இறைமையுள்ளவர் நாமென ஈழத்தமிழர் ஒன்றாக எழும்வரை பல சரத்வீரசேகராக்கள் தோன்றுவர் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 234
ஈழத்தமிழரின் நிலத்தை ஆக்கிரமித்து மண்ணின் மேலுள்ள மக்களின் இறைமைய இல்லாதொழிக்கும் அரசியல் நோக்கிலும், ஈழத்தமிழரின் தொன்மை மிகு ஆலயங்களை அழித்து அல்லது ஆக்கிரமித்து பௌத்த விகாரைகளை நிறுவுதல் மூலம் பண்பாட்டு இனஅழிப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் அடையாளத்தையே இழக்க வைக்கும் போக்கிலும், ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை இந்த பௌத்த விகாரைகள் அமைக்கும் செயலால் ஆக்கிரமிப்பதால் அவர்கள் தாங்கள் வாழ்ந்த மண்ணில் பிக்குகளின் மேலாண்மையில் வாழஇயலாது வாழ்வுக்காக வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவதால் ஈழத்தமிழின இனத்துடைப்பும் இலகுவாகிறது பிக்குகளின் மகிழ்ச்சியும் அளப்பரியதாகிறது. இவ்வாறு ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடிக்கும் அரசியல் சூரனாக ரணில் விக்கிரமசிங்காவைச் சிங்கள பௌத்த பேரினவாதிகள் இன்று கொண்டாடுகின்றனர்.
சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் போக்கில் ரணில் ஆட்சியில் இவ்வாரத்திலும் தமிழரின் தொன்மை மிகு பழம் அரசஅடையாளங்களைக் கொண்டிருக்கும் கந்தரோடை ஆலயங்களிலும், தொடர்ச் சியாகக் சோழ ஆட்சியின் எச்சங்களைக் கொண்டுள்ள கிளிநொச்சி ஆலயங்களிலும் அவற்றை பண்பாட்டு இனஅழிப்புக்கு உள்ளாக்குவதற்கான வேலைகள் சிறிலங்கா அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு விட்டன.
அதே வேளை சிறிலங்காப் பாராளுமன்றத்தில் அதன் தேசியப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகரா திருகோணமலையில் பௌத்த பிக்குகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உள்ள விகாரைகளில் நடைபெறவுள்ள “சியாம் நிக்காய்” வழிபாட்டை ஈழத்தமிழர்கள் தடுக்கப் போகின்றார்கள் என்ற மதவெறியைத் தூண்டும் தகவலை அறிவித்து அதே நேரத்தில் அப்படித் தடுத்தால் பெரும் அழிவு ஏற்படும் என இனங்காணக் கூடிய அச்சத்தை சிங்கள மக்களைத் தூண்டுவதன் மூலம் தமிழர்களுக்குத் தோற்றுவிக்கும் இனஅழிப்புத் தூண்டல் உரையையும் நிகழ்த்தி மீண்டும் ஒரு ஈழத்தமிழின அழிப்புக்கான அறைகூவலை விடுத்துள்ளார். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த அப்பட்டமான மதவெறிப் பேச்சுக்கு ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் எந்த எதிர்ப்பேச்சும் பேசாத நிலையில் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தான் எதிர்ப்பு உரையாற்றியதும் அல்லாமல் திருகோணமலையில் வெள்ளை மணல் பகுதியில் உள்ள 900 ஏக்கர் நிலப்பரப்பை மாபிள் கடற்கரையில் இருந்து கருமலையூற்று வரையில் விமானநிலையம் அமைக்கவென சிறிலங்கா நில அபகரிப்புச் செய்ய முற்படுவதையும் கண்டித்துள்ளார். இவை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இனியும் ஈழத்தமிழர் களுக்கான பிரதிநிதித்துவக் குரலாகச் செயற்பட மாட்டார்கள் என்ற உண்மையை மீளவும் வெளிப்படுத்தி அவர்களின பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெளியேற்றமே ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதிக்கான இன்றைய நிபந்தனையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் நடைமுறையில் உள்ள இந்த நில அபகரிப்புக்களையோ பண்பாட்டு இனஅழிப்புக்களையோ தடுக்க பாராளுமன்றத்தில் தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் பேசநடுங்கி எதுவுமே செய்ய இயலாத நிலையில் உள்ள ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேசவென ஓடோடிச் சென்ற போதும் அவர்கள் ஈழத்தமிழர் இறைமையுள்ள மக்கள் என்ற அடிபப்டையில் எதுவுமே பேசாத நிலையில் ரணிலின் அரசியல் நாடகமான இந்தப் பேச்சுவாரத்தையும் இருமணி நேரத்துடன் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் நாம் இறைமையுள்ள மக்கள் என்ற உரிமையுடன் தேசமாக எழுந்துவிட்டால் சரத் வீரசேகராக்கள் பலர் வருவர் என்பதும் பேச்சுக்கள் பயன்தராது என்பதும் உறுதி.
இதனாலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களின் இறைமையின் அடிப்படையில் தீர்வு அணுகப்படாததன் விளைவே என்பதை உலகுக்கு உணர்த்தி, ஈழத்தமிழர்களைத் தன்னாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்த இயலாத எல்லைகளைக் கொண்ட மக்களாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துச் சிறப்புப் பிரதிநிதியை நியமித்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென ஐ. நா. வின் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தினார்.
இவ்விதம் ஈழத்தமிழர்களை உலகநாடுகளும் அமைப்புக்களும் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் கனடாவிலும் வலுப்பெற்று வருகிறது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் அந்த மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தான் 21ம் நூற்றாண்டின் மிகக் கொரூரமான இனஅழிப்பு என்று உலக வரலாறு பதிவு செய்து விட்ட அந்த முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் இருந்து தப்பி வந்த இளையவர் என்று உலகுக்குச் சாட்சியம் பகன்று சிறிலங்காவின் அந்த மனிதவதையை உலகுக்கு வெளிப்படுத்தும் “தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம்” ஒன்ராரியோவிலும் உலகமெங்கும் இம்மாதம் 12 முதல் 18வரை நினைவுகூரப்பட உள்ளதை அறிவித்து உண்மைக்குச் சான்று பகரவும் நீதிக்குக் குரல் கொடுக்கவும் அனைத்து உலகத் தமிழர்களையும் அழைத்துள்ளார். கூடவே புலம் பதிந்து வாழும் நாம் அனைவரும் ஒன்றுபட்டாலே ஈழத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை சிறிலங்கா நடத்தாதவாறு தடுக்கலாம் என்ற அரசியல் நடைமுறை எதார்த்தத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகத் தமிழர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கூடவே புலம் பதிந்து வாழும் தமிழர்கள் இந்த இனப்படுகொலைகளால் பாதிக்கப்பட்டே அரசியல் புகலிடம் பெற்றவர்கள் என்ற வகையில் அந்தக் கொடுமைகள் இன்றும் இலங்கையில் வேறு வேறு வடிவில்; தொடர்வதால் அவற்றை உலகநாடுகள் தடுத்து நிற்பாட்டும் வரை மன அழுத்தங்கள் உள்ளவர்களாகவே வாழ்வதால் வாழும் நாடுகளுக்கான குடிமைக்குரிய முழுப்பங்களிப்பையும் செய்ய முடியாது தவிக்கின்றனர் என்ற எதார்த்த நிலையையும் எடுத்துக் கூறி புலம்பதிந்த தமிழர்களின் உளவியல் நலனுக்கும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகக் கருதித் தீர்க்கப்பட வேண்டியதாகப் பலநிலைகளிலும் உள்ளது என்கிற அரசியல் எதார்த்தத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் 2019 இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 2021இல் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு 104ம் இலக்கச் சட்டமாகப் பதிவாகி இன்று ஒன்ராரியோ மாகாணத்தின் சட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இளையவர்களின் இந்த வெற்றி கனடாத் தமிழர்கள் உடைய கூட்டொருங்குச் செயற்பாட்டிற்கான பெருவெற்றி என்பதில் சந்தேகமேயில்லை.
அதே வேளை கனடாவுக்கு அடுத்தாக அதிக அளவு ஈழத்தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் இதுவரை சட்டரீதியாக ஈழத்தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்று கட்டமைக்கப்படாது இருப்பதன் மூலகாரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் பிரித்தானியாவில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஈழத்தமிழரை இறைமையுள்ள மக்களாகவோ அல்லது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை இனஅழிப்பு என்றோ ஒருங்கிணைந்து வெளிப்படுத்தத் தயங்குவதேயாகும் இதே போக்குத்தான் ஈழத்து அரசியல்வாதிகளிலும் உள்ளது.
எனவே இனியேனும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை காலனித்துவ பிரித்தானிய அரசால் தீர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய இறைமைப் பிரச்சினை என்ற உண்மையைத் தாயகத் தமிழ் அரசியல்வாதிகளும் இலண்டன் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி இன்று உருவாகியுள்ள வாய்ப்புக்களை ஈழத்தமிழர் இறைமை மீளப் பயன்படுத்த வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.