உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கும் பிரித்தானியா

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கும் இங்கிலாந்து | Tamil News

உக்ரைன் படையினருக்கு 250 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஸ்ரோம் சடோவ் எனப்படும் நவீன ஏவுகணையை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் கடந்த வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆயுதம் மூலம் உக்ரைன் தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் ஆரம்பமாகிய சில மாதங்களில் அமெரிக்கா தனது ஹிமாஸ் வகை பல்குழல் ஏவுகணை செலுத்திகளை பெருமளவில் வழங்கியிருந்தது. 80 கி.மீ தூரவீச்சுக் கொண்ட இந்த ஏவுகணைகள் களமுனைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட போதும்> அவை தற்போது அதிக பலனை கொடுக்கவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

ரஸ்ய படையினர் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் புதிய இலத்திரனியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருவதால் ஹிமாஸ் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை இந்த நிலையில் பிரித்தானியா நீண்ட தூரவீச்சக் கொண்ட ஏவுகணையை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் இந்த ஏவுகணைகள் விமானத்தில் இருந்து ஏவப்படக் கூடியது என்பதால் உக்ரைனின் வான்படையினர் தமது வான்பரப்பில் இருந்தே ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதால் ரஸ்யாவின் வான் எதிர்ப்பு தாக்குதல்களில் இருந்து தப்ப முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஏவுகணைகள் ஏற்கனவே உக்ரைனுக்கு அனுப்பபட்டுள்ளதால் உக்ரைனின் வலிந்த தாக்குதலுக்கு அது வலுச்சேர்க்கும் என நம்பப்படுகின்றது. இந்த ஏவுகணைகள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் படையினரால் ஈராக்> லிபியா போன்ற நாடுகளில் நேட்டோ படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருந்தன.