குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

FB IMG 1663823344001 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை என்பது தமிழர்களது பூர்வீக பகுதியாகும். இந் நிலையில் அப் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பௌத்த மதகுருமார்களும் தொல்லியல் திணைக்களத்தினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பௌத்த  மதகுருமார்களும்  , தொல்லியல் திணைக்களத்தினரதும் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலை விவாகரத்தில், அண்மைய நிலவரங்கள் என்ன என்பது தொடர்பில் ஆராயவேண்டியது அவசியமாகும்.

632ஏக்கர் பூர்வீக விவசாயக் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு

IMG 6049 resized 7 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

குருந்தூர்மலையை அண்மித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 632ஏக்கர் பூர்வீக விவசாயக் காணிகளைத் தொல்லியல் திணைக்களம் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த காணிகளில் எல்லைக் கற்களையிட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் திணைக்களத்தின் இச்செயற்பாட்டைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும், குமுழமுனைப் பகுதி மக்களால் கடந்த 21.09.2022 புதனன்று குருந்தூர்மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூகசெயற்பாட்டாளர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த கட்டுமானம், ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு.

IMG 6079 resized 2 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

இந் நிலையில் குருந்தூர் மலை அடிவாரத்தில் தமது ஆர்ப்பாட்டத்தினை முடித்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து, மலையின் மேற்பகுதியில் நிலமைகள் எவ்வாறிருக்கின்றன என்பது தொடர்பில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு பௌத்த கட்டுமானங்கள் கட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக அங்கிருந்த விகாரைஅமைப்பு நீதிமன்றக் கட்டளைக்குப் பிற்பாடு, நீதிமன்றக் கட்டளையை மீறி கட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

அத்தோடு கட்டுமானப்பணிகளுக்கெனத் தயாரான நிலையில் சீமெந்து கலவைசெய்யப்பட்டும் காணப்பட்டன.

இந் நிலையில் இக்கட்டுமானப் பணிகள் தொடர்பில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன், தமது கண்டனங்களையும் வெளியிட்டு அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அவ்வாறு அங்கு வந்த  காவல்துறையினர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும்  காவல்துறையினருக்குமிடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை முடிவுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றிருந்தனர்

ரவிகரன், மயூரன் ஆகியோர்  காவல்துறையினரால் கைது.

IMG 6247 resized 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

இந் நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு இணைந்து பங்கேற்றிருந்த கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இரத்தினராசா மயூரனை, குறித்த நாளன்று மாலையில் விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு முல்லைத்தீவு  காவல்துறையினர்   அழைத்திருந்தனர்.

இவ்வாறு  காவல்துறையினரின்  அழைப்பை ஏற்று விசாரணைக்கெனச் சென்ற மயூரன்  காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதை போலிசில் முறைப்பாடு செய்யச்சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுகளைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போராட்டங்கள் முன்னெடுப்பு

IMG 6392 resized 2 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

துரைராசா ரவிகரன் மற்றும், இரத்தினராசா மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து 22.09.2022வியாழனன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து, காவல் நிலயம்வரை ஒரு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால், யாழிலும் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைதுகள் மற்றும் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பாராளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைப்பு

IMG 6167 resized 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

இவ்வாறு கைதுசெய்யப்பட்டமை மற்றும், நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்மை, குருந்தூர்மலையின் அண்மையிலுள்ள தமிழ் மக்களின் 632ஏக்கர் காணிகள் அபகரிக்கப்படுகின்றமை என்பவற்றைக்கண்டித்து பாராளுமன்றிலும் 22.09.2022வியாழனன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தவகையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதுதொடர்பில் பாராளுமன்றில் பேசும்போது,

“தொல்லியல் திணைக்களம் சட்டவிரோதமாக கட்டடங்குவதை எதிர்த்துப் போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினராக நடாத்திய சந்திப்பிலே குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்குறித்துச் தெரியப்படுத்தினோம் . பணிப்பாளர் நாயகத்திற்குத் தான் உடனடியாக அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் இந்த தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாதத் திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்சியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனத் தனது  கணடனத்தைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சிவஞானம் சிறீதரன் பாரளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும்போது,

“கடந்த 21.09.2022நாம் குருந்தூர் மலைக்குச்சென்றிருந்தேன். அங்கு போனவர்களில் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஏன் கைதுசெய்கிறார்கள்?

அங்கு கட்டுமானப்பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்று உத்தரவு வழங்கியிருந்தும், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் திருகோணமலை ஆலயத்திலே நீதிமன்ற உத்தரவு எதுவுமில்லை.  அங்கு ஆலயம் ஏதேனும் அமைக்கப்போனால் தொல்லியல் திணைக்களம் தடுப்பதுடன், காவல்துறையினர் கைதுசெய்கின்றனர்.

