வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கருத்து

இலங்கையில்  நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாத வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு வலுவான அரசியல் தன்முனைப்பும் அர்ப்பணிப்பும் அவசியமாகும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நினைவுகூரப்பட்ட நிலையில்,

இதுபற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் ஆயுத மோதல்கள், வன்முறைகள், பேரிடர்கள் மற்றும் இடம்பெயர்வு என்பவற்றின் காரணமாகக் காணாமல்போன அல்லது தமது குடும்பங்களை விட்டுப் பிரிந்த மக்களை நினைவுகூருவதுடன், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் தவிக்கும் குடும்பங்களுடனான உடன்நிற்பை வெளிப்படுத்துகிறோம்.

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தமக்கான பதில்களுக்காகக் காத்திருக்கின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை உண்டு. துக்கம் அனுஷ்டிக்கவோ, அமைதியடையவோ அல்லது தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவோ முடியாமல், காணாமல்போன  தமது அன்புக்குரியவர்கள் திரும்பி வராமையினாலும், அதனால் உருவான நிச்சயமற்ற தன்மையினாலும் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமானதும், சமூக, பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக ரீதியானதுமான சவால்களை எதிர்கொள்வதற்கு இக்குடும்பங்கள் வெகுவாகப் போராடுகின்றன.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான செயன்முறையாகும். குடும்பங்களே இச்செயன்முறையின் மையப்புள்ளியாகவும், உரிமையாளர்களாகவும், முக்கிய பங்காளிகளாகவும் திகழ்கின்றன. அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும் முக்கிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் அதேவேளை, ஏனைய உள்நாட்டுப் பங்காளிகள் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான ஆதரவுத் திட்டத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் குடும்பங்களுக்கான பரந்துபட்ட, நிலையான உதவியை வழங்கமுடியும்.
இதன் மையப்பகுதியாக இருப்பது தேடலே ஆகும். இது காணாமல்போனோரின் நிலை மற்றும் அவர்கள் தற்போது இருக்கும் இடம் குறித்துத் தெளிவுபடுத்துவதற்கான மிகமுக்கிய படியாகும். இதற்கு இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகும்.
தற்போது நாம் இலங்கையில் ‘காணாமல்போனோர் செயற்திட்டத்தை’ நடைமுறைப்படுத்தி வருகிறோம். இச்செயற்திட்டம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், தேசிய மற்றும் உள்ளுர் திறன்களை வலுப்படுத்தல் மற்றும் காணாமல்போனோரின் நிலை குறித்துத் தெளிவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் என்பவற்றின் மூலம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு ஒரு நிலையான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பது நாட்டில் நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாததாகும். ஆயுத மோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இவ்விவகாரத்துக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண்பதற்கு வலுவான அரசியல் தன்முனைப்பும் அர்ப்பணிப்பும் அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.