செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) மக்களின் பேராதரவுடன் எழுச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தாயகச் செயல் அணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, வடக்கு–கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தின் இறுதி நாளான இன்று17ஆம் திகதி காலை 10.30 க்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளது.
பேரணி யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை சென்றடைந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும் என்பதுடன், உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (17) இறுதி நாள் பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, நீதிக்கான குரலை வலுப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



