அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி இரத்து செய்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.



