ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (9) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதுடன் இதன்போது நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டல்கள் தொடர்பில் இதன்போது ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் (9) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின்போது இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவிருப்பதுடன் எதிர்வருங்கால பல்துறைசார் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின்கீழ் நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைக்குழு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைக்குழு, அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைக்குழு ஆகிய பெயர்களில் உருவாக்கப்பட்ட குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

மேலும் இலங்கை இவ்வாண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்கவேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டு, 2033 ஆம் ஆண்டு வரையான அடுத்துவரும் 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வழிகாட்டல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

இச்சந்திப்பில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழுவில் நிதியமைச்சு, நீதியமைச்சு, வர்த்தக அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கல்வியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளடங்குவர்.

இதுஇவ்வாறிருக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி புருசேல்ஸில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply