ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டிற்கு ஊடகங்களின் இயல்பான செயற்பாடு உந்துசக்தியாக அமைகின்றது.ஊடகங்களின் பொறுப்பு வாய்ந்த தன்மையானது பல்துறை சார்ந்த சாதக விளைவுகளுக்கும் அடிப்படையாகின்றது.
இதேவேளை ஊடக அடக்குமுறைகள் மேலோங்குமிடத்து அது ஜனநாயகத்தை மழுங்கடிப்பதாகவும், நாட்டை சவக்குழியில் தள்ளிவிடுவதாகவும் அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.
இந்த வகையில் பத்திரிகைகளின் சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று (03) உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.இந்த நாள் ஊடக வரலாற்றில் தனித்துவமான ஒரு நாளாக விளங்குகின்றது. உலகில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்கள் பல்வேறு ஒலிகளின் மூலம் தகவல்களைப் பரிமாறுகின்றன.தாவரங்கள் மணம், நிறம் என்பவற்றின் துணையுடன் தகவல் பரிமாற்றம் செய்கின்றன.மனிதன் தனது பேச்சின் வாயிலாக தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்தான்.பின்னர் தனது அறிவின் துணையுடன் பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களை உருவாக்கிக் கொண்டான்.
அவற்றின் வாயிலாக எளிமையாக தகவல்களை பரிமாறிக் கொள்கிறான்.மொழி தோன்றுவதற்கு முன்பு சைகைகளாலும், ஒலிகளாலும் மனிதன் தனது கருத்துக்களை பரப்பி வந்தான்.நேருக்கு நேர் செய்தி பரப்புவதற்கு சைகைகளையும், ஒலிகளையும் பயன்படுத்திய மனிதன் தொலைவில் உள்ளவர்களுக்கு செய்தி வழங்குவதற்கும் ,நிரந்தர செய்தியாக இருப்பதற்கும் சித்திரங்களை பயன்படுத்தினான்.
ஒலியை அடிப்படையாகக் கொண்டு பேச்சு மொழியும் சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்து மொழியும் தோற்றம் பெற்றன.இவ்வாறு தோன்றிய செய்திப் பரவல் தற்காலத்தில் காணப்படும் செய்தித்தாள் அல்லது பத்திரிகை நிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தன.அச்சுத் தொழிலின் வருகைக்குப் பின்னரே இதழ்கள் வெளிவரத் தொடங்கின.அச்சுத் தொழிலுக்கு அடிப்படையான காகிதத்தை கி.பி.105 இல் சீனாவைச் சேர்ந்த ” சாய்லன் ” என்பவர் கண்டுபிடித்தார்.
காகிதம் முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்றே அச்சிடும் முறையும் முதலில் சீனாவில்தான் தொடங்கியது என்கிறார் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன். இவ்வாறாக விரிவடைந்த பத்திரிகைத்துறை இன்று ஏனைய ஊடகங்களில் இருந்தும் முதன்மை பெற்ற ஒன்றாக பலரினதும் வரவேற்பினையும் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக மேலெழுந்து காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மே மாதம் மூன்றாம் திகதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாக பிரகடனம் செய்துள்ளது.இச்செயல் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புநிலையை உணர்த்துவதற்கும் அதேவேளை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 19 ஆவது உறுப்புரையின் கீழான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான உரிமையினை பாதுகாப்பதற்கும் போற்றுவதற்குமான பொறுப்புக்களை அரசாங்கங்களுக்கு நினைவுறுத்துவதற்குமாகும்.
