இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2020 குறித்த சிந்தனையில் தெளிவைப் பெறும் நோக்கில் ஜனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் இலங்கையின் சனநாயகத்தின் அரசியல் குறித்து எமக்கு பிரத்தியோகமாக வழங்கிய நேர்காணலை இங்கு தருகின்றோம்.
கேள்வி: ஜனநாயகத்தின் அரசியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர் என்ற முறையில், நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் இலங்கைத் தீவின் ஜனநாயகத்தின் அரசியலில் என்ன முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன?
பதில்: 2020 இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், சிறீலங்கா பொதுஜன பெரமுன என்னும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் புதிய எழுச்சிக் கட்சிக்கு, அறுபத்தெட்டு இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்றி தொண்ணூற்று மூன்று வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 59.09 வீதமான அவ்வாக்குகளுக்கான 145 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கிடைக்கச் செய்துள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள உறுதியான அரசாங்கம் ஒன்றை, மகிந்த ராஜபக்சாவை பிரதமராகக் கொண்ட சிறீலங்காப் பொதுஜன பெரமுனை நிறுவிட இத்தேர்தல் வழிவகுத்துள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபாய எந்த நோக்கத்திற்காக இத்தேர்தலை நடத்தினாரோ அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் இந்த ஜனநாயக அரசியல், இலங்கையின் தேசிய இனமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களை வெறுமனே சமூகம் என வரைவுபடுத்தி, அவர்கள் உலகின் குடிகள் என்ற முறையில் உலகின் இனத்துவச் சிறுபான்மைச் சட்டங்காளால் உள்ளக தன்னாட்சி உரிமையை மறுக்கும் சிறீலங்காவின் ஆட்சியில் இருந்து தங்களைப் பாதுகாக்குமாறு கோரும் அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை மறுக்கும் செயற்பாடுகளை ராஜபக்ச சகோதரர்கள் குடும்ப அரசு எடுப்பதற்கு உதவியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களின் சமூக இருப்பு, இந்தத் தேர்தல் முடிவால் உடனடி ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஈழத்தமிழர்களின் சமூக இருப்பைப் பாதுகாத்தல் என்னும் அதிமுக்கிய பணியினை உடன் செய்யத் தொடங்குங்கள் என்னும் அழைப்பைப் புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் இத்தேர்தல் முடிவுகள் விடுத்துள்ளன.
இந்த அழைப்பை உலகத் தமிழினம் செயற்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழினத்தின் சமூக இருப்பு மட்டுமல்ல அனைத்து உரிமைகளும் மீட்கப்படும் என்பதை ஈழத்தமிழர்கள் ஏற்று தேசங்கடந்துறை மக்களாக உலகின் சக்தி படைத்த நாடுகளின் ஆற்றலுள்ள குடிகளாக உள்ள உலகத் தமிழர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். இதற்கு உதவுவதை இலக்காகக் கொண்டே ஈழத்தமிழர் உரிமைகள் மையமும் அதன் வார இதழான இலக்கு மின்னிதழும் இலக்கு சமுகவலைத்தளமும் செயலாற்றி வருகின்றன.
கேள்வி: நீங்கள் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டதாரி என்ற வகையில், அரசியல் அதிகாரப் பகிர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை – இனப்பிரச்சினை என்பதே சிறீலங்காவில் இல்லை என்ற சிறீலங்கா அரசின் அறிவிப்பின் பின்னணியில், 2009இல் துப்பாக்கிகள் மௌனித்த பின்னர் சனநாயகத்தின் வழியாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை அடைதல் எனத் தொடங்கியுள்ள, நீண்ட பயணம் எத்தகைய தடைகளைச் சந்திக்க வேண்டி வரும் இவற்றை எவ்விதம் அவர்கள் மேற்கொள்ளலாம் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: ஒரு இனம், ஒருநாடு, ஒரு மதக் கொள்கை அரசின் கொள்கையாக்கப்படும் போது, ஈழத்தமிழர்களின் தங்களுக்கான அரசினை உருவாக்கல் என்னும் உள்ளக, தன்னாட்சி உரிமை இழப்பு உலகுக்குத் தெளிவாக உணர்த்தப்படும். இதுவே ஈழத்தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் தன்மைக்கு அவர்களை இட்டுச் செல்லும். ஆனால் இதனை தாயகத்தில் தெரிவாகியுள்ள தமிழர் பிரதிநிதிகள் சரியான அரசியல் மொழியில் உறுதியுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் தம் அரசியல் கடமையைச் செய்ய வேண்டும். கடந்த பதினொரு ஆண்டுகளாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்த தவறினை அதாவது சிறீலங்கா அரசின் முகவர்களாக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை மலினப்படுத்திய வேலையைச் செய்யாமல் இருந்தாலே ஈழத்தமிழர்களின் அரசியல் எதார்த்தத்தை உலகு தெளிவாகக் கண்டு கொள்ளும்.
