மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாகின்றன

கடந்த புதன்கிழமை (19) இரவு யேமனில் உள்ள பாடசாலையில் இலவச உணவுப் பொருட்களை பெறுவதற்காக கூடிய மக்களிடம் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லீம் மக்களின் புனித ரம்ழான் மாதத்தில் யேமனில் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உணவுப்பொருட்களை பெறுவதற்காக கூடிய மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஆயுதக் குழுவினர் வானத்தை நோக்கி சுட்டதே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஹச் பெருநாளை கொண்டாட கூடியவர்களிடம் ஏற்பட்ட தெரிசலினால் 2300 பேர் கொல்லப்பட்டடிருந்தனர்.

கடந்த ஆண்டு தென்கொரியாவில் ஹலோவீன் பண்டிகைக்கு கூடிய மக்களிடம் ஏற்பட்ட நெரிசலினால் 150 பேர் வரையிலும் கொல்லப்பட்டிருந்தனர்.

அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற கூட்ட நெரிசலினால் 135 பேர் கொல்லபட்டிருந்தனர். அவர்களில் 40 பேர் சிறுவர்கள்.

2013 ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 115 பேர் உயிரிழந்திருந்னர்.