மலையகத்தின் உணவுப் போராட்டம் | துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால அதிருப்தி நிலைமைகள் பல்வேறு துறைகளிலும் தாக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையானது நாட்டின் அபிவிருத்தியை மென்மேலும் மழுங்கடிப்பதாகவுள்ளது. இதனிடையே இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்களிடையே மந்த போஷணை மேலோங்கி வருவதாக ஆய்வுகள் பலவும் வெளிப்படுத்துகின்றன. இதன் பாதக விளைவுகள் பல்வேறு மட்டங்களிலும் எதிரொலிக்கும் நிலையில் மலையக சமூகமும் இதனால் பெரும் பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டிய அபாயநிலைக்கு உள்ளாகியுள்ளது. வருமான பற்றாக்குறைக்கிடையே பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இம்மக்களுக்கு, மூன்று வேளை உணவு என்பது இப்போது ஒரு கனவாகி இருக்கின்றது. ஒரு வேளை உணவுக்கே இவர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கும் நிலையில் நிறையுணவு கேள்விக்குறியாகியுள்ளதால் மலையகத்தில் மந்த போஷணைக்கு உள்ளாவோர்களின் தொகை துரிதமாக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. எனவே இதிலிருந்தும். மீட்டெடுக்க முறையான வேலைத்திட்டங்களை  கற்றறிவாளர்களின் பங்களிப்புடன் அரசியல்வாதிகள் முன்வைத்து, அரசாங்கத்தை வலியுறுத்தி இவற்றை சாதகமாக்கிக் கொள்ள முற்படுதல் வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு இது போதாத காலமாகும். பல பக்கங்களில் இருந்தும் இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியே மேலோங்கி நிற்கின்றது. சர்வதேச நாணய நிதியமும் ஏனைய சர்வதேச நாடுகளும் இலங்கையின் செல்நெறி தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்ற நிலையில் கடன் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் பின்னடித்து வருகின்றன. இலங்கை மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளதையே இதிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனிடையே இன்றைய இளைஞர்கள் ஆட்சியாளர்களின் பிற்போக்கான செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளதோடு அதற்கெதிராக கோஷமெழுப்பியும் வருகின்றனர். அத்தோடு இன்னும் சில இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளிலும் அதிகமாகவே களமிறங்கியுள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஐந்து மாதங்களில் 2,88,645 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிப் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2021 ம் ஆண்டில் 3,82,506 கடவுச்சீட்டுக்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டமையும் தெரிந்ததேயாகும்.
இலங்கையின் நெருக்கடி நிலையானது தொழிற்றுறைகள், வர்த்தகம், கல்வி, இயல்பு வாழ்க்கை, விவசாயம், சமூக நிலைமைகள் என்று பல்வேறு விடயங்களிலும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கை மோசமான பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில் இதிலிருந்தும் மேலெழும்புவதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டியேற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முறையான முகாமைத்துவக் கொள்கை, திட்டமிடல், அர்ப்பணிப்பு, ஊழலின்மை எனப்பலவும் பொருளாதார மேம்பாட்டிற்கு வலுச் சேர்ப்பதாக அமையும். இதேவேளை நாடு இக்கட்டான நிலையை அடைந்துள்ளபோதும் அரசியல்வாதிகள் இதிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் வெறுமனே வாய்ச் சொல்லில் வீரம் காட்டி வருவதாக மக்களிடையே பலமான குற்றச்சாட்டு ஒன்று இருந்து வருகின்றது. இலங்கையின் வறுமை நிலை உணவுப் பஞ்சம், உணவுத் தட்டுப்பாடு என்பவற்றுக்கு வித்திட்டுள்ளது. இது திடகாத்திரமற்ற சமூக உருவாக்கத்திற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது.  