ஈழப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழமக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

2021ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை நாட் சிந்தனை

11.07.2021 உலக மக்கள் தொகை நாள். மனிதக் கருவளத்தின் ஊற்று பெண்கள் என்பதனால்,   மக்கள் தொகை என்றாலே பெண்கள் முக்கியத்துவம் பெறுவர்.

கோவிட் – 19 கால உலகில் பெண்களுக்கான, அவர்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிவார்ந்த ஆய்வுகள் வழி ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது.

இதன் அடிப்படையில் பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை இவ்வாண்டு அனைத்துலக மக்கள் தொகை நாளின் மையக் கருவாகின்றது.

இந்நிலையில் ஈழப் பெண்களின் உடலின் தன்னாட்சி உரிமை ஈழ மக்களின் அரசியல் உரிமையின் மூலக்கல்லாக உள்ளது என்ற உண்மையையும் நாம் உலகுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு உள்ளவர்களாக உள்ளோம்.

ஈழத் தமிழர்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகள் உடைய  ஆக்க சக்தியாக ஈழத் தமிழ்ப் பெண்கள் உள்ளதாலேயே ஈழத் தமிழ்ப் பெண்களை இன அழிப்புக்கு உள்ளாக்கியும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கியும் ஈழத் தமிழர்களுடைய உறுதியை உருக்குலைக்கச் சிறீலங்கா திட்டமிட்ட வகையில் தனது படை பலத்தை ஈழத் தமிழ்ப் பெண்கள் மேல் தொடர்ச்சியாகப் பிரயோகித்து, அவர்களை அடக்கி ஆண்டு வருகிறது.

இந்நிலை மாற ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு அவர்களின் உடல் சார் தன்னாட்சியைப் பேணுவதற்கான அறிவூட்டல்களும் சக்தியளிப்புக்களும் அவசியம்.

உடல்சார் தன்னாட்சி  உரிமையென்றால் என்ன?

பெண்களுடைய உடலைக் குறித்த முடிவுகளையும், தெரிவுகளையும் அதன் அடிப்படையிலான எதிர்கால வாழ்வையும் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கே உள்ளது என்பதே உடல்சார் தன்னாட்சி உரிமை எனப்படுகிறது.

இந்த விடயத்தை ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கு இன்றும் அனுமதியாதிருப்பது மட்டுமல்ல வலுக் கட்டாயமாக அவர்களின் இந்த உரிமையை வன்முறைப்படுத்தல் மூலம் தங்களுக்கான குடும்ப சமூக மேலாண்மைகளை உறுதிப் படுத்தவும் செய்கின்றனர்.

‘மரபு போற்றல்’ எனத் தமிழ்ப்பெண்களின்  உடல்மீதான உரிமையை மறுத்தல்

தமிழர்களின் சமய பண்பாட்டுக் குடும்ப மரபுகள், பழக்க வழக்கங்கள் தமிழ்ப் பெண்களுடைய உடல்சார் தன்னாட்சியை இன்றும்  பாதிப்படையச் செய்கின்றன என்பதை அனைத்துலக மக்கள் தொகை நாளான இன்று நாம் சிந்திப்பது அவசியம்.

நாளாந்த வாழ்வில் தமிழ்ப் பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை மறுப்பு பல நிலைகளில் பல வழிகளில் தொடர் கதையாக தமிழர் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெண் தலைமைத்துவக் குடும்ப நிலையை சமூக விலக்குக்கு உரிய ஒன்றாக்கி, தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களை சமூக விலக்குச் செய்வது இன்றும் தமிழரிடை பெருவழக்காக உள்ளது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் காலத்தின் தேவையாக உள்ளது

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை இன அழிப்புக்கள் மூலம் சிறீலங்கா ஒடுங்கியதன் விளைவாக இன்று ஈழத்தில் 85000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண் தலைமத்துவக் குடும்பங்களாக உள்ளன. இந்தப் பெண்களைக் குறித்த அக்கறைகளோ அல்லது இவர்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான ஒழுங்கு முறைகளோ சிறீலங்கா அரசால் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப் பட்டு வருகிறது.

