ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி விஷம் கலந்த தேநீரை அருந்தியதால், கோமா நிலைக்கு சென்றிருந்தார். இவரை மேலதிக சிகிச்சைக்காக ஜேர்மனி கொண்டு செல்வதற்கு ரஸ்ய அதிபர் புட்டின் அனுமதி வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் ரஸ்யாவில் விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நவல்னி உடல்நலக் குறைவிற்கு உள்ளானார். இதனால் விமானம் உடனே தரையிறக்கப்பட்டு, நவல்னி அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நவல்னியின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், அவர் எந்தவித உணவையும் உட்கொள்ளவில்லை எனவும், விமான நிலையத்தில் தேநீர் மட்டுமே அருந்தியதாகவும், அதில் அவருக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து நவல்னிக்கு மேலதிக சிகிச்சை அளிக்க ஜேர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று தனி விமானம் மூலம் ரஸ்ஸியாவிற்கு அனுப்பப்பட்டது.
நவல்னியை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அதிபர் விளாடிமிர் புட்டினிடம் நவல்னியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.
ரஸ்யாவில் நவல்னிக்கு உயிர் ஆபத்து இருப்பதால், விரைவில் ஜேர்மனி கொண்டு சென்று மேலதிக சிகிச்சை அளிக்கவிருப்பதாக நவல்னியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.