அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு; மீளப்பெற வேண்டும் என சர்வதேச மனித  உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது!

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமே தவிர அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மீனாஷி கங்குலி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்பதிவில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் ஏற்கெனவே இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அந்த வலுவான கோரிக்கையே மிகவும் உயர்மட்டத்திலிருந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்தது.

எனவே அவர்களை வெற்றிகண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமே தவிர, விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காக அவசரகால நிலை பிரகடனத்தின் கீழான அதிகாரங்களைப் பயன்படுத்தி பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது” என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.