தள்ளாடும் அரசியலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அறிவிப்பும்- பி.மாணிக்கவாசகம்

73 Views

நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழ் மக்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் தனது பக்கம் திருப்புவதற்கானதோர் அரசியல் நகர்வா அல்லது உண்மையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வல்லமையுடன் உளப்பூர்வமாகத் தெரிவித்த கருத்தா என்பது கேள்விக்குறிக்கு உரியது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகிய அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியல்ல. இரண்டரை வருடங்களுக்கு முன்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அதே மக்களால் எதிர்பாராத விதமாக நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் பிரதமராகவும், பின்னர் குறுகிய காலத்தில் பதில் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.

அதாவது, மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் – அவர்களே மக்களின் பிரதிநிதிகள் (Delegates) என்ற அடிப்படையிலான நாடாளுமன்ற நிலை வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பதவி விலக வேண்டும். அரசியலை விட்டுச் செல்ல வேண்டும் எனக்கோரிப் போராடி, மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்சக்களைப் பிணை எடுப்பதற்காகவே பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஆக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசியல் சூழலிலேயே, அவர் பதில் ஜனாதிபதியாகவும், நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் பதவி உயர்த்தப்பட்டார். அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியை சரியான அரசியல் வழிமுறையின் கொண்டு நடத்த முடியாமல் சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் அந்தக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து, 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முற்றாக நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் ராஜபக்சக்களின் மோசடி அரசியல் பாசறையின் மூலம் நிறைவேற்றதிகாரப் பலம் கொண்ட ஜனாதிபதியானார். இதன் மூலம் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவரது நீண்டகால அரசியல் அபிலாசையும், அதிகார ஆசையும் நிறைவேறி இருக்கின்றது. ஆனால் அவரை அரசியல் தலைமையில் இருந்து புறந்தள்ளிய மக்களின் அபிலாசையும் அரசியல் விருப்பமும் நோக்கமும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களின் விருப்பத்திற்கும், ஓர் அரசியல் கட்சியின் முயற்சிக்கும் உட்பட்டு, அவர் ஜனாதிபதியாக உயரவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட அவரை, அதே மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் இழந்த பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தின் மூலம் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டிருக்கின்றார். அதாவது பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியின் முதுகில் ஏறி – ஏற்றப்பட்டு ஜனாதிபதியாகியவர்.

நாட்டின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையின் கீழ் ஜனாதிபதி என்ற தனிமனித அரசியல் அதிகார பலத்தின் துணையைக் கொண்டே அவர் ஜனாதிபதி என்ற ‘அரசியல் அந்தஸ்து அதிகார பலத்தில்’ கோலோச்சத் தொடங்கியிருக்கின்றார்.

முழு அதிகார அரசியல் தகைமையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சில மணித்தியாலங்களிலேயே – 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே அவர் தன்னெழுச்சி பெற்று போராட்டம் நடத்திய மக்கள் மீது – காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது முகத்தை மூடிக்கட்டிய முப்படையினர் மற்றும் பொலிசாரின் படை பலத்தைப் பயன்படுத்தி, 21 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளாகிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதும், சட்டத்தரணிகள், மதத் தலைவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பதிவு செய்வதற்காகச் சென்றிருந்த பிபிசி செய்தியாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதும் அதீத பலப்பிரயோகத் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது.

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்தும் தாங்கள் கைப்பற்றி இருந்த ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் சுமார் 12 மணித்தியாலங்களில் விலகிச் செல்ல உள்ளதாக அவர்கள் அறிவித்து, அதற்குத் தயாராக இருந்த வேளையிலேயே, இந்த ‘நள்ளிரவு நேர முகத்தை மூடிக்கட்டிய படை அணியினால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்கிலான தாக்குதல்’ நடத்தப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மையப்புள்ளியாகத் திகழ்ந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை அதிகார பலம் கொண்டு அடக்கி ஒடுக்குவதற்காகவே இந்த அரசியல் பலப்பிரயோக நடவடிக்கை அவசரகாலச் சட்ட நடைமுறையின் கீழ் நடத்தப்பட்டது.

மக்களைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குமே அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி ஜனாதிபதி மாளிகையையும் நிறைவேற்று அதிகாரங்களையும் கைவிட்டு தப்பியோடி மறைவிடத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாயவினால் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இந்த அவசரகாலச் சட்ட உத்தரவைப பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டைவிட்டு ஓடித் தலைமறைவாக இருந்த நிலையில் நிறைவேற்றதிகார அந்தஸ்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி என்ற அதிகார நிலையில் செய்யப்பட்ட ஒரு பதில் ஜனாதிபதி நியமனம்  சட்ட வலுவுள்ளதா என்ற கேள்வி உள்ளது. அதேவேளை, பதில் ஜனாதிபதி ஒருவரினால், அந்தப் பதவியை ஏற்ற உடனேயே நாடாளுமன்ற சபாநாயகருடன் கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக இவ்வாறு அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, நாடாளுமன்றத்தில் தனித்த நிலையில் தேசியப்பட்டியல் நியமனத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பிரதமராகி உறுதியானதோர் அமைச்சரவையின் ஆலோசனையின்றி அவசரகாலச் சட்டத்தைப பிறப்பிக்க முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.

