மரத்தால் செய்யப்பட்ட வில்லைத் தோளில் கொழுவிக்கொண்டு, மரகதப் பச்சைநிறமான காட்டிலே வெறுங்காலுடன் நடந்துகொண்டிருந்த ஜோசப் ஒகொணி, தன்னைச் சூழ்ந்திருந்த உலர்வலய தாவரங்களையும், தூரத்திலே தெரிந்த அவரது ஆற்றங்கரைக் கிராமத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
“இது எனது ‘பாசார்’ என்று சந்தையைக் குறிக்கும் இந்தோனேசிய மொழிச்சொல்லைப் பயன்படுத்திக் கூறினார். சாப்பிடுவதற்கான மிருகங்களையும், மருந்துத் தேவைக்கான தாவரங்களையும் வீடு கட்டுவதற்குத் தேவையான மரங்களையும் இங்கிருந்து நான் எடுத்துக்கொள்வேன்.”
மரபுரீதியான சந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது, எந்தவிதத்திலும் மாசுபடுத்தப்படாது தூய்மையாக இருக்கும் இந்தக் காடு முற்றிலும் வித்தியாசமானது.
“இது முற்றிலும் இலவசமானது” என்று ஒகொணி (Ogoney) சமூகத்தின் ஓர் அங்கத்தவரான இந்தோனேசியாவின் கிழக்குப்புறத்தில் மிகவும் செழிப்பான காடுகளைக்கொண்ட மேற்குப் பாப்புவாவில் (West Papua) வசிக்கின்ற பூர்வீகக்குடிகளில் ஒன்றைச் சேர்ந்த ஜோசப் சிரித்துக்கொண்டு கூறினார்.
அது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது. பல நூற்றாண்டுகளாக ஒகொணி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் காடுகளில் சாகுபடி செய்தததுடன் தமது உழைப்பினால் கிடைக்கும் பயன்களின் உதவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் அன்னாசி, சவ்வரிசி, இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். மான்களையும் பன்றிகளையும் அவர்கள் வேட்டையாடுகிறார்கள். அத்துடன் அந்த இடத்தில் மட்டும் கிடைக்கும் தாவரங்களை மருந்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
அபரிமிதமாகக் கிடைக்கும் இயற்கைவளங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒகொணிகளின் இந்தக்காடு ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளின் படி அவை புனிதமானவையாகக் கருதப்படுவதனால், அவை யாராலும் தொடப்படாது இருப்பது மட்டுமன்றி, மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.
“காட்டிலே தான் நாங்கள் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றோம். அதனை யாரும் சுரண்ட வெளிக்கிட்டால் நிச்சயமாக அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.” என்று ஜோசப் மேலும் கூறினார்.
ஓகொணியைப் பொறுத்தவரையில், காடு சந்தை போன்றது. ஆனால் அதே நேரம் அதில் அதிகமான பகுதியை அவர்கள் புனிதமானதாகக் கருதுவதுடன் அதனை மூர்க்கத்தனமாகப் பாதுகாத்துவருகிறார்கள்.
ஓகொணியைப் போன்ற பூர்வீகக் குடிகளும் உள்நாட்டுச் சமூகங்களும் உலகின் நிலப்பகுதியின் அரைவாசியைப் பகுதியையும் 80 வீதமான தாவரங்களையும் விலங்குகளையும் நிர்வகித்துவருவதுடன், பல சந்ததிகளாக இயற்கையைப் பேணிப் பாதுகாப்பவர்களாகவும் விளங்கிவருகிறார்கள். பூகோளரீதியாக 37.7 பில்லியன்கள் தொன் நிறையுடைய காபணை சேமித்துவைத்திருக்கின்ற காடுகள், பூமியின் காலநிலையைச் சமநிலையில் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஆனால் தற்போது மட்டுமே, பூர்வீகக் குடிமக்களும் உள்நாட்டுச் சமூகங்களும் மேலிடத்து நிர்வாகங்களால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 2021 இல் நடைபெற்ற ஐநாவின் காலநிலை மாறுபாட்டு மாநாட்டில், (‘கொப் 26’ என்றும் அழைக்கப்படுகிறது) காடழித்தலை அவர்கள் தடுக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் பட்சத்தில், 1.7 பில்லியன்கள் அமெரிக்க டொலர்களை இந்தச் சமூகங்களைத் தாபரிப்பதற்காக ஒதுக்கிவைத்திருக்கிறார்கள.
