தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் ஜனாதிபதி பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்-விக்கிரமபாகு கருணாரத்ன

தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை,  இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள  கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில்  பதவியேற்றிருப்பது மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் கவனிக்க வேண்டியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

“இன்று இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தென்னிலங்கை தலைவர்களில் இனவாதமற்ற ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஒரு தலைவராகவும்  அவர் காணப்படுகின்றார்.

இத்தகைய அடிப்படை அம்சங்களை கருத்திற் கொண்டு நாம் 2015 இல் அவருடன்  இணைந்து இனவாதத்திற்கு எதிராகவும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை பலப்படுத்தவும் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.எம்முடன் இடதுசாரி அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

இதன்  விளைவாக 2015 ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் அமைதி புரட்சி ஏற்பட்டது. ஆனாலும் பேரினவாதம் மிக மூர்க்கத்தனத்துடன் செயற்பட்டு எதிர்ப்புரட்சியை உருவாக்கி 2019 இல் கோதாபய ராஜபகஷவை பதவியில் அமர்த்தினர். இன்று அவர் விரட்டப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு இனவாதத்தை போதித்தவர்கள் நல்லவர்கள் போல் நடமாடுகின்றனர்.

தென்னிலங்கை அரசியல் களத்தில் சம்பந்தப்படாமல் தனித்த பயணத்தில் தமிழ் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும் தமக்குள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இவர்கள் தயார் இல்லாத நிலையில் உள்ளனர். தமிழ் மக்களுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராட்ட வழிமுறைகளை தவிர்த்து வேறு ஒரு பாதையிருப்பதாக தெரியவில்லை. இவர்கள் போராட்ட செயற்பாடுகளிலும் நாட்டமில்லாத நிலையில் தென்னிலங்கையில் தமக்குரிய நேச சக்திகளுடன் இணைந்து போராடுவதிலும் தயக்கம் காட்டுகின்றனர். வெறும் ஊடக சந்திப்புக்கள் மூலம் தமிழ்  மக்களுக்கான விடுதலையை ஒரு போதும் எட்ட முடியாது.” என்றார்.

நன்றி – தினக்குரல்