தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு,கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் தொல்லியல் திணைக்கள அடாவடிகளும் கோவில்கள் அழிப்பும், அத்துமீறிய பௌத்த விகாரைகள் அமைப்பும், பௌத்தமயமாக்கலும் அசுர வேகத்தில் அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரசின் பேச்சுக்கான அழைப்பை நாம் மிக கவனமாக கையாள வேண்டும்.
நீண்டகால தீர்வுகள் இல்லை
ஒவ்வொரு முறையும் பேச்சுக்கு அழைத்து பசப்பு வார்த்தைகளை கூறுகின்றார்களே அன்றி ஒழுங்கான நடைமுறை ரீதியிலான நீண்டகால தீர்வுகள் எதனையும் வழங்குவதாகவோ செயலில் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதாகவோ இல்லை.
படிப்படியாக எமது தனித்துவம், நிலங்கள் என்பன திட்டமிட்டு பொதுமைப்படுத்தப்பட்டு வருவதுடன் இவ்வாறான பேச்சுக்கள் மூலம் அன்று வரையான மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டனவாக மாற்றம் பெறுவதுடன் புதிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதன் மூலம் அவை மறக்கடிக்கப்படுகின்றன அல்லது மழுங்கடிக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்று ஒரு வருடம் ஆகின்ற நிலையில் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக தீர்வு பொதி வெளியிடுகின்றேன், சில ஆக்கபூர்வமான விடயங்களை நடைமுறைப்படுத்துகின்றேன் என்றார். ஆனால் நடந்ததோ வேறு.
தமிழர் தாயகத்தில் மேலாதிக்க ஆக்கிரமிப்பு மனநிலையுடன் மிக மோசமாக பௌத்தமயமாக்கல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
உடனடி தீர்வு
இதனை கருத்திற் கொண்டு தொல்லியல் திணைக்கள அடாவடி செயற்பாடுகள் மற்றும் பௌத்தமயமாக்கல் முற்றாக நிறுத்தப்படல், தமிழர்களின் ஆதி தமிழர் வழிபாட்டிடங்களுற்கு எந்தவித இடையூறுமின்றி வழிபடும் உரிமையை வேற்று மத பிரசன்னங்கள் இன்றி அங்கீகரித்தல், வட கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் முழுமையான மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை போன்ற சமகால விடயங்களில் உடனடி தீர்வை முன்நிபந்தனையாக இம்மாதத்துக்குள் நிறைவேற்ற கோர வேண்டும்.
நிரந்தர தீர்விற்கான பேச்சுக்கு கால அட்டவணையின் கீழ் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நடுநிலை அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் இந்த விடயங்களில் தலையிட்ட நாடுகளை, வாக்குறுதி தந்த நாடுகளை, ஐ.நா சபையினை எமது தீர்வு மற்றும் புதிய ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க, அரசு மீது பொருளாதார நெருக்கடியான இத்தருணம் மேலும் அழுத்தம் தர கோர வேண்டும்.
முக்கிய தீர்க்கமான காலகட்டத்தில் வலிகள் சுமந்த தியாகங்களினால் சிவந்த தமிழர் வாழ்வில் கண்ணீரின் உச்சந்தொட்ட இந்த மாதத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிடின் ஒத்துழையாமை இயக்கத்தை அரசின் சகல திட்டங்களுக்கும் எதிராக முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் கோரி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.