இன்றைய சிறீலங்காத் தலைமைகளின் அதி முக்கியமான பிரச்சினை, தாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நோக்கில் செய்த – செய்கிற, யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்குப் பொறுப்புக் கூறாமல், அனைத்துலக விசாரணைகளில் இருந்து தப்புவதற்கான ஆட்சி முறைமை ஒன்றையும், தங்களைப் பாதுகாக்க வல்ல வல்லாண்மை நாடொன்றின் பலத்தையும் ஏற்படுத்துதலாக உள்ளது. இந்த இரண்டையுமே அளிக்கக் கூடிய உறவாக சீன உறவு ராஜபக்ச குடும்பத்திற்கு அமைகிறது. அத்துடன் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறையே பொருளாதார முன்னேற்றத்துக்குச் சிறந்தது என, தங்களின் குடும்ப ஆட்சி முறைமையை எதிர்க்கும் சிறீலங்காவின் அனைத்துக் கட்சிகளையும் செயலிழக்க வைக்கவும் இந்த உறவு முக்கியமானதாகிறது.
இந்த இலக்குகளை அடைவதற்காக சிறீலங்கா, சீனாவின் பட்டுப் பாதைக்கான துறைமுகத் தீவாக, இருதரப்பு சாராத சீனத் தரப்புக்கு நன்மை அளிக்கும் ஒப்பந்தங்கள் வழிச் சிறீலங்காவைச் சீனாவுக்குக் கொடுத்துள்ளது. இதற்குக் கைமாறாகச் சீனாவின் நிதிவள, தொழில்வள உதவிகளை மட்டுமல்ல, தங்கள் ஆட்சியைப் பாதுகாக்கும் பாதுகாவலனாகவும் சீனாவை உலக நாடுகளினதும், உலக அமைப்புக்களதும் முன்னால் முன்னிறுத்தவும் ராஜபக்ச குடும்பம் முடிவெடுத்துச் செயற்பட்டு வருகிறது.
சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சிறீலங்காவின் இறைமையும், சட்ட அமுலாக்க அதிகாரங்களும் கூட அந்தப் பகுதியில் இருக்காது எனப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தின் மூலம் சீனாவுக்கு உத்தரவாதமளித்து, சீனாவின் நவகாலனித்துவ ஆட்சியைத் தாங்கள் விரும்பியே ஏற்பதாகச் சீனாவுக்குச் சிறீலங்கா நம்பிக்கை அளித்துள்ளது.
சீனா இதனைப் பயன்படுத்தி தனது தளமாக சிறீலங்காவை உறுதிப்படுத்திக் கொள்ளுகையில், 1962 இன் கியூபா பிரச்சினைக்குச் சமானமான பிரச்சினையாக இது மாறுமா என்கிற அச்சம் உலக மக்களிடை பலமாக உள்ளது. அதாவது 1962இல் கியூபாவுக்கு அமெரிக்காவால் நெருக்கடி நிலை ஏற்பட்ட வேளை, இரஸ்யாவின் அதிபராக இருந்த குருசோவ் அவர்கள் கியூபாவின் பாதுகாப்புக்கென இரஸ்யாவின் அணுவாயுதத் தளத்தைக் கியூபாவில் நிறுவினார். இது அமெரிக்காவுக்குத் தன்னுடைய படைபலத்தை வேவு பார்ப்பதற்கான இரஸ்யாவின் உத்தியெனப் பட்டதால், கியூபா நோக்கி வரும் இரஸ்யக் கப்பல்களை கடலில் தன்னுடைய கப்பல்களால் வழி மறித்தது. இந்த கெனடி – குருசேவ் முறுகல் நிலை அனைத்துலக அணு ஆயுதப் போராக மாறிவிடும் என்கிற அச்சத்தை அன்றைய உலகில் ஏற்படுத்தியது.
