இலங்கையின் மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூறுமாறு வலியுறுத்தி ஐநா மனித உரிமைப் பேரவை மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இது இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான ஒன்பதாவது தீர்மானமாகும்.
ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள எட்டு தீர்மானங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களை அரசு நிறைவேற்றவில்லை. அந்தத் தீர்மானங்களுக்கமைய செயற்படுவதாக ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்த போதிலும் குறிப்பிட்டுக் கூறத்தக்க நடைமுறையில் சாத்தியப்பாடான நடவடிக்கைகள் எதனையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.
மாறிp மாறி ஆட்சிக்கு வருபவர்கள் ஆளுக்கொரு கொள்கையும் நேரத்திற்கு ஒரு போக்குமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே தவிர, நிலையான ஒரு தேசிய கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதில்லை. செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மு;னனெடுப்பதும் இல்லை.
மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும்போது சாட்டுக்களைக் கூறுவார்கள். அழுத்தங்கள் வந்தால் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறுவார்கள் அவ்வளவுதான். பின்னர் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஒப்புக்கொண்ட விடயங்கள், அவையில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு நேர்மாறான செயற்பாடுகளையே முன்னெடுப்பார்கள். ஆனால் ஐநா மனித உரிமைப் பேரவையுடனும், ஐநா மன்றத்துடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும், செயற்படுவதாகவும் மாத்திரம் பெயரளவில் உரையாற்றுவதுடன் முடித்துக் கொள்வார்கள். இத்தகைய நம்பகத்தன்மையற்ற போக்கிலேயே ஐநா மனித உரிமைப் பேரவையின் கடந்த எட்டுப் பிரேரணைகளின்போதும் அவற்றின் பின்னரும் இலங்கை ஆட்சியாளர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 46-1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அப்போதைய ரணில் விக்கிரமசிங்கவே தற்போதைய நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். பேரவையின் தீர்மானத்திற்கு அப்போது ஒப்புதல் அளித்து அதற்கமைய செயற்படுவதாக உறுதியளித்திருந்த அவரது தலைமையிலான இந்த அரசு அந்தப் பிரேரணை நாட்டின் இறைமைக்கு விரோதமானது என்றும், அதனால் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும், ஐநா மனித உரிமைப் பேரவையிலேயே கூறியிருக்கின்றது.
அப்போது நாட்டின் முக்கிய அரசியல் தலைமைப் பதவியாகிய பிரதமர் பதவியில் இருந்த அதே அரசியல் தலைவராகிய ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவியில் இருக்கின்றபோது அதனை நிராகரிக்கின்றார். இது எந்த வகையிலான தேசிய கொள்கை என்று ,புரியவில்லை. இது இலங்கையின் எத்தகைய சர்வதேச ஊடாட்டம் என்பதும் இலங்கையின் சர்வதேச மட்டத்திலான எத்தகைய இராஜதந்திரப் போக்கு என்பதும் அவருக்கே வெளிச்சம்.
சொல்வதொன்று செய்வதொன்று என்பதே இலங்கைப் பேரினவாத ஆட்சியாளர்களின் அரசியல் போக்கு. இது நாட்டு மக்கள் மத்தியிலான உள்ளுர் மட்ட அரசியல் போக்கு மட்டுமல்லை. சர்வதேச மட்டத்திலான நடைமுறைப் போக்குமாகும்.
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகிவிட்ட போதிலும், இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடு நடைமுறையில் இருப்பது குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான ஜுன்மாத அமர்வின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அது உடனடியாக நீக்கப்பட்டு, அவசியமானால், சர்வதேச நியமங்களுக்கும் நீதிவழிமுறைகளுக்கும் ஏற்ற வகையிலான ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த ஆலோசனையை அரசு ஏற்றுக்கொண்டது. அத்துடன் புதிய சட்டம் உருவாக்கப்படும் வரையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அந்தப் பேரவையில் பகிரங்கமாக உறுதியளிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி காரணமாகத் தன்னெழுச்சி பெற்று அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய பிரதமாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களது தெரிவின் மூலம் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டார். முன்னைய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு எதிராகவும் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் 225 நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் பங்கேற்றிருந்தவர்களை பொலிசார் குழப்பவாதிகள் அத்துமீறிச் செயற்பட்டவர்கள் எனக் கூறி கைது செய்துள்ளார்கள். இதுவரையில் மூவாயிரம் பேர் வரையில் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குழப்பவாதிகள், பயங்கரவாதிகள் என்ற பட்டியலின் கீழ் அவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ச்சப்பட்டிருக்கின்றது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீடு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகளும் போராட்டத்தின்போது தீயிட்டு அழிக்கப்பட்டது, இந்த அழிவுச் செயல்களைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே செய்தார்கள் என்ற ரீதியில் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் புலனாய்வாளர்களின் ‘முறையான’ விசாரணைக்கு உள்ளாகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இறைமையுள்ள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற ரீதியில் ஐநா மனித உரிமைப் பேரவையில் அளித்த உறுதிமொழியை மீறிய வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தமது அரசியல் நலன்களுக்காகத் தங்களுக்குச் சாதகமாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் உண்மையான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறச் செய்கின்ற செயற்பாட்டை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமும், மனித உரிமைப் பேரவையும் விரிவுபடுத்தி இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகின்றன. யுத்தம் முடிவடைந்த உடன் – ஒருவார காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பன் கீ மூனிடம் சர்வதேச விசாரணைகளின் மூலம் உரிமை மீறல் செயற்பாடுகளுக்கும் யத்தக் குற்றங்களுக்கும் பொறுப்பு கூறுவதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அந்த உறுதி இருவரும் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆவணமாக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்ததென்ன? அந்த உறுதிமொழியை தனது அப்போதைய ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றவே இல்லை.
அவரைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மட்டுமல்லாமல், அதற்குப் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி நடத்திய கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கூட நிறைவேற்றவில்லை. இப்போது ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கிய 46-1 பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐநா மனித உரிமைகள் பேரவையிலேயே மறுத்துரைக்கின்ற அளவுக்கு சர்வதேச அளவில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கைங்கரியத்தில் தனது சுய உருவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
யுத்தத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் ராஜபக்சக்களின் ஆட்சியிலும் மைத்திரி ரணில் அரசாட்சியிலும், இப்போதைய ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலும் நீதி நியாயம் மறுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதி வழங்கச் செய்கின்ற பொறுப்புக்களில் இருந்து ஐநா மனித உரிமைப் பேரவை தடம் மாறியிருப்பதையே காண முடிகின்றது.
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாக தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்க மறுத்து அடக்குமுறை நடவடிக்கைகளிலும் தமிழர்களுக்கு எதிரான மறைநிலை இனஅழிப்புச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்ற சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக மனித உரிமைப் பேரவை காத்திரமான நடவடிக்கையை எடுக்கத் தவறியிருப்பதையே காண முடிகின்றது.
பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சியிலும், தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் இடம்பெற்று வருகின்ற தமிழர் விரோத – இன அழிப்பு ரீதியிலான நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டும் வகையில் மனித உரிமைப் பேரவை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூறச் செய்வதில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மாறாக யுத்தக் குற்றச் செயற்பாடுகளை இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட குற்றச் செயல்களாகக் கருதி 58 அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பயணத்தடையை பிரகடனப்படுத்தி இருக்கின்றது.
இந்த அதிகாரிகள் ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு விஜயம் செய்தால் அவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் குற்றச்சாட்டுக்களைச் சாட்டி வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்திருக்கின்றது.
போர்க்குற்றச் செயல்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தைக் குற்றவாளியாக நிறுத்தி பொறுப்பு கூறச் செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்ட கால எதிர்பார்ப்பு. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மாறாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட ரீதியிலான போர்க்குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் குற்றங்களை இழைத்ததாகக் கருதப்படுபவர்கள் தமது நலன்களுக்காக அவற்றை மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் யுத்தக் கொள்கை வழியில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நோக்கிலான செயற்பாட்டிலேயே அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
ஆனால் எய்தவர்கள் இருக்க, அம்புகளைக் குற்றவாளிகளாக்கும் கைங்கரியமே மனித உரிமைப் பேரவையில்; நடைபெற்றிருக்கின்றது. இதனால் ஏழு தசாப்தங்களாக அரசியல் அதிகார உரிமை மறுப்புக்கு உள்ளாகி இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு ஆளாகித் தவிக்கின்ற தமிழ் மக்களுக்கு ஐநாவிடம் இருந்துகூட நீதி கிடைக்காத நிலைமையே வெளிப்பட்டிருக்கின்றது.
முனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், இன அழிப்பு நடவடிக்கைகள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறச்செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய ஐநா மனித உரிமைப் பேரவை இந்த செப்டம்பர் அமர்வில் இலங்கையைப் பொருளாதாரக் குற்றத்திற்கும் உள்ளாக்கியிருக்கின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு எதிரான உரிமை மறுப்புக்குற்றச்சாட்டு தளர்வடைந்திருப்;பதையே காண முடிகின்றது.