இலங்கைக்கு உதவும் நாடுகள் ஈழத்தமிழருக்கு உதவ மறுப்பதேன்? | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 190

129 Views

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 190

இலங்கைக்கு உதவும் நாடுகள் ஈழத்தமிழருக்கு உதவ மறுப்பதேன்?

சிறிலங்காவில் தலைநகரான கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராசபக்சா பதவி விலக வேண்டுமென  மக்கள் 09.07. 22 இல் சனநாயகப் போராட்டம் ஒன்றைச் செய்ய முயல்கையில், கோட்டாபய ராசபக்ச சிறிலங்காவின் அரசியலமைப்பில் இல்லாத பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மேல்மாகாணத்துக்கு பொலிஸ் சுப்பிரிண்டனைக் கொண்டு பிறப்பித்து அரசியலமைப்பு வன்முறை செய்து தனது பதவியைத் தற்காலிகமாகத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றார்.

இச்செயற்பாடு சிறிலங்கா ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவை படைபலம் கொண்டு பெற்றுப் பழகிய பழக்க தோசத்தின் தொடர்ச்சி என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்கள் 22.05. 1972 முதல் சிறிலங்காவின் படைபல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சோல்பரி அரசியலமைப்பு வன்முறைப்படுத்தப்பட்ட நிலையில் நாடற்ற தேசஇனமாக இன்று வரை அனுபவிக்கும் துன்பங்களுக்கு உரிய முறையில் உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் நீதி வழங்காது விட்டதன் விளைவாகவே சிறிலங்கா ஆட்சியாளர்கள் போர்க்கருவிகளுக்கும் படைகளைப் பராமரிக்கவும் பெருமளவு பணத்தைச் செலவு செய்து இன்றைய பொருளாதார நெருக்கடி தோன்றியது என்பது வெளிப்படையான உண்மை.
இன்று சிறிலங்கா அரசாங்கத்தை இன்றைய பொருளாதார நெருக்கடியில் நின்று மீட்கும் முயற்சிகளில் இந்தியா அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் மிகவும் அக்கறையாகவும் ஆர்வமாகவும் ஈடுபட்டுள்ளமை உலகறிந்த உண்மை.
இதுவரை சிறிலங்கா உணவுத் தட்டுபாட்டுள்ளும் எரிபொருள் முடக்கநிலையிலும் இதுவரை முழுஅளவில் சிக்காது இந்திய கடன் உதவியே காப்பாற்றி வருகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் அனைத்துலக நாணய நிதியத்திடம் சிறிலங்காவுக்கான உதவிகளை வழங்குமாறு அழுத்தங்களை மேற்கொண்டு வருவதையும் அனைவரும் அறிவர். சிங்கள பௌத்த பேரினவாதிகளின்  எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், இந்தியா வழங்கி வரும் உதவிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்கிற வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டாலும் இலங்கையில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் அமைத்துள்ள உறுதியான வர்த்தகப் பொருளாதார கட்டமைப்புக்கள் வழி இலங்கையின் நிலத்திலும் கடலிலும்  சீனா இறைமையாளராகவும் உள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் பொருளாதார உறவுகள் வழி தானும் தன்னை நிறுத்துவது இந்தியாவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவையாக உள்ளது. அதுவும் அதன் இருப்பு ஈழத்தமிழர்களின் வடக்கு கிழக்கில் பலப்படும் பொழுதே இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக்கடலின்  தென்னிந்தியக் கரைகளையும் துறைமுகங்களையும் பாதுகாக்க முடியும். இது வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் ஆதரவை இந்தியா பெற வேண்டிய தேவையையும் இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை புலம்பதிந்த தமிழர்கள் இந்தியாவுக்கு எடுத்து விளக்க வேண்டும்.