“ஒரு சந்ததி இன்னொரு சந்ததிக்குச் சொல்லிக்கொடுக்கும் தொடர்ந்து நீடித்து நிலைக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்தி, அவர்கள் காடுகளைப் பேணிப்பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரம் தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்து, சுற்றுச்சூழலுக்கும் தங்கள் வாழ்வாதாரத்துக்கும் அவசியமான சமநிலையைப் பேணிவருகிறார்கள்” என்று இலாபத்தை மையமாகக்கொள்ளாத மழைக்காட்டுச் சம்மேளனத்தில் தலைவராகப் பணிபுரியம் இம்மானுவெலா பெறெங்கர் (Emmanuelle Berenger) கருத்துத் தெரிவித்தார். காடுகளைச் செயற்றிறன்மிக்க விதத்தில் பாதுகாப்பதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்கள் ஆதரிக்கப்படவேண்டும்.
நீண்டகாலச் செயற்பாடு
பூர்வீகக்குடிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தோனேசியாவிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முடியும். நிலங்களைக் குத்தகைக்குக் கொடுப்போர் தொடர்பான உரிமைகளை வலுப்படுத்தவும், நாட்டின் இயற்கை வளங்களை சிறப்பான முறையில் நிர்வகிக்கவும், அந்த அரசு 2016ம் ஆண்டில் பூர்வீகக் குடிகள் பயன்படுத்தும் காடுகளை சட்டபூர்வமான முறையில் அங்கீகரிக்கத் தொடங்கியது.
உலகளாவிய வகையில் பாரிய மழைக்காடுகளில் மூன்றாம் இடத்தை வகிக்கும் மழைக்காட்டைப் பரிபாலிக்கும் இந்தோனேசியாவின் சுற்றுச்சூழலுக்கும் வனங்களுக்குமான அமைச்சு, முன்னர் அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடிகளின் காடுகளைக் கொண்ட 153000 ஹெக்ரேயர் நிலங்களை அந்தப் பூர்வீகக் குடிகளிடம் கையளித்திருக்கிறது.
கடந்த ஒக்ரோபர் மாதத்தில், மேற்கு பாப்புவா மாகாணத்தில் முதல் தடவையாக ஒகோணி இனத்தைச் சார்ந்த பூர்வீகக்குடிகள் வழமையாகப் பயன்படுத்தும் காடுகள், அரசினால் அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் காடுகள் 16,299 ஹெக்ரேயர் நிலத்தில் அமைந்திருக்கும் தாழ்நில உலர்வலயக் காடுகளைக் கொண்டிருப்பதுடன், டைனோசோருக்கு மிக நேருக்கமான இனமான ‘எமு’ (emu) என்ற பறவையைப் போன்று தோற்றமளிக்கும் ‘சொர்க்கத்தின் பறவைகள்’ (Paradise birdss) கசோவரிப் பறவைகள் (cassowaries) போன்ற பறவைகளையும் அதிகமாகக் கொண்டிருக்கிறது.
“எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்துக்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று ஒகோணி இன மக்களின் கிராமங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் மேடி மாவட்டத்தின் தலைவியான யுஸ்ரீனா ஒகொணி தெரிவித்தார். “காடுகளைப் பேணிப்பாதுகாப்பதில் நான் மிக அதிகமாகக் கவனஞ் செலுத்திவருகிறேன். ஏனென்றால் காடுகள் அழிக்கப்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
2017ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நீண்ட, கடினமான செயற்பாட்டின் முடிவாக அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஓகொணி இனத்தவர் வாழ்ந்துவரும் பிரதேசத்தில் பாப்புவா சத்திய கெஞ்சனா (Satya Kencana) என்ற ஒரு மரநிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்தும் காடுகளுக்கான அங்கீகாரத்துக்காக அவர்கள் அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பத்தொடங்கினார்கள்.
“மோஸ்கோனா இனத்தைச் சார்ந்த பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமான பிரதேசங்களில் மிக அதிகமாக மரங்கள் தறிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்” என்று அந்த மாவட்டத்தின் தலைவியாக இருக்கின்ற யுஸ்ரீனா தெரிவித்தார். “எங்களது காட்டுக்குள் இன்னும் யாரும் வரவில்லை. அவ்வாறான ஒரு நிகழ்வு எங்களது பிரதேசத்தில் நடைபெறுவதை நாம் விரும்பவில்லை.
அது ஒரு இலகுவான செயற்பாடாக இருக்கவில்லை.
நாம் பயன்படுத்தும் காடுகளுக்கான அங்கீகாரத்தின் முக்கியத்துவம் தொடர்பாக ஒகோணி இனமக்களில் அதிகமானோர் அறிந்திருக்கவில்லை. பிரதேச ரீதியிலான எல்லைகளை வரையறை செய்ய வேண்டிய நேரம் வந்த பொழுது, அந்த எல்லைகள் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பாக சமூகங்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. எமது விண்ணப்பங்களை உறுதிசெய்ய முதல், அரச அதிகாரிகள் பல தடவைகள் காடுகளை வந்து பார்க்க வேண்டியிருந்தது.
