தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதற்காக அந்த மக்களின் பிரதிநிதிகளாக எமது பூரணமான பங்களிப்பு தொடரும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (15) அதிகாரப்பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும்ரூபவ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்,
தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருக்கின்றோம். அதுவே எமது இலக்காகவும் உள்ளது.
அந்த இலக்கை அடைவதற்காக நாம் கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி வந்துள்ளோம். எதிர்காலத்திலும் அவ்விதமான செயற்பாட்டையே பின்பற்றுவதற்குள்ளோம்.
அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக எம்மை அழைத்துள்ளார். நாம் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதில் பங்கேற்கவுள்ளோம்.
அத்துடன் அச்செயற்பாடு முன்னகர்த்தப்படுவதற்கான அனைத்துவிதமான பங்களிப்பினையும் நாம் செய்வோம். எம்மைப்பொறுத்தவரையில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்தாது விட்டவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தயாரில்லை.அதேநேரம், தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான வழிகளை தேடும் நிலைமைகளே காணப்படுகின்றது.
ஆகவே, இந்தச் சந்தர்ப்பம் இனப்பிரச்சினை தீர்வைக் காண்பதற்கு உகந்தது அல்லதென்று கூறமுடியாது. பொருளாதார ரீதியாக நாடு முன்னேற வேண்டுமாயின் உள்நாட்டில் அமைதியும்ரூபவ் நிரந்தரமான சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அடிப்படையான விடயமாகும்.
அந்தவகையில், தற்போதைய சூழலில் இதயசுத்தியுடனான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு தீர்வினை எட்டுவதில் எவ்விதமான பிரச்சினையும் கிடையாது.
பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்படுகின்ற அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட இணக்கப்பாடுகள் பாராளுமன்றத்தின் அங்கீகரத்தைப் பெற்று சர்வஜனவாக்கெடுப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் மீண்டும் மீளப்பெறமுடியாத வகையில் நிரந்தரமாக காணப்பட வேண்டும்.
அதற்கு தென்னிலங்கை தலைவர்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். இதற்காக நாம் எமது பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம். ஆகவே அரசாங்கத் தரப்பினரும் இந்த விடயத்தில் நேர்மையாக நாட்டின் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கருதி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.
முஸ்லிம் மக்களுக்காக விட்டுக்கொடுப்புக்குத் தயார்
இதேவேளை, இனப்பிரச்சினை தீர்வுதொடர்பில் தொடர்பில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தப்பட்டு இணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றவிடயம் வலியுறுத்தப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது சம்பந்தன் கூறியதாவது, முஸ்லிம் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடயங்களில் நியாயமாக, நீதியாக நடந்து கொள்வதற்கு நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம்.
தந்தை செல்வா காலத்திலிருந்தே தமிழ் பேசும் சமூகமாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற விடயம் இலங்கை தமிழரசுக்கட்சியினால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் மாற்றமடையவில்லை. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நாம் அறிந்துள்ளோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் நாம் சாதகமான முறையில் சிந்திக்கின்றோம். அத்துடன்ரூபவ் அவர்களின் உரிமைகள் சம்பந்தமான விடயத்தில் நாம் ஒருபோதும் அநீதி இழைக்க மாட்டோம். அவர்களுடன் விட்டுக்கொடுப்புக்களைச் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.