மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன்

இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விமானத்திலிருந்த பயணிகள் பலர் இந்த சம்பவத்தை தமது கைப்பேசிகளில் பதிவுசெய்து உடனடியாகவே பகிர்ந்திருந்தார்கள். விமானப் பயணிகளிலும் பலர் இந்தக் கைதை எதிர்த்தார்கள்.

ஆனால், எதனையிட்டும் கவலைப்படாமல் கைதான தனிஸ் அலி என்ற அந்த முன்னணி செயற்பாட்டாளர் விமானத்திலிருந்து சி.ஐ.டி. அதிகாரிகளால் குண்டுக்கட்டாக இறக்கப்பட்டார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து நிகழ்ச்சிகளைக் குழப்பியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த 23 ஆம் திகதிக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 20 காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் மூன்று செய்திகளை வெளிப்படுத்துகிறது. முதலாவது – போராட்டக்காரர்களை வேட்டையாடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தனது படைகளை களத்தில் இறக்கியுள்ளார் என்பது. இரண்டாவது – போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரது தகவல்கள்களும் முழுமையாக திரட்டப்பட்டு அவர்கள் சி.ஐ.டி.யினரால் பின்தொடரப்படுகின்றார்கள் என்பது. மூன்றாவது – இந்தப் போராட்டம் மேலும் தொடர்வதற்கு இடமளிப்பதில்லை என்பதில் ரணில் தெளிவாக இருக்கின்றார் என்பது.

ஜனநாயகத்தின் மீது – கருத்துச் சுதந்திரத்தின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தவும், தனது லிபரல் முகத்தைப் பாதுகாக்கவும் போராட்டத்தை நடத்துவதற்கு தடை இல்லை என ரணில் கூறிவருகின்றார். அதேவேளையில் அதற்கென ஒரு இடத்தை ஒதுக்கி – அதற்குள் அதனை முடக்கி பலவீனப்படுத்துவது அவரது உபாயமாகவுள்ளது. அதனால்தான் வீரமகாதேவி பூங்காவில் அதற்கென ஒரு இடம் ஒதுக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். ரணில் சொல்லும் இடத்துக்குச் சென்று தாம் போராடப்போவதில்லை என போராளிகள் அறிவித்துவிட்டார்கள்.

இதனைவிட மற்றொரு விடயமும் இதில் கவனிக்கத்தக்கது. முக்கிய செயற்பாட்டாளர்களைக் கைது செய்யும் போது வெறுமனே பிடிவிறாந்தை காண்பித்து அவர்களை கைது செய்வதற்குப் பதிலாக – அதனை ஒரு திறில் காட்சியாகச் செய்வதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த ரணில் முற்படுகின்றார்.

தனிஸ் அலியை கைது செய்யவேண்டுமானால் விமான நிலையத்துக்கு அவர் சென்றபோதே கைது செய்திருக்க முடியும். அல்லது வீட்டில் வைத்துக் கைது செய்திருக்கலாம். ஆனால் விமானத்தில் ஏறவிட்டு விமானம் புறப்படத் தயாரானபோது திடுதிடுப்பென அதில் ஏறி கைது செய்வது என்பது அதிகளவுக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் உத்தியாகும். மக்கள் மத்தியிலும் இது அச்சத்தை ஏற்படுத்துவதுடன், போராட்டங்களிலிருந்து அவர்களை விலகியிருக்கச்செய்யும்.

இதேபோன்ற ஒரு பாணியில்தான் அந்தோனி வெரங்க புஸ்பிக என்ற மற்றொரு முன்னணி செயற்பாட்டாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவர், கோட்டை பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டாரென சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என குற்றப் புலனாய்வுத் துறையின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி பின்னர்  தெரிவித்தார். அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் கோட்டை பொலிஸாரால் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

வடக்கு- கிழக்கில் செயற்பாட்டாளர்களையும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்குவதற்காக கையாண்ட அதே உபாயத்தைத்தான் ரணில் அரசாங்கம் இப்போது தென்பகுதிகளிலும் கையாள முற்படுகின்றது. இது மக்களைப் பீதியில் ஆழ்த்துவதையும், போராட்டங்களிலிருந்து மக்களை விலகிச்செல்லவைப்பதையும் இலக்காகக்கொண்ட ஒரு உபாயம். இதற்காக தென்பகுதியில் விசேட குழு ஒன்று தயாராக இருக்கின்றது.