அத்துடன் லின்ட்ஹக் பிரகடனம் எனப்படும் 1991 இல் ஆபிரிக்க செய்தித்தாள் ஊடகவியலாளர்களினால் வெளியிடப்பட்ட சுதந்திர அச்சு ஊடகக் கொள்கை அறிக்கையின் ஆண்டு நிறைவைக் குறிப்பதாகவும் இது அமைகின்றது.ஆபிரிக்க பத்திரிகைகளால் கூட்டாக 1991 ம் ஆண்டு இந்நாளிலேயே ” பத்திரிகை சுதந்திர சாசனம் ” முன்வைக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தவகையில் இன்று பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை முன்னெடுக்கும் ஆணைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை சுதந்திரங்களை உலகின் அனைத்து பாகங்களிலும் நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.கருத்துக்கள் எண்ணங்களை கட்டுப்பாடற்ற முறையில் பரிமாறுதல் என்றும் சொற்களாலும் படங்களாலும் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறுதல் என்றும் இதுபற்றி யுனெஸ்கோ சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயரிய இலட்சியங்களை ஆண்டு தோறும் மே மாதம் 3 ம் நாளில் உலகளவில் உலக பத்திரிகை சுதந்திர அமைப்பு சார்ந்த ஈடுபாட்டாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதன் வழியே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரமும் பத்திரிகை சுதந்திரமும் விழிப்புணர்வு பெற்றன.
ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாத்தல், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கான சட்டப்பாதுகாப்புக்கு எதிராக போராடுதல் என்பன குறித்தும் இந்நாளில் கவனம் செலுத்தப்படுகின்றது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செய்தி நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்று 2012 ம் ஆண்டின் கார்த்தாகே பிரகடனம் உள்ளிட்ட பல பிரகடனங்களும் வலியுறுத்துகின்றன.இதேவேளை 2011 இல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கும் நியாயமற்ற தலையீடுகளின்றி பணியாற்றுவதற்கும் உரிய சூழலை அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்ததும் தெரிந்ததேயாகும்.
யுனெஸ்கோ அமைப்பானது UNESCO GUILLERMO CANO என்னும் உலக பத்திரிகை சுதந்திர விருதினை, பத்திரிகை சுதந்திரத்தினை உலகில் எங்கேனும் அல்லது குறிப்பாக தனக்கு வரக்கூடிய ஆபத்தினை எதிர்நோக்கிய நிலையில் பாதுகாப்பதற்கோ மேல்நிலைப் படுத்துவதற்கோ முனைந்த எவரேனும் தனிநபர் அல்லது ஒரு அமைப்பு, நிறுவகம் ஒன்றுக்கு வழங்கி வருகின்றது.1997 இல் இப்பரிசுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.மேற்படி பரிசு கொலம்பியாவின் ஊடகவியலாளர் Guillermo Cano Isaza என்பவர் 1986 டிசம்பர் 17 ம் திகதியன்று பொகோட்டா என்னுமிடத்தில் EL Espectador செய்தித்தாள் அலுவலகத்தின் எதிரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் நினைவூட்டி கௌரவிப்பதற்கென அவரின் பெயரால் வழங்கப்படுகின்றது.
கனோவின் எழுத்துக்கள் கொலம்பியாவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் மன்னர்களை ஆத்திரமடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.1997 இல் சீனாவின் ஊடகவியலாளர் காவோ யூ முதன் முதலாக இவ்விருதினை பெற்றுக் கொண்ட நிலையில் 2009 ம் ஆண்டு இலங்கையின் ஊடகவியலாளர் வசந்த விக்ரமதுங்க இவ்வுயரிய விருதுக்கு உரியவரானார்.
உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் சமகாலத்தில் பல்வேறு சவால்களைக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.ஜனநாயகத்தினைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களின் செயற்பாடு காத்திரமானதாக அமைந்திருக்கின்றது.எனினும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகும்.
இலங்கையும் இதற்கு விதிவிலக்காக அமைந்துவிடவில்லை.போருக்கு பின்னரான காலகட்டத்திலும் ஊடக ஜனநாயகம்,ஊடக சுதந்திரம் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.படுகொலை செய்யப்பட்ட,காணாமல் போன ,கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.ஊடக நிறுவனங்கள், ஊடகத்துறையின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதும் இலங்கையில் வழமையாகிவிட்டது.
ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கின்றது.ஊடகவியலாளர்களை ஒடுக்கும் நோக்கில் அவர்கள் மீது பல்வேறு வகையான அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.எனவே இவற்றுக்கான தீர்வினை உறுதிப்படுத்துவதோடு, நாட்டின் ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு ஊடகங்கள் வழங்கும் சேவைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஊடக அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
உலகின் பல நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரம் சிறப்பாகக் காணப்படுகின்றது.அவர்களின் சிறப்பான செயற்பாடுகள் மீது நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.இந்நிலைமை இலங்கையிலும் ஏற்பட வேண்டும் என்றும் அவ்வமைப்புக்கள் மேலும் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதேவேளையில் இலங்கையின் சரித்திரத்தில் கொலையுண்ட எந்தவொரு ஊடகவியலாளரது கொலை தொடர்பான விசாரணைகளும் முடிவடையவில்லை.எந்தவொரு விசாரணை அறிக்கையும் வெளியிடப்படவில்லை.ஏனைய கொலைகள் தொடர்பாக செயற்படும் சட்டம் ஊடகவியலாளருக்கு எதிரான சம்பவங்களில் செயற்படாதது விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும் என்று சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சீதா ரஞ்சனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சான்று பகர்வதாகவுள்ளது. ஊடகங்கள் மக்களுக்கு தகவல் வழங்கும், அறிவூட்டும், விழிப்பூட்டும், சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் மற்றும் அறிவைப் பகிர்ந்தளிக்கும் கருவியாக செயற்படுகின்றன. இதற்கு மேலதிகமாக மக்கள் குரலாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் ஊடகங்கள் செயற்படுகின்றன.இப்பணிகளைத் தொடர்வதற்கு ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
அச்சு ஊடகத்தொழில் இன்று பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.சுடச்சுட செய்திகளை வழங்குவதில் சமூக வலைத்தளங்கள் முந்திக்கொள்ளும் நிலையில் பத்திரிகைகள் இதற்கு ஈடுகொடுத்து முன்செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் சம்பவங்களுடன் அதிகமான பின்னணிச் செய்திகளையும் பத்திரிகைகள் வழங்க வேண்டிய தேவையும் மேலெழுந்துள்ளது.இவற்றோடு காகிதத்தாள், மை உள்ளிட்ட பல பொருட்களின் அண்மைக்கால விலையேற்றங்களும் பத்திரிகைத்துறைக்கு சவாலாக விளங்குகின்றன.இவற்றுக்கும் மத்தியில் பத்திரிகைகள் தமது இருப்பையும் சுதந்திரத்தையும் பேணி முன்செல்ல வேண்டியுள்ளது.இவற்றோடு ஊடகப் பணியாளர்கள் பலர் குறைந்த வருவாய்க்கு மத்தியிலும் நிறைவான சேவையை வழங்கிவருகின்றமை அவர்கள் ஊடகத்துறையின் மீது காட்டும் அதீத ஈடுபாட்டை புலப்படுத்துவதாக உள்ளது.
இதேவேளை சுதந்திரமும் பன்முகத்தன்மையும், சுயாதீனமும் கொண்ட ஊடகத்துறைக்கான சட்ட அடிப்படைகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.தகவல்கள் பெருமளவுக்கு கையாளப்படவேண்டிய காலகட்டத்தில் முக்கியமாக இளையோரை முக்கிய திறன்களின் அபிவிருத்தியிலும் ஊடகத்துறை சார்ந்த அறிவூட்டலிலும் ஈடுபடுத்தும் வகையில் நாம் செயற்படுதல் வேண்டும்.உலக பத்திரிகை சுதந்திர தினம் ஊடக சுதந்திரத்தை முன்னெடுக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஆகும்.
எனவே சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கேற்ப ஒன்லைன் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை முன்னெடுக்கும் ஐ.நா. வின் முயற்சிகளில் அரசுகள், துறை சார்ந்த ஊடக அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் இணைந்து செயற்பட வேண்டும்.இது தனிநபர் உரிமைகளுக்கான ஒரு தூணாகவும், ஆரோக்கியமான சமூகங்களுக்கான அத்திபாரமாகவும் சமூகமாற்றத்திற்கான உந்துசக்தியாகவும் உள்ளது என்று முன்னாள் ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை இங்கு மீண்டும் நினைவுகூறத்தக்கதாகும்.