்திய அமெரிக்க மரைன் படையினரின் இசைக்குழுவினர் (III Marine Expeditionary Force Band) வழங்கிய இசை நிகழ்ச்சியுடனும், கொழும்பு வானத்தை ஒளிரச்செய்த பிரம்மாண்ட வாணவேடிக்கையுடனும் விழா நிறைவுற்றது.
பிரெண்டிக்ஸ், ஹேய்லிஸ், ஹிர்தாரமணி, மாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ்டர்கார்ட், ஆர்எம் பார்க்ஸ் மற்றும் வீசா ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த விழா வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