சிங்களத் தேசியத்திற்கு எவ்வாறு இது எம் நாடு, எம் இனம், எமது ஆட்சி எனச் சொல்வதற்கு உரிமையுள்ளதோ அதனைப் போலவே தமிழீழத் தேசியத்திற்கும் உரிமை உண்டு. 1956இல் சிங்களம் தன் மொழியே நாட்டின் அரசகரும மொழி என்ற பொழுதே தமிழர்களும் தமிழே எங்கள் பகுதியின் ஆட்சி மொழி என்றனர். இது மொழி வெறியல்ல எதிர் வினையாற்றல். அவ்வாறே சிங்களம் வடக்கு கிழக்கு உங்கள் இடம் போங்கள் என்று தமிழர்களை இனஅழிப்புச் செய்து விரட்டி அடித்த பொழுதே இது எங்கள் சொந்த மண் தமிழீழம் என்றனர் தமிழர்கள்.
இது பிரிவினையல்ல, ஈழத்தமிழர்களின் தேச மீள் உருவாக்கம். அவ்வாறே இன்றைய அரசு ஈழத்தமிழர்களை இனம் அல்ல சமுதாயம் என்கிற பொழுது ஈழத்தமிழர்கள் நாம் சிறீலங்காவின் மக்களல்ல நாடற்ற தேசஇனம் எங்கள் தாயகத்தில் எங்களை தன்மானத்துடன் வாழவிடுங்கள் எனத் தங்களின் அரசியல் உரிமைகளை சனநாயகத்தின் வழியில் மீட்டெடுக்கும் நீண்ட பயணத்தை விரைவில் அடைய முடியும்.
கேள்வி: அனைத்துலக மன்றத்தின் ஆணையகம் வெறும் பேச்சு மேடையே, அதனைப் பற்றி எமக்குக் கவலையில்லை பாதுகாப்புச் சபையே பலமானது என இன்றைய நீதி அமைச்சர் பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை அவர்கள் அடைய உலகநாடுகள் மற்றும் உலக அமைப்புக்கள் உதவுவதற்கு உலகத்தமிழர்கள் என்ன வழிகளில் அழுத்தங்களைப் பயன்படுத்தலாம்?
பதில்: மக்களின் நலனில் அக்கறை காட்டாது படைபல வல்லாண்மையால் மக்களை அடக்கி ஆளுபவர்கள் உலக மன்றங்களையோ அவற்றின் செயற்பாட்டு முறைமைகளையோ அலட்சியம் செய்து உலக வல்லாண்மைகளின் மேலாண்மைகளின் உறவால் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைப்பர் என்பதற்கு நீதி அமைச்சரின் உரை சான்று.
இது ஒரு பதவிசார் அதிகாரக் கூட்டுறவு. பதவிசார் அதிகாரங்கள் என்றுமே நிலைத்ததில்லை. எனவே உலக மன்றத்தின் மனித உரிமை ஆணையகத்துக்கு தமிழர்கள் தொடர்ந்து தங்கள் உண்மை நிலைகளை எடுத்துரைப்பது அவசியம். உலக மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையகம், பொதுச்சபைக்கு ஒரு தீர்மானத்தை வாக்கெடுப்புக்குக் கொண்டு சென்றால், அதனைப் பாதுகாப்புச் சபையால் தடுக்க முடியாது என்ற உண்மை சிறீலங்காவின் நீதி அமைச்சருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் நீதிக்காகப் போராடும் ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழினத்திற்கும் நன்கு தெரியும்.
உலக மன்றத்தின் மனித உரிமை ஆணையகத்தின் பொறுப்புள்ள அதிகாரிகள் அனைவருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பெற்ற இனஅழிப்புக்கள் முதல் இன்று வரை தொடரும் மனித உரிமை மீறல்கள் வரை அனைத்தும் சான்றாதாரங்களுடன் தெரியும் என்பதனாலேயே பொறுப்புக் கூறத் திராணியற்ற சிறீலங்கா, அதன் நல்லிணக்க பொறுப்புக் கூறல் வழிகாட்டலில் இருந்து விலகியது. இதன் மூலம் சிறீலங்கா தான் நீதியைச் சந்திக்க எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தி விட்டது.
