கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பாதுகாக்க வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்  பாதுகாக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வானூர்திமூலம்  ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது  மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல மனித எச்சங்கள் அதற்குள்  இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காணாமல்போன தமது  உறவுகளும் இந்த புதைகுழிக்குள் இருக்கலாமோ என்ற அச்சம் காணாமல்போனோரின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான மனித புதைகுழிகளை தோண்டும்போது சர்வதேச விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால்  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் அது பின்பற்றப்படவில்லை. அத்துடன் இதற்கு வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின்  உதவிகளையும் பெற வேண்டும். இலங்கையில் தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் வரலாற்றில் அதிர்ச்சியான தகவல்களே கிடைக்கின்றன. எனவே  மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மை கண்டறியப்பட வேண்டும்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டினர். தரவுகள் சேகரிக்கப்படவில்லை.தொடர்ந்து மனிதப்புதைகுழியை தோண்டுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்  பாதுகாக்க வேண்டும்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்படியானால் அதற்கான முழுப்பொறுப்பையும் கருணா அம்மான் ஏற்க வேண்டும். அனால் கருணா அம்மான் அரசுடன் இருக்கின்றார். அவர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.