இலக்குவைக்கப்பட்ட துறைசார் முதலீடுகளின் அவசியம் குறித்து இலங்கை – இந்தியா ஆராய்வு

இரு நாடுகளுக்கும் இடையில் இலக்குவைக்கப்பட்ட துறைசார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை – இந்தியா கூட்டாக ஆராய்ந்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் கூட்டிணைவின் தலைவர் சுப்ரகந்த் பண்டாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதுடில்லியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் கூட்டிணைவு, இலங்கையின் வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியப்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அதேவேளை, இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுப்ரகந்த் பண்டாவுக்கு விளக்கமளித்தார். அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிடமிருந்து பரந்தளவிலான முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான இலங்கையின் தயார்நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின்போது, ‘இலக்குவைக்கப்பட்ட துறைசார் முதலீடுகளின்’ அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதுடன், இலங்கையின் வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்து துறைசார் முதலீடுகளை முன்னிறுத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.