பாப்புவா பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பதற்கு அரசு நீண்ட காலத்தை எடுத்தது என்று பனா பாப்புவாவைச் (Pana Papua) சேர்ந்த சுல்பியான்ரோ (Sulfianto) கூறினார். பேர்க்கும்புலன் ஹ_மா (Perkumpulan HuMa) இந்தோனேசியா என்ற அமைப்பின் உதவியுடன் பூர்வீகக்குடிகளின் பிரதிநிதிகளையும் உள்வாங்கி ஒகோணி இனத்தவர்களுக்கும் மேலும் ஆறு இனத்தவர்களுக்குமான எல்லைகளை அரசு வரையறை செய்தது.
ஆகக்குறைந்த ஏழு பரம்பரைகளாக ஓகொணி இனத்தவர் இந்தக் காடுகளில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்தச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைப் பேணிப்பாதுகாப்பதுற்குப் பெயர்போன ஒகோணி பண்பாடு தொடர்பாக பனா பாப்புவா என்ற அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தது.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி ஏழு பரம்பரைகளுக்கு மேலாகத் தொடருகின்ற இந்த இனம், சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவருகின்றது. பாம் இன மரங்களிலிருந்து கிடைக்கும் சவ்வரிசி, மருத்துவக் குணங்களுக்குப் பெயர்போன சிவப்பு நிறமான புவா மெறா (buah merah) பழம் போன்றவற்றை காடுகளில் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் இவர்கள் சாகுபடி செய்துவருகிறார்கள்.
“அது மிகவும் அழகான இடம்” என்று ஜோசப் வதியும் அதே கிராமத்தைச் சேர்ந்த 41 வயது நிரம்பிய றோசலீனா ஒகோணி தெரிவித்தார். “உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யும் வயல்கள் எங்களுக்கு உண்டு. எங்களுக்குத் தேவையானதை மட்டுமே நாங்கள் சாகுபடி செய்வோம். முற்றைய இடங்களுக்குள் உள்ளே நுழைவதற்குக் கூட அனுமதி இல்லை. வேட்டையாடுவதையோ அல்லது வேறு எந்தச்செயற்பாட்டைச் செய்வதையோ யாரும் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.”
இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த மழைக்காடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையேயான காலப்பகுதியில், ஒகோணிகள் வாழும் பிரதேசத்தில் 51 ஹெக்ரேயர் காடு இழக்கப்பட்டது என்று ஒரு இந்தோனேசிய அமைப்பான சம்தானா (Samdhana) அமைப்பு தாம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரிவித்திருந்தது. இது வருடாந்த மழைக்காட்டு இழப்பின் 0.1 வீதமாகும்.
2001ம் ஆண்டுக்கும் 2021ம் ஆண்டுக்கும் இடையில் காடிழப்பு வீதம் ஒவ்வொரு வருடமும் 0.5 வீதமாக இருந்ததாக, நுசந்தரா அட்லஸ் என்ற காடழிப்பைக் கண்காணிக்கும் ஒரு சுயாதீன அமைப்பு கணிப்பை மேற்கொண்டிருந்தது.
“பூர்வீகக்குடிகள் தங்களது காடுகளைப் பேணிப்பாதுகாத்து வருகிறார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன” என்று மேற்குறிப்பிட்ட அமைப்பின் பாப்புவா பிரதேசத்துக்கான இணைப்பாளராகப் பணியாற்றுகின்ற யூனுஸ் யும்ரே தெரிவித்தார். “பாரம்பரிய பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், நிலப்பயிர்ச்செய்கை, மட்டுப்படுத்தப்பட்ட பாவனை போன்ற காரணங்களால் காழழிப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பிரதேசத்திலே மிகவும் அதிகமாகக் கிடைக்கும் புவா மெறா (bua merah) என்ற பழம் மருத்துவ குணங்களைக் கொண்டது.
உணவு, மருந்து, கட்டடப்பொருட்கள் போன்றவற்றுக்கான மூலவளங்களை வழங்குவதோடு, காலநிலை மாற்றத்தின் காரணமாக, அரவாக் (Arfak) மலைகளின் அடிவாரத்தில் ஓடுகின்ற பெரும் நதிகளின் காரணமாக ஏற்படும் மழைவெள்ளத்திலிருந்து நிலத்தைப் பாதுகாக்கவும் இந்தக் காடுகள் பெருமளவுக்கு உதவுகின்றன.
பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது
மழைக்காடுகளை அங்கீகரிக்கும் செயற்பாடு, காலநிலை தொடர்பான அனுகூலங்களுக்கு அப்பால், வறுமையாலும் இனப்பாகுபாட்டினாலும் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பூர்வீகக் குடிகளின் வாழ்வில், பாலின சமத்துவத்தையும் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
ஒகொணி இன மக்களின் நிலம், அரச காடு எனக் கருதப்பட்டதன் காரணத்தினால், அந்த இனமக்களுக்கு மேலோட்டமான விவசாயப்பயிற்சியும் ஆதரவும் வழங்கப்பட்டது. ஆனால் அதே நேரம் மனிதவளத்துக்கான அமைச்சும், போகோர் விவசாயப் பல்கலைக்கழகமும் இணைந்து (Bogor Agricultural University) , அவர்கள் மேற்கொள்ளும் பயிர்ச்செய்கைளின் தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை அந்த மக்களுக்கு தற்போது வழங்கிவருகின்றன. சுற்றுச்சூழல் உல்லாசத்துறையை (ecotourism) விருத்திசெய்வதற்கான வாய்ப்புகளும் தற்போது அங்கே தென்படுகின்றன.
“அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருண்மிய வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏதுவான ஒரு சூழல் தற்போது இங்கே உதயமாகி இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பீடத்தைச் சேர்ந்த றீனா மாடியானா (Rina Mardiana) தெரிவித்தார்.
ஓகொணிகளுக்குரிய காடுகள் உள்ளிட்ட, பூர்வீகக்குடிமக்களால் பாதுகாக்கப்படும் 5 காடுகள் தொடர்பாக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, உள்நாட்டு அரசியலில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாக உதவியிருக்கின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்துவமான குழுக்களை உருவாக்குவதன் மூலம் இந்தோனேசியத் தீபகற்பத்தின் மேற்கத்தைய தொங்கலில் இருக்கின்ற சுமத்திராத் தீவில் வாழ்கின்ற ஒரு பூர்வீகக்குடியைச் சேர்ந்த பெண்கள் காடுகளைப் பேணிபாதுகாக்கும் செயற்பாட்டில், பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறான ஒரு சூழல் பரவலாகக் காணப்படவில்லை. காட்டிலிருந்து பெறும் உற்பத்திப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பல சந்தர்ப்பங்களில் ஆண்களின் அனுமதி பெண்களுக்குத் தேவைப்படுகின்றது. “எடுத்துக்காட்டாகச் சொல்வதாயின் பெண்களது குரல்கள் இன்னும் முழுமையாகக் கேட்கப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும்” என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய அபி கீனா பொவாங் மனாலு (Abby Gina Boang Manalu) தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டுமென்றால், மழைக்காடுகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டின் வேகத்தையும் அளவையும் அரசு கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இந்தோனேசியாவின் ஓர் அரசசார்பற்ற நிறுவனமான மூதாதையர் உரித்துகளைப் பதிவுசெய்யும் அமைப்பு (Ancestral Domain Registration Agency) வெளியிட்ட அறிக்கையின் படி 25.1 மில்லியன் ஹெக்ரேயர் (96, 912 சதுர மைல்கள்) அளவான வழமையான மழைக்காடுகளில் 3.2 மில்லியன் ஹெக்ரேயர்களே (12,366 சதுர மைல்கள்) அதாவது 12.7 வீதமான மழைக்காடுகளே இதுவரை உள்ளக அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
“அது போதாது” என்று ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராகப் பணிபுரிகின்றவரும் இந்தோனேசிய மக்கள் இயக்கங்கள் தொடர்பான நிபுணருமான ரானியா லீ (Tania Li) தெரிவித்தார். “தேவையான அளவு இந்த அங்கீகரிக்கும் செயற்பாடு நடைபெறவில்லை. இதுவரை செய்துமுடிக்கப்படாமல் இருப்பவை செய்யப்படும் அளவுக்கு அவை விரைவாக நடைபெற வேண்டும்.”
