இலங்கை பொருளாதார நெருக்கடி- உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கருத்து

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிகள் மற்றும் அதன் செயற்பாட்டில் எழும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சமோ ஆதரவோ இல்லாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு சுதந்திரமான சட்டத்தரணிகள் சங்கமாக செயற்படுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுக்கும் முயற்சிகளை அங்கீகரித்து ஆதரவளிப்பதாக அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இலங்கைப் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவம் மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பில் தமது கவலைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பிரஜைகளின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக மீறியுள்ளது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களை 90 நாட்கள் காவலில் அரசாங்கம் வைத்திருக்கிறது.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்க மாத்திரமே பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளான பேச்சு, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு போன்ற உரிமைகளை நசுக்க பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.