காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: 300 மில்லியனை ஒதுக்கி சர்வதேசத்தை அரசு ஏமாற்றுகின்றது – அனந்தி சசிதரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிலயைில், வெள்ள அழிவு மற்றும் பசளை இன்மையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அதைவிட விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் இன்று வந்துள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் என்பது வெறும் மாயையான வரவு செலவு திட்டமாக இருக்கின்றது.

இந்நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல், அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கபூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல் 300 மில்லியனை இந்த வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு செலவு திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும். இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் பூர்வாங்க விசாரணை ஒன்றை சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

எனவே இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புகூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்கின்ற கோரிக்கையை செவிமடுக்கவேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்களிற்கு இருக்கின்றது. ஏனெனில், சர்வதேசத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொண்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவது போலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த நிதி ஓதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என மேலும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: 300 மில்லியனை ஒதுக்கி சர்வதேசத்தை அரசு ஏமாற்றுகின்றது - அனந்தி சசிதரன்