அமெரிக்கா, சீனா இந்துமாக்கடலில் மேலாண்மை பெறுவதைக் குறைப்பதற்கான கட்டமைப்பாக உள்ள தனது குவாட் அமைப்புக்குள் அவுஸ்திரேலியா, இந்தியா,  யப்பான், பங்களாதேசு, மாலைதீவுடன் சிறிலங்காவையும் கொண்டு வருவதற்கு தனக்குச் சாதகமான ஆட்சியாளர்களை இலங்கையில் அமர்த்த முயற்சிப்பது நியாயமானதே. இதனால் வெளிப்படையாகவே இலங்கைக்கான அமெரிக்கத் தூதர், போராடும் காலிமுகத்திடல் கோட்டா கமப் போராட்டக்கார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் திரள்நிலையாகப் பெருகி வரும் போராட்ட உணர்வுள்ள மக்களை சனநாயக முறையில் பாதுகாக்க வேண்டும்  எனவும், படைகள் மக்கள் மேல் கண்டபடி தாக்குதல் நடத்தக் கூடாது எனவும், வெளிப்படையாகவே பேசி வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத் தலைவியும் சிறிலங்கா அரசாங்கம் போராடும் மக்களை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளார். ஆனால் ஈழத்தமிழர்க்கு மட்டும் இந்த நாடுகள் இவ்வாறு மனித உரிமைப்பாதுகாப்பு வழங்க மறுப்பதேன் என்பதைப் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் இந்நாடுகளிடம் கேட்க வேண்டும். அதுவும் எந்த இந்தியா ஈழத்தமிழர்கள் ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்திட ஆரம்பத்தில் உதவியதோ அந்த இந்தியா காலப்போக்கில் ஈழத்தமிழர்களின் போராட்ட உரிமையினை பேண வேண்டுமென்னும் தன் பொறுப்பை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்த காலத்தின் பின்னர் சரிவரச் செய்யவில்லை. இதுவே இந்திய ஈழத்தமிழர் உறவு சீர்குலையக் காரணமாகியது. 1987ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கைச்சாத்தான இலங்கை இந்திய உடன்படிக்கை இலங்கை தனக்குத் தேவையான இராணுவ நிதி உதவிகளை இந்தியாவிடம் கேட்டு அதற்குப் பதில் இல்லையென அமைந்தால் மட்டுமே வேறு நாடுகளிடம் செல்லலாம் என சிறிலங்காவின் இறைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்தாலும் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை மூலம் ஈழத்தமிழருக்கான நிதிப்பரவலாக்கலை சிறிலங்கா வழங்கி இந்த மாகாணசபை மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக அதிகாரப்பரவலாக்கலை செயய்லாம் என இந்தியா கருதியது.  ஆயினும் இன்று வரை இந்த இலங்கை இந்திய உடன்படிக்கையின் 13வது பிரிவு நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. அன்றிலிருந்து இன்று வரை 35 ஆண்டுகளில் ஈழத்தமிழினம் அடைந்த அரசியல் பரிணாமங்களைக் கவனத்தில் கொள்ளாது இன்றும் 13வது சரத்து  நடைமுறைப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் தமிழர்களின் மரியாதையான வாழ்வினை உறுதிப்படுத்தும் என இந்தியா அதனையே இன்றைய ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தீர்வாக முன்வைக்கிறது. கூடவே ஐக்கிய நாடுகள் சபையில் கூட இந்த 13 வது சரத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அதுவே தீர்வாகும் என உரைநிகழ்த்தவும் செய்தது. ஆயினும் ஈழத்தமிழர்களை அழைத்து அவர்களின் அரசியல் தீர்வாக எதனை இன்று எதிர்பார்க்கின்றார்கள் என சனநாயக ரீதியாக அறியவும் முயற்சிக்கவில்லை. இந்தச் சூழலில் இன்றைய நெருக்கடிநிலையில் பேருதவியாகச் சிறிலங்காவுக்கு உள்ள இந்தியா ஈழத்தமிழர்களின் மரியாதை வாழ்வு என எதனைக் கூறுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தி அதனை ஈழத்தமிழர்கள் எந்த அளவுக்கு ஏற்கின்றார்கள் எனப் புலம்பதிந்த ஈழத்தமிழர்களுடனும் தாயக ஈழத்தமிழர்களுடனும் உரையாடல்களை வளர்த்து அதன் அடிப்படையில் தனது அழுத்தங்களை சிறிலங்கா மேல் மேற்கொண்டு ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. இதனைச் செய்யுமாறு புலம்பதிந்த தமிழர்கள் இந்தியாவை வலியுறுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.

Tamil News

Leave a Reply