செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அவலங்கள் மற்றும் செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் உயரிய சபையில் விடயங்களை முன்வைக்கும் பொறுப்பு எமக்கு காணப்படுகிறது. இதுவரைகாலமும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஊடாக 584 மனித எழும்புக்கூடுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுமா ,இல்லையா என்பதை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அறிவிப்புக்களும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுத்தது. இருப்பினும் உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை.
முன்னாள் அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா தலைமையில் கமிலஸ் பெர்னாண்டோ, ஜெசீமா இஸ்மாயில், எம்.சி.எம். இக்பால் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு 1995 மற்றும் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மண்ணில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்த குழு காணாமல் போன 281 பேரின் விபரங்களுடன், செம்மணியின் விடயங்களையும் வெளிப்படுத்தியது.இந்த குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் இருந்து இதுவரையில் 584 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 57 எழும்புக்கூடுகள் கூட்டாக மீட்கப்பட்டுள்ளன. சுமார் 600 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுவரையில் அவை வெளியில் கொண்டு வரப்படவில்லை. காரணங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவுடன் மேற்கொள்ளப்பட்ட 3 ஆம் கட்ட ஆய்வுப்பணிகள் கடந்த 19 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. தடயவியல் தொடர்பில் எதிர்வரும் மாதாம் 30 ஆம் திகதி அறிக்கை தருமாறு பேராசிரியர் ராஜ்சோம தேவாவிடம் கோரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி முதற்கட்டமாக 09 நாட்களும், இரண்டாம் கட்டமாக 45 நாட்களும், மூன்றாம் கட்டமாக 56 நாட்களும் என்ற அடிப்படையில் 110 நாட்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170 பிற சான்று பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அரசாங்கம் அனுமதியளித்தது. ஆனால் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சர்வதேச இராஜதந்திரிகளுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.
செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொள்ளப்பட்டார்கள்.
கொக்கிளாய், மன்னார் – சதொச , மன்னார் – திருக்கேதீச்சரம், கிளிநொச்சி – கணேசபுரம் ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றும் அவை முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.கொக்கிளாய் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை வாய் பிளந்த வண்ணம் அடையளப்படுத்தப்பட்டன. ஒன்று அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது குற்றுயிருடன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இந்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை.
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும். அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும்.தென்னாபிரிப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
செம்மணி மனிதபுதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.