பாப்புவா பிரதேசத்தில் பாம் எண்ணெய், மரக்குற்றிகள் வெட்டுதல், சுரங்கச்செயற்பாடுகள் போன்றவற்றுக்கென ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற பல மில்லியன் ஹெக்ரேயர்கள் மழைக்காடுகளை லீ சுட்டிக்காட்டினார். அங்கே நீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் பிரிவினைப் போராட்டங்களின் காரணமாக பூர்வீகக் குடிமக்களின் நில உரிமைகள் ஒரு மிகச் சிக்கலான அரசியல் பின்புலத்தை எதிர்கொள்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இது ஒரு மிக முக்கிய நேரம்” என்று கூறினார் லீ. “உண்மையில் இந்தோனேசியா தங்களது காடுகளையும் பூர்வீகக் குடிகளையும் பாதுகாக்க விரும்புகிறதா? அல்லது அது இலாபத்தையும் அதிகாரத்தையும் தேடுகிறதா?”.
புதிய நிதி உதவிகள்
ஓகொணி இனத்தைச் சார்ந்த பூர்வீகக் குடிகளுக்கு மழைக்காடுகளுக்கான அங்கீகாரம் கிடைத்த பின்னரும் கூட, சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. மரக்குற்றிகள் தயாரிக்கும் நிறுவனமான ‘பாஸ்கா’ (PASKA) தான் ஏற்கனவே உறுதிமொழி அளித்தது போல அந்தச் சமூகத்துக்கு வீடுகளையும் கிணறுகளையும் கட்டத் தவறியிருந்தது. இதன் காரணமாக, ஓகொணி இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் 2019 இல் அந்த நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அந்த நிறுவனத்தின் உரிமம் காலாவதியானதன் காரணத்தினால் இப்போது அந்த நிறுவனம் அங்கு இயங்குவதில்லை. இருப்பினும் அதன் பாதிப்புகள் இன்னும் உணரப்படுகின்றன. “அங்கு தண்ணீர் சேறுமயமாக மாறிவிட்டது. அங்கு மீன்களைக் காண்பது அரிதாகிவிட்டது” என்று 29 வயதான ஜூலியானுஸ் ஓகொணி (Julianus Ogoney) தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பாஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முன்வரவில்லை.
அங்கீகாரம் வழங்கும் செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்குப் பொறுப்பான அமைச்சு எம்மிடம் கருத்துத் தெரிவித்தது.
“பூர்வீகக் குடிமக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது” என்று அமைச்சின் மழைக்காட்டுத் திட்டத்தின் துணை இயக்குநரான யூலி பிறெசெற்யோ (Yuli Prasetyo) கூறினார். தமது நிலங்களை செயற்றிறன் மிக்க விதத்தில் எவ்வாறு
பாதுகாப்பது, நிர்வகிப்பது என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். “நாங்கள் அனைவரும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.”
கடந்த மே மாதத்தில், பன்னாட்டு நிதிவழங்குநர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 மில்லியன் டொலர்களை வழங்கும் நுஸன்ரறா நிதியத்தை (Nusantara Fund) அங்குரார்ப்பணம் செய்த பொழுது பூர்வீகக் குடிகளின் செயற்பாடுகளுக்கு ஒரு சிறப்பான உந்துதல் கிடைத்தது. இந்தோனேசியாவின் பூர்வீகக் குடிகளுக்கும் உள்நாட்டுச் சமூகங்களுக்கும் நேரடியாக கிடைக்கக்கூடிய விதத்தில் முதல் முதலாக ஏற்பாடுசெய்யப்பட்ட நிதியம் இதுவாகும்.
மேற்கு பாப்புவா பிரதேசத்தை மீண்டும் நாம் கவனத்தில் எடுக்கும் போது, பூர்வீகக் குடிமக்களுக்கான வலுவூட்டலைப் பொறுத்தவரையில் ஓர் புதிய யுகம் உதயமாவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த மாவட்டத்தின் முதல் பெண் தலைவியாக யுஸரீனா தெரிவுசெய்யப்பட்ட போது, ஆரம்பத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்த சில ஓகொணி இனமக்கள் சிலர் இப்போது அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.
“இந்தப் பணியைச் செய்வதற்குப் போதிய ஆற்றல் என்னிடம் இல்லை என்று ஆண் தலைவர்கள் கூறினார்கள்” என்று பலவண்ண ஆடையைத் தலையில் அணிந்தவராக, நாய்ப்பற்களால் ஆன மாலையில் கழுத்தில் போட்டுக்கொண்டு, தனது தாயாரால் கொடுக்கப்பட்ட கைகளால் நெய்யப்பட்ட சாரத்தை உடுத்துக்கொண்டு அந்த மழைக்காட்டின் மண் பாதையில் நடந்தபடி, யுஸரீனா கூறினார்.
“அவர்கள் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்குப் பதிலளிக்கவும் இல்லை. நான் மிகவும் கடுமையாக உழைத்தேன். “என்னிடம் கேள்வி கேட்பதை இப்போது அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.”
நன்றி: அல்ஜஸீரா