காலிமுகத்திடல் போராட்டப் பின்னடைவும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் தடுமாறல்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 193

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 193

காலிமுகத்திடல் போராட்டப் பின்னடைவும்
ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் தடுமாறல்களும்

இன்றைய சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தன்னை அரசியலுக்குப் பழக்கப்படுத்திய தனது உறவினரான சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தனா 1978-79 களில் அரச பயங்கரவாதத்திற்கு அரசியலமைப்புச் சட்டத் தகுதி அளித்து கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் எரிக்கவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உருவாக்கி, அவசரகாலநிலைப் பிரகடனத்தின் மூலம் படைகளுக்கு மட்டற்ற அதிகாரம் அளித்து, படைப்பலத்தைக் கையாண்டு, ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான நடைமுறை அரசின் வளர்ச்சியை ஒடுக்கினாரோ, அதே படைப்பல வழியில் இனங்காணக் கூடிய அச்சத்தை நாளாந்த வாழ்வாக்கி, அரசியல் பணிவைப் பெறும் முயற்சியால் இன்று சிங்கள மக்களின் காலிமுகத் திடல் மக்கள் போராட்டத்தைப் பின்னடையச் செய்துள்ளார்.

சிறிலங்கா என்னும் 22.05.1972ஆம் திகதியச் சிங்கள பௌத்த குடியரசுப் பிரகடனத்தால் தங்களின் இறைமை மறுக்கப்பட்டு அதற்காகப் போராடுவதற்காக, இனஅழிப்பால் 50 ஆண்டுகளாக தினம் தினம் பாதிப்புற்றுவரும் இலங்கையின் மற்றொரு தேச இனமாகிய ஈழத்தமிழர்களின் உள்ளகத் தன்னாட்சி உரிமைகளை மீளவும் சீர் செய்வது குறித்தோ, அல்லது இலங்கையின் குடிமக்களாகவுள்ள முஸ்லீம், மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்தோ, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் கூட இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை. மாற்றுச் செயற்றிட்டங்களை முன்வைக்கவுமில்லை. வெறுமனே பொருளாதாரப் பின்னடைவுக்கு ராசபக்ச குடும்பம் காரணம் என்ற அடிப்படையில் ஆட்சி மாற்றத்தையே முன்வைத்தனர். ஆனால் சிங்கள பௌத்த மொழிவெறி இனவெறி மதவெறி ஆட்சிமுறைமை இலங்கையின் தேச மக்களான சிங்கள தமிழ் மக்களும் குடிமக்களான முஸ்லீம், மலையக மக்களும், சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரத்துடன், எங்கள் நாடென்ற ஒருமைப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்வதற்கான அரசியல் முறைமையைச் சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மறுப்பதே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான முதல் காரணம் என்பதைக் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இதுவரை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. அனுதாபங்கள் தெரிவிப்பதல்ல உண்மையான மாற்றம். காரணங்களைக் கண்டறிந்து தீர்வுக்கு வழிசெய்வதே உண்மையான மாற்றம். இதனைக் காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் செய்யாததே, காலிமுகத்திடல் போராட்டம் இலங்கை மக்கள் முழுப்பேருக்குமான மக்கள் போராட்டமாக இதுவரை வளர்ச்சி அடையாமைக்குக் காரணியாகி, இன்று முன்னிருந்த பலம் இன்றி பின்னடையக் காரணமாகிறது. இது இலங்கை மக்களுக்கான மாற்றுத் தலைமைத்துவம் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் தளர்த்தியுள்ளது.

