இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நாட்டின் இறைமைக்கு பாதகம்-அமைச்சர் அலிசப்ரி

148 Views

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நாட்டின் இறைமைக்கு பாதகம் என்பதால் நாம் எமது எதிர்ப்பை வெளியிட்டு நிராகரிப்போம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை எதிர்வரும் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், வெளிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அரசாங்க உயர்மட்ட குழுவொன்று நேற்றைய தினம் மீண்டும் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளன.

பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே அந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை இலங்கை முழுமையாக நிராகரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை எதிர்வரும் 6ஆம் திகதி கொண்டு வரப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே வெளிவகார அமைச்சர் தலைமையிலான குழு நேற்று ஜெனிவா சென்றுள்ளது.

அதேவேளை மேற்படி பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  மேற்படி பிரேரணை இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பதாக இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இலங்கையின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தவும் அமைச்சர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்க உள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு சென்றிருந்த அமைச்சர் தலைமையிலான மேற்படி குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயரஸ்தானிகரின்  அறிக்கைக்கு பதிலளித்ததுடன் சர்வதேச தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனையடுத்து அமைச்சர்  அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்திலும் பங்கேற்றார்.

அந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அமைச்சர் தலைமையிலான குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது.

Leave a Reply