1970களில் பாராளுமன்றத்தில் கூட்டுப் பெரும்பான்மையினால் சிறீலங்கா சுதந்திரக்கட்சி நாட்டைப் பிரித்தானியாவின் மாட்சிமை தங்கிய மகாராணி அவர்களின் வழிகாட்டல் தலைமையில் இருந்து பிரித்து உலகின்மிக மோசமான மனித உரிமை வன்முறைகளின் களமாக மாற்றியது போலவே 2020 தேர்தலில் கிடைத்துள்ள அதீதிப் பெரும்பான்மை மூலம் இன்றைய ஆட்சியாளர்கள் சிறீலங்காவை உலகில் இருந்து தனிமைப்படுத்தி, தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கூட மிகவும் சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த வாழ்வை உருவாக்கப் போகின்றார்கள்.
கேள்வி: இன்றைய சூழலில் ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கு தாயக, புலம்பெயர் உறவுகள் வழி எவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்கலாம்?
பதில்: புலத்துத் தமிழர்களுக்கு மற்றைய புலம்பெயர்ந்த மக்களுக்கு இல்லாத மிகப்பெரிய இயல்பு ஒன்று உண்டு. அதாவது பொதுவாகப் புலப்பெயர்வுகளில் புகலிட நாட்டுடனும் தாயகத்துடனும்தான் இருவழித் தொடர்புகள் இருக்கும். ஆனால் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வில் தாயக – புகலிட – தமிழர் வாழும் உலகநாடுகள் என முப்பரிமாணத் தொடர்பு ஒன்று உண்டு. இது தமிழர்களின் தேசங்கடந்துறை தன்மையின் மிகப்பெரிய ஆற்றல்.
இந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி உலகத் தமிழர்களாக அவரவர் நாட்டின் குடிமக்களாக அந்த அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வாழுகின்ற அதே நேரத்தில் உலகத் தமிழர்கள் என்ற பலம்பொருந்திய கட்டமைப்பின் கட்டற்ற சக்தி கொண்டு எங்கள் தமிழ் மக்களின் வறுமைக்கும் அறியாமைக்கும் எதிர்வினையை எம்மால் ஆற்றிட முடியும்.
உலகத் தமிழினத்தின் அறிவுப் பலமும் பொருளாதாரப் பலமும் ஈழத்தமிழர்களுடன் என்றும் உள்ள பேராற்றல். ஆகையால் இதனை உணர்ந்து ஈழத்தமிழர்களையும் அவர்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளையும் இனி யாராலும் அழிக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் வாழ வேண்டும். அதற்குப் புலத்துத் தமிழர்கள் ஒற்றுமையுடன் உதவ வேண்டும்.
உலகத் தமிழினத்தின் இளம் தலைமுறையினர் உலகெங்கும் என்றுமில்லாதவாறு ஈழத்தமிழினத்தின் வரலாற்றையும் தேவைகளையும் அறிவதில் காட்டி வரும் பேரரார்வம், தமிழினத்தன்மை உள்ள வரை உலகத் தமிழினம் ஈழத்தமிழினத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்கிற உறுதியையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் மட்டும் முடக்கப்படக் கூடிய ஒரு இனம் இல்லை என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியதே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அளப்பரிய துன்பங்களையும் கடந்த பெருவெற்றி என்பதையும் இவ்விடத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.
வாழும் நாடுகளில் எல்லாம் ஈழத்தமிழர்களை நன்கறிந்து நிற்கும் உலகிற்கு முன்னால், இனியும் அவர்களின் உரிமைகள் மீட்கும் பணிகளைச் சிறீலங்கா பயங்கரவாதம் எனத் திரிபுவாதம் செய்து கொச்சைப்படுத்த முடியாது என்பதையுத் இவ்விடத்தில் சுட்டிக்காட்டி, ஒரு இனம், ஒரு நாடு, ஒரு மொழிக் கொள்கையைக் கைவிட்டு ஒரு தீவுக்குள் இரு அரசுக்களின் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மக்கள் காலனித்துவ பிரித்தானிய அரசால் ஒற்றையாட்சிக்குள் உள்ளாக்கப்பட்ட தொடர்ச்சியில் வாழ்கின்றார்கள் என்பதைச் சிறீலங்கா உணர்ந்து, தமிழர்களின் இனமானத்துடன் அவர்களை வாழவிட்டுச் செயற்பட்டால் அதுவே இலங்கை இவ்வுலகின் சொர்க்கம் என்ற தன் பழைய புகழை மீளவும் புதுப்பிக்கும்.