அதே வேளை உலகத் தமிழர்களும் இந்தப் பெண் தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள பெண்களுடைய தன்மான இனமானத்தைப் பேணாதவர்களாக, இவர்களுடைய ஆற்றல்களை இவர்கள் முன்னெடுத்து வாழ்வதற்கான வழிமுறைகளை உரிய முறையில், குறுகிய காலத்துள் கட்டியெழுப்பாது உள்ளனர். மிகச் சிலரே மிகச் சிறிய முயற்சிகளை இப்பெண்கள் விடயத்தில் இதுவரை செய்துள்ளனர் என்பதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த அல்லது நிராகரித்த தமிழ்ப் பெண்களின் மறுமண உரிமைகளை உறுதிப் படுத்தும் சட்டங்களும், இவர்களைக் குறித்தும் இவர்களது நடத்தைகள் குறித்தும், உண்மைக்கு மாறான – தவறான பரப்புரைகளைச் செய்து இவர்களின் தன்மான வாழ்வுக்குக் களங்கத்தை ஏற்படுத்துபவர்களிடம் இருந்து இவர்களைப் பாதுகாப்பதற்கான  சட்டங்களும், தமிழர் சமுதாயத்திலோ அல்லது இவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொறுப்புள்ள அரசுகளிடமோ இல்லை.

இத்தகைய பெண்களைக் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தியும். அதிக நேரம் வேலை வாங்கியும், இவர்களது உழைப்பைச் சுரண்டுபவர்களிடம் இருந்து இவர்களைப் பாதுகாத்தல் என்பது, இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அத்துடன் இவர்களுடைய வேலைகளுக்கான பாதுகாப்புக்களையும் நட்ட ஈடுகள் பெறும் உரிமைகளையும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுதல், பாலியல் கிண்டல்கள் கேலிப் பேச்சுகளுக்கு உள்ளாகுதல் போன்ற குற்றச் செயல்களுகக்கான நீதி பெறும் முறைமைகளையும் உருவாக்குதல் இன்று மிக அவசியமானவைகளாக உள்ளன.

பெண்களின் உடல்மீதான தன்னாட்சி  உரிமையை மறுக்கும் மதச் சிந்தனைகள்     

ஆலயத்துள் மாதவிலக்குக் காலத்தில் நுழைவதே தெய்வக் குற்றம் என்னும் படுமுட்டாள் தனமான இந்துமதச் சிந்தனை வழியான தமிழரின் ஆணாதிக்கச் சிந்தனை இன்றும் தமிழரிடை சமய மரபு என்ற பெயரில் தொடர்கிறது. அதிலும் தமிழ்ப் பெண்களே இந்த பெண் உடல் மீதான தன்னாட்சி உரிமை பறிப்பைக் கடவுளுக்கு உரிய ஒன்று. அதனை மீறினால் தெய்வ சாபம் தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் வரும்  என்ற தவறான அச்சப்படுத்தலை ஏற்று, அதனை முன்னெடுப்பது வேதனையான ஒன்று. பெரும்பாலான தமிழர்களின் சிந்தனை உடல்சார் தன்னாட்சியைத் தமிழ்ப் பெண்களுக்கு ’ஆசுசம்’ என்னும் தீட்டு துடக்கு ஆசாரம் என்னும் முப்பரிமாணங்களில் இல்லா தொழிக்கின்றனர். ஆனால் சைவ சமயத்தின் முக்கியமான அருளாளராகிய திருமூலரால் அருளப்பட்டுப் பத்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருமந்திரம் அக்காலத்திலேயே ‘ஆசுசம்’ பார்த்து நடைபெறும் சமூக விலக்கை அறியாமையின் விளைவு என்று கண்டிக்கிறது.

ஆசூசம் ஆசுசம் என்பர் அறிவிலார்

ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்

ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்

ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆகுமே

ஏன ஆசுசம் என சமூக விலக்கு செய்பவர்கள் அறிவில்லாதவர்கள் மட்டுமல்ல, இவர்கள் ஆசுசம் என்று கூறினால் மனித உடம்பே ஆசுசம்தான் ஆகையால் மனிதன் எனப்படும் அனைவருமே சமூக விலக்குக்கு உரியவர்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள் என இந்தச் சாதி தீட்டு துடக்கு பார்ப்பதில் உள்ள அறியாமையைத் தெளிவாக்குகிறார். அதுமட்டுமல்ல, அறநெறி நடக்கும் சான்றோர், தத்துவம் உணர்ந்த ஞானிகள், இறைவனை வழிபடும் அடியார்கள், வேள்வி செய்யும் அந்தணர், ஞானமுள்ள அறிஞர்கள் ஆகியோர் தீட்டு என்பது இல்லை என்பதை உலகுக்கு அறிவித்து வாழ வேண்டியவர்கள் என்பதையும் தனது பின்வரும் திருமந்திரத்தால் வலியுறுத்து கின்றார்.