மனித வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பற்றாக்குறை நாட்டில் பெரும்பாலானோரை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் இதனால் அதிகமான சவால்களை  சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் மாதங்களில் உணவுத்தட்டுப்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் இந்நிலை மேலும் இறுக்கமடையக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிற்கமைய ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் பத்து பேருக்கு ஒருவர் மந்த போஷணைக்கு உள்ளாகியுள்ளதாக அறிந்துகொள்ள முடிகின்றது. இதேவேளை பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளில் பத்து பேருக்கு இருவர் மந்த போஷணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஆய்வு வலியுறுத்துகின்றது.             இதனிடையே இலங்கையில் 53  பிள்ளைகளில் 11 பிள்ளைகள் மந்த போஷணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களில் நான்கு பேர் அதிகளவிலான மந்தபோஷண நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் மற்றுமொரு ஆய்வு புலப்படுத்துகின்றது. இது மோசமான ஒரு வெளிப்பாடாகும் என்பதனை மறுப்பதற்கில்லை.சிவப்பு எச்சரிக்கைஉணவுத் தட்டுப்பாடு, மந்த போஷணை குறித்து நாம் பேசுகின்றபோது மலையக மக்கள் தொடர்பில் நாம் அதிகமாகவே கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. இம்மக்களின் வருமான மட்டம் குறைந்து காணப்படுகின்ற நிலையில் இவர்கள் உணவு உள்ளிட்ட ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றமை யாவரும் அறிந்ததேயாகும். தொழில் மூலமான வருமானத்தைக் காட்டிலும் மாற்று வருமானம் இவர்களுக்கு இல்லாதுள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் கடந்தகால நுகர்வோர் நிதி அளவைப்படி பெருந்தோட்ட மக்கள் குறைந்த வருமானத்திற்கு மத்தியில் உணவிற்கே அதிகமான தொகையினை செலவு செய்வதாக தெரியவருகின்றது. இதன்படி நகர்ப்புறத்தினர் உணவுக்காக 258.49 ரூபாவையும், கிராமத்துறையினர் 191.16 ரூபாவை யும், தோட்டத்துறையினர் 307.77 ரூபாவையும் செலவிடுவதாக அறியமுடிகின்றது. இதேவேளை உணவல்லாத விடயங்களுக்கு நகரத்துறையினர் 296.39 ரூபாவையும், கிராமத் துறையினர் 133.37 ரூபாவையும், தோட்டத்துறையினர் 187.37 ரூபாவையும் செலவிடுகின்றமையும் நோக்கத்தக்கதாகும். இதேவேளை உணவிற்காக அதிகமாக செலவிடுகின்ற ஒரு வகுப்பினரின் வாழ்க்கைத்தரம் எத்தகையதாக இருக்கும் என்பதனை உய்த்துணர வேண்டுமென்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் வறுமை நிலை குறித்து நோக்குகையில் 1990,91 இல் நகரத்துறை வறுமை 16.3, 1995,96 இல் 14.0 , 2001,02 இல் 7.9,  2012,13 இல் 2.1 வீதமாக அமைந்திருந்தது. மேற்படி ஆண்டுகளில் கிராமியத்துறை வறுமை முறையே  29.4, 30.9, 21.7, 9.6 வீதமாக அமைந்திருந்தது. இதனிடையே தோட்டத்துறை வறுமை நிலையானது 1990,91 இல் 20.5, 1995,96 இல் 38.4, 2001,02 இல் 30.0, 2012,13 இல் 10.9 வீதமாக வறுமைநிலை அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலும் பெருந்தோட்டத் துறை வறுமையானது இலங்கையின் வறுமையைக் காட்டிலும் அதிகரித்த வீதத்தினையே  வெளிப்படுத்தி இருந்தது. இவற்றுக்கும் மத்தியில் பெருந்தோட்ட மக்களிடையே மந்தபோஷண நிலைமைகள் ஆரம்பகாலம் தொட்டே அதிகரித்த போக்கினையே வெளிப்படுத்தியுள்ளன. 1976 இல் இடம்பெற்ற ” இலங்கை போஷாக்கு அளவீடு” தகவலின்படி கிராமிய சிறுவர்களை விட தோட்டப்புற சிறுவர்களே பெருமளவு நீடித்த போஷாக்கின்மையாலும், குறை போஷாக்கினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது. தோட்டப் பகுதிகளில் கலோரியளவில் உணவு நுகர்ச்சி சராசரிக்கு மேலாக இருப்பினும், புரத மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உணவு நுகர்ச்சி மிகமிகக் குறைவாக இருப்பதனால் அவர்கள் நோய்கள் பலவற்றுக்கும் ஆளாவதாகவும் ஆய்வு வலியுறுத்தியது.
