கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் ‘D614G’ வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது.
இதுவரை இந்த உலகம் அறிந்துள்ள கோவிட்-19 வைரஸைக் காட்டிலும், D614G வகை தொற்று என்பது பத்து மடங்கு வேகமாகப் பரவும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் கூடுதல் கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அண்மையில் தமிழகத்தின் சிவகங்கை பகுதியிலிருந்து மலேசியா திரும்பிய ஆடவருக்கு, D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித் திரிபு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவில் அவருக்கு D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இதேபோன்ற பாதிப்பு இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்தப் புதிய வகை பாதிப்பை கண்டறிந்துள்ளது.
“இந்த வகை தொற்று பத்து மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். ஒரு தனி நபரிடம் இருந்து அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று பரவினால் அவர் ‘சூப்பர் ஸ்பிரெட்டர்’ (Super Spreader) எனக் குறிப்பிடப்படுகிறார்.
“இத்தகைய நபர்களுக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு பாதிப்பு ஏற்படும் போது அது மேலும் பத்து மடங்கு வேகத்துடன் பரவும்,” என டாக்டர் நூர் ஹிஷாம் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.