ஆசுசம் இல்லை அரு நியமத்தாருக்கு

ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவருக்கு

ஆசூசம் இல்லை அங்கி வளர்ப்போருக்கு

ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே

ஏன்பது தீட்டு என்னும் சமூக விலக்குச் செயலை அறிவுடையாரும், அருளுடையாரும் ஏற்க முடியாது என்பதை மிகத் தெளிவாக விளக்கிய திருமந்திரம். ஆனால் வட மொழியாக்கத்திலும் பார்ப்பனிய சிந்தனைகளிலும் சிந்தையிழந்து நிற்கும் தமிழர்கள் இன்றும் பெண்ணைப் பல வழிகளில் தீட்டு எனச் சமூக விலக்குச் செய்யும் ஆணாதிக்க மதவெறி வாழ்வால் ஒடுக்குகின்றனர். புலம்பதிந்து வாழும் தமிழர்களுடைய ஆலயங்களும் இதற்கு விலக்கல்ல. ஆனால் இங்கு சட்டப்படி பால்நிலைச் சமத்துவம் பேணப்பட வேண்டும். இதனை மீறுதல் கிரிமினல் குற்றச் செயலாகும். ஆயினும் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் கூட புலத்தில் உள்ள இந்து ஆலயங்களில் தங்களது பால்நிலைச் சமத்துவ மறுப்புக்குச் சட்டப் பாதுகாப்பைத் தேடவில்லை. இது பெண் அடிமைத்தனத்தை மதத்தின் பேரால் நியாயப்படுத்திக் கொள்ளும் தமிழ்ப் பெண்களின் கருத்தியல் குறைபாடாக உள்ளது. தாயகத்திலும், புலத்திலும் பெண்ணை தனிமனித வாழ்வான குடும்ப வாழ்விலும் பொது வாழ்வான சமுதாய வாழ்விலும் பால்நிலைச் சமத்துவத்துடன் ஏற்கா விட்டால் அதற்காகத் தனிமனித நிலையிலும் பொது நிலையிலும் சட்டப் பாதுகாப்புப் பெறும் வழிகாட்டல்களை வழங்கும் சமுக அமைப்புக்கள் தேவையாக உள்ளன. தமிழ் ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் தமிழர்களிடை கருத்தியல் தெளிவுகள் வலுப் பெறக் கூடிய நிகழ்ச்சிகளை செயற் திட்டங்களை உருவாக்கி, அலைவழி அவற்றை வழங்க வேண்டும்.

பெண் விடுதலைக்கு ஊடான  மண் விடுதலை முன்னெடுக்கப்படல்

இதனாலேயே தமிழ்ப் பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக விடுதலையை ஈழ மக்களின் அரசியல் உரிமைகளை மீளப் பெறும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூலக் கல்லாகத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் பலவழிகளில் சுட்டிக் காட்டப்பட்டு, பெண் விடுதலைக்கு ஊடான மண் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதை உலகம் நன்கு அறியும்.

2009இற்குப் பின்னரான காலத்தில் ஈழத் தமிழ்ப் பெண்களின் சுதந்திர வாழ்வு என்பது மீளவும் சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலையில் இவர்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமையைச் சிறீலங்கா திட்டமிட்ட முறையில் இழக்க வைத்து வருகிறது. கோவிட் 19 தொற்றுக்குப் பின்னரான இன்றைய காலத்தில் ஈழத் தமிழ்ப் பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை என்பது சிறீலங்காப் படைத் தலைமைகளின் கையில் உள்ள ஒன்றாக அரச நிர்வாகம் மாற்றப் பட்டுள்ளது.

இன்று அனைத்துலக மக்கள் தொகை நாளில், பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை குறித்த அக்கறைகளின் வழி கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தைக் கட்டியயெழுப்ப முனையும் உலக நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் ஈழத்தமிழ்ப் பெண்களுடைய இன்றைய நிலையை தனி நிலையிலும் பொது நிலையிலும் எடுத்துக் கூற வேண்டிய காலமாக இது அமைகிறது.

பெண் விடுதலை ஊடான மண் விடுதலை பெறப்படுதல் அவசியம் என்பதால், இன்றைய ஈழத் தமிழ்ப் பெண்களின் நாளாந்த வாழ்வுக்கான நிதிகளையும் அவர்கள் மதி வளங்களைப் பயன்படுத்தி அவர்கள் வாழ்வு வளம்  பெற உதவ வல்லதுமான செயற் திட்டங்களைத் தமிழர் சமூக அமைப்புக்கள் தாயகத்தில் உருவாக்க உதவிப், புலம் பதிந்து வாழும் தமிழர்களால் அதற்கான அறிவார்ந்த வழிகாட்டல்களும் நிதிவள உதவிகளும் அளிக்கப்பட்டாலே ஈழ மக்களின் விடுதலை வாழ்வு மட்டுமல்ல, ஈழத் தமிழ்ப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமையும் ஒருங்கே நிலை நாட்டப் பெறும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ஈழப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழமக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் - ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்