ஜனாதிபதி  எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை- பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம்  பிரதமர் கோரிக்கை

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். இராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது வரையில்  33 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை கூறியுள்ளது.