பின்னர் குருசேவ் தனது அணு ஆயுத தளமாக கியூபாவை மாற்றுவதை நிறுத்திய பின்னணியில் 1962இல் உலகம் அணுவாயுதப் போருக்கான அச்சத்தில் இருந்து விடுபட்டது. தற்போது சிறீலங்கா தன்னைச் சீனாவின் நவகாலனித்துவ நாடாக அனுமதித்ததின் வழி, இன்றைய உலகில் அமெரிக்காவை அணுவாயுத யுத்தத்தைச் சிறீலங்காவில் தொடங்கும் நிலையை ஏற்படுத்தி விடுமா என்கிற அச்சம் உலகில் தோன்றியுள்ளது.
இதனைச் சமாளிக்கும் நோக்கில் தங்களுக்குச் சாதகமான முறையில் இந்தியாவுடனான உறவிலும் அமெரிக்காவுடனான பிணைப்பிலும் தங்களை நிலை நிறுத்தும் முயற்சியை ராஜபக்ச சகோதரர்கள் வேகப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மூலமாக இந்தியாவே தங்கள் அருகிலுள்ள உறவு நாடெனப் போற்றி, அதனுடைய நிதிவள, மதிவள உதவிகளைச் சிறீலங்கா தாராளமாகப் பெறுகிறது.
அமெரிக்கக் குடியாக இன்றும் உள்ள பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக்கி, அமெரிக்காவினதும் மேற்கு உலகத்தினதும் வழிகாட்டலையும் தாங்கள் நடைமுறைப் படுத்த விரும்புவதாக இந்நாடுகளின் ஆதரவைப் பெற ராஜபக்ச குடும்பத்தினர் முயன்று வருகின்றனர்.
இந்த நுட்பமான அரசியல் காய் நகர்த்தல்களுடன் ஒரு கல்லில் இருமாங்காயாக தமிழகத்துடன் உள்ள பண்பாட்டுத் தொடர்பால் இந்திய மேலாதிக்கப் பகுதியாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் சீனத் தொழில் முயற்சிகளையும், வர்த்தக முயற்சிகளையும் சீனாவைக் கொண்டு வேகப்படுத்தி, தமிழர்களுக்குப் பொருளாதார வாழ்வின் தலைமையாகச் சீனாவை மாற்றுவதன் மூலம் சீன மேலாதிக்கப் பகுதியாக இப்பகுதியை மாற்ற சிறீலங்கா தொடங்கியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகள், இந்தியாவின் முக்கிய படைத் தளங்கள் பல உள்ள தென்னிந்தியக் கரைக்கு அண்மையில் இருப்பதால், இந்தப் பகுதிக் கட்டுப்பாட்டைச் சீனாவுக்கு வழங்குதல் இந்தியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் மாறுகிறது. இப்பகுதியில் வாழும் தமிழர்களைச் சீனா இந்தியப் பண்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என்னும் கண்ணோட்டத்தில் பகைமை வெறுப்புடன் நடாத்துவார்கள் என்ற அச்சம் தமிழர்களிடை உள்ளது.
இந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் மூலகாரணம் உலக நாடுகளும், இந்தியாவும் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை என்பது ஈழத் தமிழர்களின் மண் சார்ந்த அவர்களின் இறைமைப் பிரச்சினை என்ற உண்மையை மறந்து, அதனைச் சிறுபான்மையினப் பிரச்சினையாகப் பார்த்து, அவர்களுக்குரிய அரசியல் உரிமையை வழங்காது, அவர்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கச் சிறீலங்காவுக்கு உதவிமையே ஆகும். இதனால் இந்துமா கடலின் இப்பகுதிகளை அந்நியர்களிடம் இருந்து பாதுகாக்கும் ஆற்றலும், 2009இற்குப் பின்னர் இன்று வரை ஈழத் தமிழர்களுக்கு உரியதாக இல்லை.
எப்பொழுது ஈழத் தமிழர்களின் தாயக உரிமையும், அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையும் இந்தியாவாலும், உலக நாடுகளாலும் ஏற்கப்படுகின்றதோ அப்பொழுது தான் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா உட்பட்ட உலக நாடுகளுக்கும் பாதுகாப்பான அமைதி இந்துமா கடலின் இப்பகுதிகளில் ஏற்படும். இந்த உண்மைகளை இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டியது புலம் பதிந்து வாழும் ஈழத் தமிழர்களின் தலையாய பொறுப்பாக உள்ளது.