உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் பாதகமான தன்மை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகள்குழு, அச்சட்டமூலம் தொடர்பில் தமது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி தலைமையிலான பிரதிநிதிகள் குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
இப்பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான பவானி பொன்சேகா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நதீஷானி பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம்வரை நீடித்த இச்சந்திப்பில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், ஊழல் எதிர்ப்புச்சட்டமூலம், சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பில் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படும் சட்டம், உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் விவகாரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது குறிப்பாக சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தமது தலையீடுகளுக்குக் கிடைத்த வெற்றி என்று சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டிய பயோலா பம்பலோனி, தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயங்கள் என்னவென்பதையும் கேட்டறிந்துகொண்டார்.
அதன்படி ‘பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்துக்கான விரிவான வரைவிலக்கணம், தொழிற்சங்கவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்குவைக்கப்படக்கூடிய தன்மை என்பன உள்ளடங்கலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் காணப்படும் மிகமோசமான விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் ‘அரகலய’ என அறியப்படும் எதிர்ப்புப்போராட்டத்தின்மீது அரசாங்கம் அடக்குமுறையைப் பிரயோகித்தபோது மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மதத்தலைவர்களும் அதற்கு எதிராகப் போராடியதாகவும் இருப்பினும் அரசாங்கம் அதனைக் கருத்திலெடுக்கவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே தற்போது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல விவகாரத்தில் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் வலுவான அழுத்தம் அவசியம் என்று வலியுறுத்தினர்.
மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது வரவேற்கத்தக்க விடயமா? என பயோலா பம்பலோனியினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், இது சர்வதேச சமூகத்தை மகிழ்விக்கும் நோக்கிலான வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே தவிர, நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய – தீர்வை இலக்காகக்கொண்ட நடவடிக்கை அல்ல என்று சுட்டிக்காட்டினர்.
இவற்றை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே தாம் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.