கடந்த 2016ம் ஆண்டு முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அவுஸ்திரேலிய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. இதனால் இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தொண்டு உதவிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மெல்பேர்னை மையமாகக் கொண்டு இயங்கும் புகலிடக் கோரிக்கையாளர் வள மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-16ல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஆதரவு சேவைகளுக்காக 300 மில்லியன் அவுஸ்.டொலர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அதுவே 2021-22ல் வெறும் 16.6 மில்லியன் ஆஸ்.டாலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் வள மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை என அவுஸ்திரேலிய உள்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
“இந்த திட்டத்துக்கான நிதி என்பது தேவையைப் பொறுத்து ஒதுக்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த சேவைகளைப் பெறும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது,” அவுஸ்திரேலிய உள்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மே மாத வரவு செலவுத் திட்டத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சேவைகளுக்கு 300 மில்லியன் டொலர்களை அரசு ஒதுக்க வேண்டும் என புகலிடக்கோரிக்கையாளர்கள் வள மையம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு வகையிலான விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என அம்மையம் வலியுறுத்தியிருக்கிறது.
இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் அகதி அந்தஸ்து தீர்மானிக்கப்படும் வரை கல்வி கற்பதற்கான உரிமை, வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என அம்மையம் பரிந்துரைத்துள்ளது. இச்சேவைகளின் மூலம் உதவி பெற்ற 7000 புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 சதவீத பேர் நிலையான வருமானம் இல்லாதவர்கள் என அம்மையம் மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-23 வரவு செலவுத் திட்டத்தை பொறுத்தமட்டில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஆதரவு சேவைகளுக்கு 40 மில்லியன் ஆஸ்.டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில், இந்த சேவைகளின் கீழ் 1500 பேருக்கு மேற்பட்டோர் பலன் பெறுவதாகக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 70,000 ஆக உள்ள நிலையில், ஆதரவு சேவைகளின் கீழ் உதவிப்பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2015ல் இச்சேவைகளின் கீழ் பலன் பெற்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஆக இருந்திருக்கிறது.