ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கவே அவசரகால சட்டம்; சுமந்திரன் குற்றம்சாட்டு

104 Views

ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கவே அவசரகால சட்டம்ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கவே அவசரகால சட்டம்: அவசரகால சட்டத்தை சாதகமாக்கி இரவோடு இரவாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே ஜனாதிபதி நினைக்கின்றார். நாட்டை இருட்டுக்குள் வைத்திருக்கவே அவர் முயற்சிக்கின்றார். உணவு மாபியாவை கையாள அவசரகால சட்டத்தை கொண்டு வருவதாக கூறி ஜனநாயக அடக்கு முறையை கையாள அரசு திட்டமிடுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எம்.ஏ .சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழே 17ஆவது பிரிவிலே இரண்டாம் பாகம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கொண்டு ஜனாதிபதி அவசரகால நிலைமைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆனால் அவசரகால சட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய முறைமை ஒன்று உள்ளது, பாராளுமன்ற முறைமையின் கீழ் இதனை செய்ய வேண்டும். ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. இவற்றை கையாள வெவ்வேறு சட்டங்கள் எம்மிடத்தில் உள்ளன .

1971 ஆம் ஆண்டில் இருந்தே அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளது. பல்வேறு சந்தர்பங்களில் அவசரகால நிலைமை கையாளப்பட் டு கைதுகள் இடம்பெற்றன, யுத்த காலத்தில் கூட அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தவறான செயல்கள் இடம்பெற்றன . இப்போதும் உணவு மாபியாவை கையாள அவசரகால சட்டத்தை கொண்டுவருவதாக கூறி ஜனநாயக அடக்குமுறையை கையாள அரசாங்கம் நினைக்கின்றது. இதன்மூலம் ஜனநாயக உரிமை, ஏனைய ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதே எமது குற்றச்சாட்டு . இதனை அரசாங்கத்தில் இருக்கும் எவரேனும் இல்லையென மறுக்க முடியுமா?

இன்று பாராளுமன்றத்தில் அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்தியதை ஆதரிக்குமாறும், அதற்கு இணங்குமாறும் அரசால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. உணவு விநியோகம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு என்பவை தொடர்பில் எம்மிடத் திலும் பாரிய அக்கறை உள்ளது. ஆனால் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தித்தான் இதனை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியை கேட்டால் இல்லை என்றே கூறவேண்டும்.

ஏனென்றால் உணவுப்பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு மற்றும் உணவு உணவுப்பொருட்களை பதுக்கி வைப்பவை, உணவுப்பொருட்களை மக்களுக்கு விற்காது தடுப்பது அல்லது விற்காமல் மறுப்பது போன்ற விடயங்களை எல்லாம் வேறு சாதாரண சடங்களில் கீழ் செய்ய முடியும். அதற்கான பிரிவுகளும் உள்ளன. இவற்றை கையாளும் சட்டதிட்டங்களும் நாட்டில் ஏற்கனவே அமுலில் இருக்கின்றன.

அத்தியாவசிய சேவைகள் என கூறி, ஏதேனுமொரு சேவையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றால் அதற்கெண்டு ஒரு சட்டமே இருகின்றது. அதன் கீழே பிரகடனப்படுத்தலாம். பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே 17ஆ வது பிரிவிலே பாகம் மூன்றிலே அதற்கான இடம் இருக்கின்றது. பாகம் இரண்டை நடைமுறைக்கு கொண்டுவருகின்ற போதுதான் நாடு அவசரகால நிலைக்குள்ளே தள்ளப்படுகின்றது. அப்படிச் செய்யாமல் அதற்கு அடுத்த பாகத்திலே இருக்கின்ற இதற்கென்ற விசேட அதிகாரத்தை ஜனாதிபதி உபயோகித்திருக்க முடியும்.

ஆனால் நாட்டை அவசரகால நிலைமையின் கீழ் கொண்டுவரும் உண்மையான நோக்கம் இப்படியான ஒரு அவசரகால நிலையை பிரகடனப்படுத்திவிட்டால் அதன் கீழான அவசரகால சட்ட விதிகளை ஜனாதிபதி இரவோடு இரவாக கொண்டுவர முடியும். அதனை இந்த பாராளுமன்றம் கேள்விக்கு உற்படுத்த முடியாது, இந்த பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை மாதத்திற்கு மாதம் அவசரகால நிலைமை அனுமதிப்பதா இல்லையா என்ற கேள்வி மட்டும் தான். தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரத்திலேயே சொல்லப்பட்டுள் ள விதத்திலே ஒரு கபடமான எண்ணம் இருப்பது தெளிவாக எமக்கு தெரிகின்றது. நாட்டிலே விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை, ஆனால் அதனை அவசரகால பயன்படுத்தித்தான் செய்ய வேண்டுமென்பதனை நாங்கள் கண்டிக்கின்றோம்,நிராகரிக்கின்றோம் என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply