தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் (15) நிறைவடையவுள்ளது. இதனால், ஆணைக்குழுவின் இறுதிக் கூட்டம் இன்று (14) நடாத்தப்பட்டது.

பதவிக்காலம் நாளை முடிவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்களே பணிகளைத் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

கடந்த 2023 மே 15ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு, அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றது.

2022 அக்டோபர் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன.

அதில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் ஒன்றாகும்.

இலங்கை பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான பரந்த அளவிலான மேற்பார்வை மற்றும் அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

சுயாதீன ஆணைக்குழுவாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு முதன்முதலில் 2002ஆம் ஆண்டு 17-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.