இதேவேளை 1000 உயிருடனை பிறப்புகளுக்கான சிசு மரணங்கள் 1972 இல் பெருந்தோட்டங்களில் 100.6 ஆகவும், 1973 இல் 103.8 ஆகவும், 1974 இல் 135.1 ஆகவும் காணப்பட்டது. அத்தோடு 1000 உயிருடனை பிறப்புகளுக்கான பிரசவகால இறப்புக்கள் 1972 இல் 2.0, 1973 இல் 3.6, 1974 இல் 6.7 ஆக பெருந்தோட்டங்களில் காணப்பட்டது. போஷாக்குக் குறைபாட்டின் எதிரொலியாகவும் இவ்விபரீதங்கள் இடம்பெற்றிருந்தன. சமகாலத்திலும் தேசிய ரீதியில் அல்லது ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுமிடத்து பெருந்தோட்ட நிலைமைகள் பல வழிகளிலும் திருப்தி தருவதாக இல்லை. எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரிக்குமென்றும் இதனால் பட்டினியால் சிலர் உயிரிழக்க நேரிடுமென்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையானது தோட்டத்துறையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று கருதப்படுகின்றது.

பயனாளிகள் தெரிவு

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு கை கொடுப்பதில் இந்தியாவின் பணி மகத்தானதாகும். தூத்துக்குடியில் உள்ள யாசகர் கூட தன்னாலான உச்சகட்ட உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தமை நெஞ்சை உருக்கும் நிகழ்வாகும். இதனிடையே தமிழக மக்கள் தமது வியர்வையைச் சிந்தி உழைத்த பணத்தில் இலங்கை மக்களுக்கு அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வைத்திருந்தனர். எனினும் இந்தப் பொருட்களை உரிய பயனாளிகளிக்குப் பகிர்வதில் இழுபறிகள் காணப்படுவதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் ரீதியான முன்னெடுப்பு நியாயமான பொருட்பகிர்விற்கு இடையூறாக இருப்பதாகவும் கிராமசேவகர் சங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக நிவாரணப் பொருட்கள் மலையக தோட்டப் புறங்களில் வாழும் அனைத்து வீடுகள் மற்றும் தற்காலிக கூடாரங்களில் உள்ள அனைவருக்கும் நூற்றுக்கு நூறு வீதம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். என்னதான் கூறியபோதும் இந்திய  உணவுப்பொருட்கள் உரிய பயனாளிகளை இன்னும் உரியவாறு சென்றடையவில்லை என்பதையும் கூறியாதல் வேண்டும். உண்மைகள் கசப்பானவை என்றாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பெருந்தோட்ட சிறுவர்களின் மந்தபோஷணை நிலைமையானது அவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். இத்தகைய நிலைமைகள் “மலையகம் கல்விமையச் சமூகமாக உருவெடுப்பதன் மூலமே பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்” என்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரம் போன்றவர்களின் கனவிற்கும் இடையூறினை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையானது பின்தங்கிய நிலையிலுள்ள மலையக சமூகத்தை மேலும் அதளபாதாளத்திற்கு இட்டுச் செல்லவே வழிவகுப்பதாகின்றது. மந்தபோஷணை நிலையானது சிறுவர்களிடையே பலவிதமான நோய் நொடிகள் ஏற்பட வழிவகுப்பதோடு மரணம் வரையிலும் கூட அவை இட்டுச் செல்லும் என்பதே உண்மையாகும்.
நாட்டில் மந்தபோஷணை அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் உணவு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும்  வைத்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். சோறு, வல்லாரை, முருங்கை உள்ளிட்டகீரை வகைகள், முட்டை, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள் நிற மரக்கறிகள், நெத்திலி, பால், பப்பாளி, ஜம்பு உள்ளிட்ட பழவகைகள் எனப்பலவற்றையும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மந்தபோஷணையில் இருந்தும் அவர்களை விடுவிக்க முடியும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய விடயங்கள் குறித்தும் பெருந்தோட்ட மக்கள் விழிப்புடன் செயற்படுதல் வேண்டும். அத்தோடு மந்தபோஷணையில் இருந்தும் மீட்சிபெற மலையக அரசியல்வாதிகள் முறையான வேலைத்திட்டங்களை துறைசார் கற்றறிவாளர்களின் பங்களிப்புடன் முன்வைத்து அரசாங்கத்தை வலியுறுத்தி அவற்றை சாதகமாக்கிக் கொள்ள முற்படுதலும் வேண்டும்.இது ஒரு முக்கிய சமூகக் கடமையாகும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நாளைய நாட்டினைப் படைப்பதற்கு திடகாத்திரமான சிறுவர் சமூகம் அவசியமாகும் என்பதனை எவரும் மறந்து விடுதல் கூடாது.