காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரம்: 4வது சாட்சியிடம் சாட்சியம் பெற நடவடிக்கை

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்தில் வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் எனும் தவேந்திரன் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பெறுவதற்கு கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் வெள்ளிக்கிழமை (24) அனுமதி அளித்தது.

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரம் தொடர்பிலான வழக்கு வெள்ளிக்கிழமை (24)  மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நலின் ஹேவாவசம், லக்மாலி ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஏற்கனவே வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலனை செய்த நீதிபதிகள் குழாம், நான்காவது சாட்சியாளரான முரளியிடம் மீண்டும் சாட்சியத்தைப் பதிவு செய்யத் தீர்மானித்தது. அதற்குரிய திகதியை நீதிமன்ற விடுமுறையின் பின்னர் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக முரளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்துக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கி இருந்தார். அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் இருந்த விடயங்களுக்கு மாறாக  கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முரளி மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

தொடர்ந்து முரளியை முறைப்பாட்டாளர் தரப்புக்குப் பாதகமான சாட்சியாளராகக் கருதி நடவடிக்கை எடுப்பதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ். ரத்தினவேல் ஊடாக மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றினைச் தாக்கல் செய்த முரளி,  2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழங்கிய சாட்சியமானது பலவந்தத்தின் அடிப்படையில் வழங்கியது எனவும், சரியான சாட்சியத்தை வழங்க தனக்கு மீண்டும் அவகாசம் தருமாறும் கூறியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தை மையப்படுத்தி சட்டமா அதிபர் சார்பிலும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விண்ணப்பம் செய்யப்பட்டது. எனினும் பிரதிவாதிகளான இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒன்பது பேர் சார்பாகவும் இதற்கு கடும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தரவை நேற்று அறிவித்த கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள், நான்காவது சாட்சியாளரான சுமதிபால சுரேஷ்குமார் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தீர்மானிப்பதாக அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.