அனேகமானவர்கள் தந்தை செல்வா சாகும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”என கூறி கடவுளிடம் தமிழர்களை பாராம் கொடுத்துவிட்டே மரணித்தார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பல வருடங் களாக பரப்புவது தவறானகருத்தாகும்.
அப்படி அவர்கூறியது 1970, காலப்பகுதியில் அதாவது அவர் மரணிப்பதற்கு 07, வருடங்களுக்கு முன்பு அதை கூறினார். ஆனால் அவர் சாவதற்கு சரியாக 11, மாதம் 12, நாட்களுக்கு முன்பு கூறியதுதான் வட்டுக்கோட்டை தீர்மா னம்.
தந்தை செல்வா கடவுளிடம் ஈழத்தமிழர்களை கையளித்துவிட்டு இறக்கவில்லை. அவர் ஈழத்திழினத்தை “எழுச்சியுடன் போராடுங்கள்” என்று கூறிவிட்டே மரணித் தார் அந்த எழுச்சிக்கான தீர்மானமாகவே வட்டுக் கோட்டை தீர்மானம் “சுதந்திர தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு” என்பதை ஆணித்தரமாக 1976, மே,14, ல் தந்தை செல்வா கூறி தமிழ் மக்களை எழுச்சியுடன் போராட அழைத்துவிட்டே மரணித்தார். இந்த உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு எதிர்வரும் 2026, மே,14, ம் திகதியுடன் ஐம்பதாண்டு பொன்விழா நாளா கும். இந்த ஐம்பதாண்டில் பல தடைகள், தாமதங்கள், சோத னைகள், சாதனைகள், வேதனைகள், இழப்புக்கள், தியா கங்கள், இனப்படுகொலைகள், எல்லாவற்றிக்கும் முகம் கொடுத்த எமதினத்தின் விடுதலையை நோக்கிய பயணம் சர்வதேசத்தை நோக்கிச்சென்றுள்ளது, தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தொகுதியிலு ள்ள பண்ணாகம் எனும் ஊரில் மெய்கண்டான் வித்தியாலய மைதானத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் மிகவும் தீர்க்கதரிசனமாக முன்மொழிந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம், “வட்டுக்கோட்டை தீர்மானம்” என அழைக்கப்படும். அந்த தீர்மானமானது இதுதான்.
இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறு பட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப் படுத்துகின்றது.
1972 இன் குடியரசு அரசியலமைப்பு; தமிழ் மக்க ளைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்க ளால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ள தென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறி விக்கின்றது.
தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது (அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக் கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப் படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்
தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.
(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ் வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்ட மொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.
இவ்வாறுதான் 1976 மே 14, ல் தேதியன்று தந்தை செல்வா மகாநாட்டு மேடையில் பேசி அமர்ந்தார். இந்த தீர்மானத்தை மூத்த தமிழ் அரசியல்வாதியும், வழக் கறிஞருமான மு. சிவசிதம்பரம் வழி மொழிந்து உரை யாற்றினார். இந்த தீர்மானம் நிறைவேற்றி சரியாக 11, மாதம்,12, நாட்களால் 1977, ஏப்ரல், 26, தந்தை செல்வா மரணித்தார்.
தந்தை செல்வா மரணித்து சரியாக 02, மாதம்,25, நாட்களால் இலங்கையின் 08, வது நாடாளுமன்ற தேர்தல் 1977, யூலை,21.ல் இடம்பெற்றது அதுதான் இலங்கையில் நடைபெற்ற தொகுதிமுறையிலான இறுதித்தேர்தல் இந்த பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வட கிழக்கு மக்களின் அங்கீகாரம் பெறும் நோக்கில் தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன்மை படுத்தி வடகிழக்கில் 24, தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டது எனினும் புத்தளத்தொகுதியில் வேட்பாளராக முன்மொழியப்பட்ட டாக்டர் ஐ. எம்.இலியாஸ் இறுதி நேரத்தில் சம்மதிக்காமையால் புத்தளம் தொகுதி கைவிடப்பட்டது.
