பொருளாதார வீழ்ச்சி-காரணங்களை கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு அரசியல் காரணங்களால் அவ்வப்போது தேசிய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சுகளின் விடயதானங்களை வகுக்கும் போது, தேசிய நலனை புறக்கணிப்பது போன்ற காரணங்களால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கொள்கை ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட விதம் ஆகியன தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, நாட்டின் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பான அமைச்சுகள் மற்றும் தற்போது செயற்படும் அமைச்சுகளிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இதற்கு பல பொருளாதார நிபுணர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.