ஆனால்  இதே  காவல்துறையினர்  குருந்தூர்மலையிலே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய நீதவான் ஒரு தமிழர். ஆகவே தமிழன் கட்டளைகளைப் பிறப்பித்தால், தமிழன் நீதவானாக இருந்தால் இந்த நாட்டிலே செல்லுபடியாகாதா? அதற்குரிய பெறுமதியில்லையா? ஒரு சிங்கள நீதவான்தான் கட்டளை பிறப்பிக்கவேண்டுமா? அப்படியா இந்தநாட்டிலே நீதித்துறை இருக்கிறது? “என பல கேள்விகை முன்வைத்து சாடியிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட ரவிகரனும், மயூரனும் பிணையில் விடுதலை

IMG 6308 resized 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

இந் நிலையில் இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140, 146, 147, 344ஆகி பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்று இரத்தினராசா மயூரன் ஆகியோருக்கெதிராக, முல்லைத்தீவு நீதிமன்றில் B/1053/2022 என்னும் ‘பி’ அறிக்கை  காவல்துறையினரால்  தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த இருவருக்கெதிராகவும்  காவல்துறையினரால்    நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட குறித்த ‘பி’ அறிக்கையானது, 22.09.2022 வியாழன் அன்று, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில்  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் ரவிகரன் மற்றும், மயூரன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், ஏற்கனவே AR/673/18என்ற வழக்கிலே மன்றினுடைய கட்டளைகளை மீறிச்செயற்பட்டதாலேயே இவர்கள் 12.09.2022புதனன்று இவ்வாறானதொரு போராட்டத்தினை முன்னெடுத்தனர் எனத் தெரிவித்தனர்.

அதனடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் எனவும், எந்தவிதாமன இடையூறுகளையும் செய்யவில்லை எனவும், மலைஅடிவாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் குருந்தூர்மலைக்குச் சென்று, அங்கே அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுவதை அவதானித்ததாகவும், இதனடிப்படையிலேயே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது எனவும் வாதாடியிருந்தனர்.

இதனை ஏற்ற மன்று இருவரையும் பிணையில் விடுவித்ததுடன், குறித்த வழக்கின் விசாரணகளை எதிர்வரும் 2023.02.02ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

நீதிமற்றக்கட்டளை மீறப்பட்டதா? என்பது தொடர்பில் தொல்லியல் மற்றும்,  காவல்துறையினர்  விளக்கமளிக்கவேண்டு என நீதிமன்று உத்தரவு.

முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு  காவல்துறையினரால்     தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கில், நீதிபதி ரி.சரவணராஜா இறுதியாக கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்குச் சென்று பார்வையிட்டு, 12.06.2022இற்கு முன்னர் இருந்த கட்டுமானத்தைப் பேணுமாறும், இதற்குமேல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாதெனவும் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையானது மீறப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோருக்கு சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள்  22.09.2022 அன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் எதிர்வரும் ஒக்ரோபர் 13ஆம் திகதி  காவல்துறையினர்  விளக்கமளிக்கவேண்டும் எனவும், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரும் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டும் எனவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அடக்க முயலும்  பௌத்த மத குருமார்களும், தொல்லியல் துறையினரும்- அடங்காது தமிழர் நிலத்திற்கான போராட்டமும்…

IMG 6119 resized 2 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

ஏற்கனவே கடந்த 12.06.2022அன்று குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி ‘கபோக்’ கல்லிலான புத்தர் சிலையை நிறுவுவதற்கும், விகாரையின் கலசத்திற்குரிய கட்டுமானப் பணியினை முன்னெடுப்பதற்குமான விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

இந் நிலையில் இப்போராட்டத்தில் மக்களுடன் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக, மணலாறு சப்புமல்தென்ன ஆரண்ய விகாராதிபதி சந்திரபோதி மதகுரு  உள்ளிட்ட ஏழு பௌத்த மதகுருமார்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை  காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்காகத் தாக்கல்செய்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 10.11.2022முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறான சூழலில் மீண்டும் தொல்லியல் திணைக்களத்தினால்  காவல்துறையில்  முறைப்பாடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து இவ்வாறு ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

07 1 குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

இவ்வாறாக வழக்குகளைத் தொடர்ந்தும், கைதுகளை மேற்கொள்வதன் மூலமும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்கி, தமது பௌத்த ஆக்கிரமிப்பை தமிழர்களது பூர்வீகபகுதியில் கச்சிதமாகத் திணித்துவிடலாம் என பௌத்த  மதகுருமார்ளும், தொல்லியல் திணைக்களத்தினர்களும் எண்ணுகின்றார்களோ என்ற வலுவான சந்தேகமும் எழுகின்றது.

இந் நிலையில் குருந்தூர்மலை என்பது தமிழல்களுடைய பூர்வீக நிலம், அதற்காக இறுதிவரை போராடுவோம் என கைதாகி பிணையில் விடுதலையான ரவிகரன் மற்றும், மயூரன்  அறிவித்துள்ளனர்.

எனவே பௌத்த  மதகுருமார்கள், தொல்லியல் திணைக்களத்தினர் எத்தகைய அடக்குமுறைகளைக் கையாண்டாலும் தொடர்ந்தும் தமிழர்கள் தமது பூர்வீக நிலத்திற்காக போராடுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.