செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணையை கோரும் பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாகவும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்ய பின்லாந்து அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இன்கா ஹொப்சு (Inka Hopsu) மற்றும் ஏவா பியோடெ (Eva Biaudet) ஆகியோர் எழுத்துமூலக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமது கேள்விகளில், ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 580 இற்கும் மேற்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் குழந்தைகளின் உடல்களும் உள்ளடங்குவதாகவும், பாடசாலைப் பைகள், பால் போத்தல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுடன், பரவலான போர்க்குற்றங்கள், சித்திரவதைகள் மற்றும் பொதுமக்கள் படுகொலைகள் இடம்பெற்றதாக வெளியான அறிக்கைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் மெதுவாக முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மழை மற்றும் வளப் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து ஏழு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அப்போது சர்வதேச கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் செப்டெம்பர் மாத வரைவு அறிக்கை இலங்கையை வலியுறுத்தியுள்ளதையும் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே வயதான பெற்றோர்களும் உறவினர்களும் உயிரிழந்து வருவது குறித்து பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இன்கா ஹொப்சு (Inka Hopsu) மற்றும் ஏவா பியோடெ (Eva Biaudet) ஆகியோர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ. மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்ய சுயாதீனமான பொறிமுறைகள் அவசரமாகத் தேவைப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நிதியுதவிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் உள்ளூர் ஆவணப்படுத்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தகவல் வழங்கிய பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உண்மையை அறிந்துகொள்வதுடன் நீதியையும் கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு பெப்ரவரியில் பின்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நிறுவப்பட்ட அரசியல் ஆலோசனைப் பொறிமுறை, மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதற்கும் முக்கிய வாய்ப்பாக அமைவதாக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.