இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்ய முடியாது என்றும் எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தணிகாசலம் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“செம்மணி மனிதப்புதைகுழியில் தொடர்ந்து கண்டறியப்படும் மனித எச்சங்கள் மற்றும் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் கதைகள் குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியடைகிறேன்.
தற்போதுவரை குழந்தைகள் மற்றும் சிறுவர்களது எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக சுமார் 570 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செம்மணி என்பது தனித்தவொரு மீறல் சம்பவம் அல்ல. மாறாக இது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் இனவழிப்பு என்பவற்றுக்கான பரந்துபட்ட சான்றாகும்” என்று அவர் தெரிவித்தார்.
இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக தனது தொகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவொரு கடந்தகாலத் துயரம் அல்ல.
பெரும்பாலானோர் தமது காணாமல்போன அன்புக்குரியவர்கள் பற்றிய துயரத்தையும், இன்னமும் விடை கிடைக்காத கேள்விகளையும் சுமந்துகொண்டே கனடாவுக்கு வந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தற்போது செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான கோரிக்கையையும் வலுப்படுத்துகின்றது.
இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது.
மாறாக சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இச்செயன்முறைகள் தடயவியல் நிபுணர்கள் ஊடாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும் என்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.