இந்நிலையில் இனியாவது ஈழத்தமிழ் மக்கள் குறித்த உண்மைகளை காலிமுகத்திடல் போரட்டக்காரர்கள் அறிந்து, ஈழத்தமிழர் தேவைகளையும் உள்ளடக்கிய நிலையில் தமது போராட்டத்தை முன்னெடுத்தாலே ரணிலின் ஆட்சியால் ஏற்படும் ஆபத்துக்களைத் தடுக்கலாம். இதற்குக் காலிமுகத்திடல் போராட்டக்காரருடன் பேசி ஏற்பன செய்ய வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இன்றைய பாராளுமன்றத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். சட்டம் எவ்வளவு தெரிந்தாலும் திட்டங்கள் ஆயிரம் போட்டாலும் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்கிற சாதாரண ஈழத்தமிழனின் உரிமைப்பிரகடனமே உண்மையென, உண்மையைப் பேசாத வரை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளால் என்றுமே ஈழத்தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்களிடை தெளிவுகளை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மை. இது இன்றைய சிறிலங்கா நரித்தந்திர அரசத்தலைவர் ரணிலுக்கும் அவரின் பள்ளிப்பருவம் முதலான நண்பர் இன்றைய சிறிலங்காவின் பிரதமர் தினேஸ் குணவர்த்தனாவுக்கும் நன்கு தெரியும். இதனால் இந்த இடைக்கால அரசாங்கத்தை அனைத்துக்கட்சி அரசாங்கமென உலகை மயக்கி நிதியுதவிகளையும் கடன்களையும் பெற எடுக்கும் முயற்சிகளுக்குத் துணைபோகும் தமிழ் அரசியல்வாதிகளை இந்த அனைத்துக்கட்சி அரசாங்கத்தின் அங்கங்களாக்கி, தாங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையைச் சிறுபான்மையினர் பிரச்சினை என்ற அடிப்படையில் சிறுசலுகைகள் மூலம் தீர்க்க எடுக்கும் முயற்சிகளை ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கான தீர்வாக மேடையேற்றுவது இந்த இருவரதும் உடனடித் திட்டமாக உள்ளது. இதனைத் தடுக்க ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினையின் இன்றைய தேவைகளை இலங்கை மக்கள் அனைவரும் அறிந்து, அரசுக்கு எதிராக சனநாயகவழிகளில் ஒருங்கிணைதலே மிகச்சிறந்த வழியாக அமையும். ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ மலையகத்தினருக்கோ எதிரான ஒன்றல்ல. மறுக்கப்பட்ட இறைமையினை ஈழத்தமிழ் மக்கள் மீளப் பெறல் பிரிவினையல்ல. இது கருத்தளவில் ஏற்கப்பட்டாலே மற்றவர்களுடன் எந்த முறைமையில் சேர்ந்து செயற்படலாம் என்பதை ஈழமக்களால் தீர்மானிக்க முடியும். ஈழ மக்கள் தாம் சிறுபான்மையினமல்ல தேச இனம் என்பதை மற்றைய இலங்கையருக்குத் தெளிவாக்கும் அளவிலேயே சலுகைகளுக்கல்ல உரிமைகளுக்கே ஈழத்தமிழர்கள் போராடுகின்றார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெளிவாகும். இந்த ஈழத்தமிழரின் போராடும் உரிமை அனைவராலும் ஏற்கப்பட்டாலே நாட்டினர் என்ற வகையில் நாட்டைக் காக்க மனமுவந்த பங்களிப்புக்கள், முதலீடுகள் ஈழத்தமிழர்களால் நடைமுறைச் சாத்தியமாகும் என்பதைத் தெளிவாக்க வேண்டிய நேரமிது. மேலும் சிறிலங்காஅரசாங்கம் தனது இனஅழிப்பை சிறிலங்காவின் தேசியப்பாதுகாப்புக்கான நடவடிக்கையென்று நியாயப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்களைப் பயங்கரவாதம் என திரிபுவாதம் செய்கிறது என்பதை இலங்கை மக்களுக்குத் தெளிவாக்கிப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவித்தல் என்பது அனைவருக்கம் அரசபயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும் முயற்சியாகுமென்பதைத் தெளிவாக்கல் அவசியம். ஈழத்தமிழரை இனஅழிப்பு செய்தவர்களுக்கான தண்டனை நீதியும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான பரிகார நீதியும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலான அனைத்துலக விசாரணைகள் வழி வழங்கப்பட்டுச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுதலுக்கு இலங்கை மக்கள் அனைவரும் உழைத்தல், அவர்களது எதிர்காலச் சட்டப் பாதுகாப்புக்குமான உறுதியை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவாக்கல் வேண்டும். இந்த உண்மைகளை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் நேர்மையுடன் சிந்திக்கப் பேச எழுதப் பழகவேண்டும். இல்லையேல் தடுமாறி தடையாக நில்லாது பதவி விலகி இதனைச் செய்யக் கூடியவர்களுக்கு வழிவிட வேண்டும். இவை நடைமுறைச்சாத்தியமாகும் வரை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் நடைமுறைச் சாத்தியமாகாது, இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையும் தீராது என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

ஆசிரியர்

Tamil News

Leave a Reply