ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் நோக்கில் 5 பேர் கொண்ட குழு ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் திடீரென காணாமல் போயு்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டைட்டானிக்’ கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது.
டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate). தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்,அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஓக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்ற டைட்டானிக் கப்பல்,
1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. அதில் பயணம் செய்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.