இவ்வாறு பல்வேறு நிலைமைகளில் சட்டரீதியான குழப்ப நிலைமைகளுக்குள் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தின் மூலம் தெரிவாகிய ஜனாதிபதி ஒருவர் தன்னெழுச்சி கொண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது படைப்பல தாக்குதல் நடத்தியது சரியா என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டு அந்த நடவடிக்கை பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.

தவறான கொள்கைகள், குடும்ப சுயநலம் சார்ந்த இராணுவமய ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகள், ஊழல் மோசடிகள் என்பவற்றின் மூலம் பொருளாதார ரீதியில் படுகுழியில் தள்ளிய தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சி பெற்று போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். இது ஜனநாயக ரீதியிலான போராட்டம். இறைமை உரிமை கொண்ட மக்களின் அபிலாசைகளை பொருளாதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத நிலையில் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட ஒரு போராட்டம். ஜனநாயக வழிமுறையிலான இந்த சாத்வீகப் போராட்டத்தை அடித்து நொறுக்கியது ஜனநாயகத்திற்கு முரணானது. அப்பட்டமான ‘அரசியல் உரிமை மீறல்’, அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமை அமைப்புக்களும் ஜனநாயகவாதிகளும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்கள்.

இத்தகையதோர்  அரசியல் பின்னணியில், ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டிற்கும் செல்வாக்கிற்கும் உட்பட்டுள்ள ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதியினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பது கேள்விக்கு உரியது. பலத்த ஐயப்பாட்டிற்கும் அவநம்பிக்கைக்கும் உரியது.

பேச்சுவார்த்தைகள், சாத்வீகப் போராட்டங்கள், ஒத்துழையாமை எதிர்ப்புக்கள் என்ற வரிசையில் இறுதியாக ஆயுதப் போராட்ட வழியின் ஊடாக, சர்வதேச மத்தியஸ்த நிலையிலும்கூட தீர்வு காண முடியாமல் போன இனப்பிரச்சினைக்கு பொதுஜன பெரமுன என்ற வேறோர் அரசியல் கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ஒரு ஜனாதிபதியினால் தீர்வு காண முடியுமா என்ற கேள்வி உறுதியாக எழுந்து நிற்கின்றது.

இனவாத மதவெறிப் போக்கை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் வெற்றிகளைக் குவித்துக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளும், அந்தக் கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உடன்படுவார்களா என்பதும் கேள்விக்கு உரியது.

ஏனெனில் சிங்கள பௌத்த தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட – ஆனால் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசாங்கத்தின் குறுகிய காலமாகிய இரண்டு – இரண்டரை வருட காலத்தில் எரியும் பிரச்சினையாகிய இனப்பிரச்சினைக்கு – ஒரு குறைகால அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வு காண முடியும் என்பது நம்பக் கூடிய விடயமாகத் தெரியவில்லை.

நிறைவேற்றதிகாரப் பலத்தைக் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு அல்லது கருத்து, வெறுமனே பிரச்சார அரசியல் ரீதியிலானதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆர்.சம்பந்தன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் உலகில் ஒரு நரியாகவே நோக்கப்படுகின்றார். அதேபோன்று தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய அரசியல் நிலையில் நீண்ட அனுபவத்தையும், பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் அரசியல் ரீதியில் ஒரு நரியாகவே பார்க்கப்படுகின்றார்.

பல்வேறு சிக்கல் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ள – ஆளாக்கப்பட்டுள்ள நாடு, மிக மோசமான பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாகி முழுமையாக நிலைகுலைந்துவிடுமோ என்ற சமூக, அரசியல், பொருளாதார அரசியல் சூழலில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என வெளியாகியுள்ள அறிவித்தல் உண்மையில் நீரில் தோன்றியுள்ள குமிழியேயன்றி வேறொன்றுமில்லை. ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவித்தலை வைத்துக் கொண்டு குழும்பிய குட்டையாக அரசியலில் நொண்டிக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் ‘அரசியல் செய்ய’ முற்படுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்களிப்பில் இராஜதந்திர ரீதியில் முடிவெடுக்க முடியாமல் கண்டனங்களுக்கு ஆளாகியது மட்டுமல்லாமல் உட்கட்சி  குழப்பங்களுக்கும் உள்ளாகி இருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு இந்த இனப்பிரச்சினைத் தீர்வு என்ற அரச அறிவித்தல் ஒரு துரும்பாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply