ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள் | பி.மாணிக்கவாசகம்

இருள்

ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள்

சிங்கள பௌத்த தேசியவாதத்தில் ஊறியுள்ள பேரின அரசியல்வாதிகள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் மக்களின் அரசியல் அதிகார உரிமைகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். இதன் விளைவாகவே தமிழ் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தில் தனிநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தத் தனிநாட்டுக் கோரிக்கை தனித் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

ஆனால் சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்டு ஒத்துழையாமையாக வளர்ச்சியடைந்து பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வை எட்ட முயற்சித்த போதிலும் தமிழ் அரசியல் தலைவர்களினால் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை வென்றெடுக்க முடியமாற்போனது.

தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த அரசு இலங்கையை ஒரே நாடாகப் பிரகடனப்படுத்தியது. அதுவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரே நாடாகும் என்று நிலைப்பாட்டை வலியுறுத்தியது.

பிரிவினைவாத எதிர்ப்பும் ஒரே நாட்டு நிலைப்பாடும்

இந்தப் பின்னணியிலேயே ஈழக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து 30 வருட கால யுத்தத்தை 2009 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஈழக் கோரிக்கைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளின் பிரிவினை வாதத்தைத் அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள்  தடை செய்தனர்.

எந்தவொரு அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள் பிரிவினைவாதத்தை முன்வைக்க முடியாது என சட்ட ரீதியாக நிலைநாட்டியது. அத்துடன் எந்த நிலையிலாயினும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து பதவியைப் பொறுப் பேற்பதற்கான சத்தியப் பிரமாணம் செய்பவர்கள் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தைக் கோர மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே இலங்கை என்பது ஒரே நாடு என்ற நிலைப்பாடு நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஒரே நாடு என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இந்த முயற்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவியாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதியாகச் செயற்பட்டவர். செயற்படுபவர். சிங்கள பௌத்த தேசியவாதிகளில் முக்கியமானவராகத் திகழ்பவர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட இவரை நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார். அதன் பின்னரும் ஞானசார தேரர் தனது இனவாதப் போக்கினைக் கைவிடவில்லை. முன்னரைப் போன்ற தீவிரவாதியாகவே செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய சட்டங்களையும், முஸ்லிம்களின் சட்டங்களையும் இல்லாதொழித்து பௌத்த சிங்கள மக்களை முதன்மைப்படுத்தும் தன்மையிலான சட்டமாகவே ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோசத்தின் ஊடாகப் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறுபான்மை தேசிய இன மக்கள் கருதுகின்றனர்.

அதனை உறுதி செய்யும் வகையிலேயே பல்வேறு அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஞானசார தேரருடைய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது சிறுபான்மை இன மக்களை சட்டரீதியாக அதிகார வலு நிலையில் அடக்கி ஒடுக்குவதற்கான எத்தனிப்பு இடம்பெறுவதாக சிறுபான்மை இன மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இராணுவ மயமாகியுள்ள சிவில் நிர்வாகம்

இருள்யுத்தத்தை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வெற்றி வீரர்களாக எழுச்சி பெற்ற ராஜபக்ச சகோதரர்களின் – 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னரான இரண்டாம் கட்ட ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நடவடிக்கைகளே அதிகமாக முன்னெடுக்கப் பட்டு வருவதாக ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இந்தக் கருத்தைப் பொது அமைப்புக்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புக்களும் பிரதிபலித்திருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பிற்கு அந்த ஆட்சியாளர்களினால் ஊறு விளைவிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, இனவாதப் பிரசாரத்தை வலிமையாக முன்னெடுத்து ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் ஊடாகத் தமது ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டினார்கள். இதன் மூலம் பௌத்த சிங்கள மக்களினால் அமோக ஆதரவில் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இராணுவப் பின்னணியைக் கொண்டவராகவும், அரசியல் வழியிலான அனுபவ மற்றராகவும் கருதப்படுகின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இராணுவ முனைப்புப் பெற்ற ஓர் அரசாட்சியையே முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையிலேயே அவருடைய நடவடிக்கைகள் அமைந்தன.

அரசியல் சாணக்கியமிக்க வகையிலான கொள்கைகளை அவருடைய செயற்பாடுகளில் காண முடியவில்லை என அரசியல் நிபுணர்களும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களும் எடுத்துக் காட்டியிருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களின் தலைமைப் பதவிகளில் நியமித்தார்.

இருள் கோவிட் 19 நோய் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கான செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளி விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட முக்கிய தலைமைப் பதவிகளுக்குப் பணி ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரி களையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நியமித்தார். சிவில் நிர்வாகக் கட்டமைப்பை இராணுவ மயப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்தது.

முரண்பாடான நிலைமைகள்

இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் சீரான சிவில் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியும். ஊழல்கள் மோசடிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றெல்லாம் அவருடைய நடவடிக்கை சிலாகித்துப் பேசப்பட்டது. ஆனால் நிலைமைகள் தலைகீழாகவே மாறியிருக்கின்றன. இராணுவ அதிகாரிகளின் கீழான அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் என்ன நடக்கின்றது, உண்மையான நிலை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

அமைச்சக்களின் செயலாளர்களும், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் யாவரும் தங்களுக்கு ஏற்றவாறான கருத்துக்களையே வெளியிடுகின்றனர். ஜனாதிபதியின் கருத்துக்களும் இவற்றுக்கு மத்தியில் அவ்வப் போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தக் கருத்துக்களும் அமைச்சக்கள் திணைக்களங்களின் நிலைப் பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே காணப்படுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த பிரச்சினைகளில் ஜனாதிபதியின் கூற்று ஒன்றாக இருக்க நடைமுறை நடவடிக்கைகள் நேர்மாறானதாகவே அமைந்திருக்கின்றன.

குறிப்பாக டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள மருந்து, எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டு;ப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு கருத்தையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பற்றாக்குறையினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைத் தீர்க்கும் வகையில் ஜனாதிபதி விடுக்கின்ற உத்தரவுகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினை மாத்திரம் தீராமல் தொடர்ந்து கொண்;டிருப்பதைக் காண முடிகின்றது.

உதாரணமாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். ஆனால் இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத நடவடிக்கை என்று மின்சாரசபை அதிகாரிகள் கருத்து வெளியிடுகின்ற அதேவேளை, அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அதற்குப் பொறுப்பான பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அதேவேளை எந்தக் காரணத்தைக் கொண்டும் மின்சாரம் தடைப்படுத்தப்பட மாட்டாது என மின்விநியோகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறிய கருத்தும் வெளியாகி இருந்தது. அதேவேளை தடையின்றி மின்விநியோகம் செயற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தகவலும் வெளியாகியிருந்தது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி மின்வெட்டு நiமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் என்ன நடக்கின்றது. உண்மையில் நிர்வாகச் செயற்பாடுகள் யாருடைய கையில் இருக்கின்றது. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து குழப்பமடையவே நேரிட்டிருந்தது.

என்ன நடக்கின்றது?

அண்மையில் மின்விநியோகம் தடையின்றி செயற்படுத்தப்படும் என்றும், அதற்குத் தேவையான எரிபொருளைத் தட்டுப்பாடின்றி வழங்குமா

று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் எரிபொருள் போதிய அளவில் கிடைக்காத காரணத்தினால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருப்பதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய நாட்டில் இரண்டு மணித்தியாலங்களாக இருந்த மின்வெட்டு நாலரை மணித்தியாலங்களாகி இப்பொது ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப் படுத்தப்படுகின்றது. இது நாளொன்றுக்குப் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கின்ற நிலைமை குறித்த எதிர்வு கூறல்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் நாடு நாளொன்றின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு நேரம் இருளில் மூழ்கிக் கிடக்க நேர்ந்திருக்கின்றது. ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது, ஏன் இந்த நிலைமை, இதற்குத் தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்த உண்மையான நிலைமைகள் குறித்த வெளிப்படைத்தன்மைழயைக் காண முடியவில்லை.

எரிபொருள் தட்டுப்பாடும் மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் நடைபெறுகின்றது. எரிபொருளுக்கு ஏன் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டது, அது எப்போது தீர்க்கப்படும் என்பது குறித்த உண்மையான – வெளிப்படையான தகவல்கள் எதுவும் பொதுமக்களுக்குக் கிடையாது.

இதனால் மின்வெட்டு காரணமாக நாடு இருள்ல் மூழ்கியிருப்பதைப் போலவே முக்கியமான நெருக்கடியான விடயங்கள் பற்றிய உண்மையான நிலைமைகள் என்ன குறித்த வெளிப்படையான நிலைமைகளைக் காண முடியவில்லை.

இதனால் ஒரே நாட்டுக் கோஷத்தை முன்வைத்துள்ள இந்த ஆட்சியில் ஜனாதிபதியினதும், அவருடைய வழியிலான ஒற்றைப் போக்குடைய அரச நிர்வாகச் செயற்பாடும், மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த நிலைமையும், நாட்டில் என்ன நடக்கின்றது, நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது தெரியாத இருளான நிலைமையுமே காணப்படுகின்றது.

Tamil News