இதில் மற்றொரு முக்கியமான விடயமும் கவனிக்கத்தக்கது. பாதுகாப்புத் தரப்பினர், அதிகாரிகள் இப்போது ரணிலுக்கு சார்பாக மாறிவிட்டார்கள் – அல்லது மாற்றப்பட்டுவிட்டார்கள்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரால் கூட நாட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. ஜூலை 12 இரவு அவர் டுபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்தபோது விமான நிலைய குடிவரவு – குடியகல்வுப் பகுதி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கோட்டாபய தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பிச்சென்றார். இதேநிலைமை பஸில் ராஜபக்சவுக்கும் அதே தினத்தில் ஏற்பட்டது.

ஆனால், இப்போது விமானத்தில் ஏறிய ஒரு முன்னணி போராட்டச் செயற்பாட்டாளரைக் கைது செய்வதற்காக சி.ஜ.டி.யினர் சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் அதற்கு ஒத்துழைத்தார்கள். பயணிகள் சிலர் கைதை எதிர்த்த போதிலும் அதனைத் தடுக்கும் அளவுக்கு அது பலமானதாக இருக்கவில்லை.

ஆக, படையினர், பொலிஸார், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரையும் ரணில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் வெற்றிபெற்றுவிட்டார் என்பதைத்தான் இது உணர்த்துகின்றது. கோட்டாபய ராஜபக்சவைப் பொறுத்தவரையில் அதிகாரிகள், படைத்தரப்பினர் அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அவரும் திட்டமிட்ட முறையில் போராட்டத்தை ஒடுக்குவதற்கான உபாயங்களை வகுக்கக்கூடிய நிதானத்தில் இருக்கவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டுப் பின்னணிப் பலமும் அவருக்கு இருக்கவில்லை. அதனால் அவர் ஒரு தற்காப்பு நிலையிலேயே இறுதிவரையில் இருந்தார்.

இறுதியில் நாட்டைவிட்டுத் தப்பியோடினால் போதும் என்ற நிலையில் அதற்கு கூட கோட்டா எந்தளவு சிரமத்தை எதிர்கொண்டார் என்பதை கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.

ரணிலைப்பொறுத்தவரை அவர் நிதானமாக காய்நகர்ததுகின்றார். மேற்கு நாடுகள் தனக்கு துணையாக இருக்கும் என்பது இதற்கான பலத்தை அவருக்குக்கொடுக்கின்றது. உள்நாட்டில் பாராளுமன்றத்தில் மொட்டுக்குள்ள பெரும்பான்மைதான் அவரது பலம்.

ரணில் ஜனாதிபதிப் பதவியில் அவர் இருக்கப்போவது இன்னும் இரண்டு வருடங்களும் சில மாதங்களும்தான். அதற்குள் பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவுக்காவது தீர்வை அவர் கொண்டுவந்தால் மட்டும் தான் அவருக்கும் அவரது கட்சிக்கும் எதிர்காலம் இருக்கும். பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்காவது தணிப்பதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். ‘ரணில் கோ ஹோம்’ என போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் பேரணிகளை நடத்தி போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தால் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. அதற்காகத்தான் அவர் இப்போது கைகளில் சவுக்கை எடுத்திருக்கின்றார்.

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றிரவே காலிமுகத்திடலில் பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பல பகுதிகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் துடைத்தெறியப்பட்டார்கள். இந்த நடவடிக்கைகூட ஒரு அராஜகமான – அதிகளவுக்குப் படைப் பலத்தைப் பயன்படுத்திய நடவடிக்கையாகத்தான் இருந்தது. அதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. ரணில் எதனையிட்டும் கவலைப்படவில்லை. கண்டனம் தெரிவித்த வெளிநாடுகளின் தூதுவர்களையே நேரில் அழைத்து தனது செயற்பாட்டை அவர் நியாயப்படுத்தினார்.

மேற்கு நாடுகள் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் இந்தப் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கருதுகின்றார். அதேவேளையில் ரணிலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஜனநாயகவாதி. லிபரல் போன்ற கருத்துக்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ளது. அதனையும் பாதுகாத்துக்கொண்டு போராட்டங்களையும் ஒடுக்குவதற்கான வியூகங்களைத்தான் அவர் வகுத்துக்கொண்டிருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்துக்கு புதன்கிழமை கிடைத்த அங்கீகாரம் இந்த வகையில் அவருக்கு பலம் சேர்க்கின்றது. ஆனால், பொருளாதாரப் பிரச்சினையை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் இந்தப் போராட்டங்களும் பலவீனமடையும். அவரது அரசியல் எதிர்காலமும் பிரகாசமாகும். அதனை அவர் சாதிப்பாரா?