ஏனைய 23, தொகுதிகளில் வேட்பாளர்களாக
1. காங்கேசன்துறை-அ.அமிர்தலிங்கம்•
2. யாழ்ப்பாணம்-வி.யோகேஸ்வரன்•
3. நல்லூர்- மு.சிவசிதம்பரம்•
4. ஊர்காவல்துறை – க.பொ.இரத்தினம்•
5. வட்டுக்கோட்டை- தா.திருநாவுக்கரசு•
6. கோப்பாய்- சி.கதிரவேற்பிள்ளை•
7. உடுவில்- மு.தர்மலிங்கம்•
8. உடுப்பிட்டி- த.இராசலிங்கம்•
9. பரித்தித்துரை- கே.துரைரெட்ணம்•
10. சாவகச்சேரி- வி.என்.நவரெட்ணம்•
11. கிளிநொச்சி- வீ.ஆனந்தசங்கரி•
12. முல்லைத்தீவு- எக்ஸ்.எம்.செல்லத்தம்பி•
13. மன்னார்- பி.ஏ.சூசைதாசன்•
14. வவுனியா- தா.சிவசிதம்பரம்•
15. திருகோணமலை-இரா.சம்மந்தன்•
16. மட்டக்களப்பு இரட்டை தொகுதி – செ.இராசதுரை•
17. மட்டக்களப்பு மற்றவர்- காசி ஆனந்தன்
18. பட்டிருப்பு, பூ.கணேசலிங்கம்•
19. பொத்துவில்- எம். கனகரெத்தினம்•
20. கல்குடா- எஸ் .சம்மந்தமூர்த்தி.
21. கல்முனை- ஏ. எம். சம்சுதீன்
22. சம்மாந்துறை- எச். எல். எம். ஹாசீம்
23. மூதூர்,எஸ். எம். மக்கீன்
ஆகிய 23, வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். இதில் கல்முனை, சம்மாந்துறை,மூதூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள் வெற்றிபெறவில்லை. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட காசி ஆனந்தன் வெற்றி பெறவில்லை.
கல்குடா தொகுதியில் வேட்பாளர் சம்மந்தமூர்த்தி வெற்றிபெறவில்லை. அங்கு ஐக்கிய தேசிய கட்சி கே.டபுள்யூ. தேவநாயகம் 560, மேலதிகவாக்குகளால் வெற்றி யீட்டினார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை கல்குடாவில் தோல் வியடைய வைத்தமையால் கே.டபுள்யூ தேவநாயகத்துக்கு ஜே ஆர் ஜெயவர்தன நீதி அமைச்சர் பதவியை வழங்கி பாராட்டியதுடன் அவரைக்கொண்டே 1979, ல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றில் சமர்பிக்கவைத்து நிறை வேற்றினார் என்பது வரலாறு.
வடகிழக்கு மக்கள் 4,21,488 பேர் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கினர். 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் விடுதலை கூட்டணியில் தெரிவு செய்யப்பட்டு இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம் முதன் முதலாக எதிர்கட்சி தலை வரானார். இன்று 2026, மே,14, ல் 50, வருடங்கள் கடந்தும் அந்த ஆணை மீளப்பெறவில்லை அது தொடர்ந்தும் பொன்விழா காணும் நிலையில் எழுச்சி கொண்டு ஈழ விடுதலைப் போராட்டம் அகிம்சை போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறி 2009, மே,18, ல், போர் ஈழத்தில் மௌனிக்கப்பட்டு தற்போது இராஜதந்திர ரீதியாக முன்னகர் தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இன்னுமொரு ஆயுதப்போராட்டம் ஈழத்தமிழர்களு க்கு தேவையில்லை ஆனால் ஐம்பது ஆண்டு கடந்தும் ஈழத்தமிழினம் பூரண சுதந்திரத்திற்காக அனைத்துலக சமூகத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்வதுடன் வரலாறுகள் மறைக்கப் படக்கூடாது என்பதே உண்மை.
கடந்தகால வரலாறுகளையும் நிகழ்கால நிகழ்வு களையும் ஒப்பிட்டு, பகுப்பாய்வு செய்வது ஒரு முக்கிய அறிவார்ந்த செயல்பாடாகும். வரலாறு என்பது மனித இனம், நாகரிகம் மற்றும் சமூகங்கள் கடந்து வந்த பாதையை ஆவணப்படுத்துகிறது.



