அரசு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை திரிபுபடுத்தி எமக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது -சஜித்

250 Views

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் வடக்கிலும் தெற்கிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரிவித்து வருகின்றோம்அதைத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கியுள்ளோம். ஆனால், அரசு அதைத் திரிபுபடுத்தி எமக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை வெளியிட வக்கில்லாமல் அஞ்சுகின்ற அரசு, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் திரிவுபடுத் துவதும்,விமர்சிப்பதும் வெட்கக்கேடானது எனவும் அவர் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கிடையில் ஒருமித்த பண்புகள் காணப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலுக்கென அரச கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விஞ்ஞாபனம் வெளியிடவில்லை. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்தே அரசு சமாளிக்கின்றது.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. அதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கென விஞ்ஞாபனத்தை வெளியிட அரசு அச்சமடைகின்றது.

இப்படிப்பட்ட அரசு எமது கட்சியின் விஞ்ஞாபனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனமும் ஒத்துப்போகின்றது எனத் தேர்தல் மேடைகளில் விமர்சிப்பது வெட்கக்கேடானது.

வடக்குஇ கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் ஆணையைப் பெறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

எமது கட்சி நாட்டிலுள்ள சகல மக்களினதும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் ஆணையைப் பெறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் வடக்கிலும் தெற்கிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரிவித்து வருகின்றோம்.

அதைத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கியுள்ளோம். ஆனால், அரசு அதைத் திரிபுபடுத்தி எமக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply