இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் தற்போது வடக்கில் களமிறங்கியுள்ளார்கள்-கோவிந்தன் கருணாகரன்

145 Views

இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் தற்போது வடக்கில் களமிறங்கியுள்ளார்கள். அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை அங்கு பயன்படுத்துகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கிய இந்தியாவை ஒருபோதும் பகைத்துக் கொள்ள கூடாது  என்றும் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நேற்று இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது,

“வடக்கு மாகாணத்தில் இன்று இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் களமிறங்கியுள்ளனர். ஊர்காவத்துறையில் பருத்தித்தீவு எனும் இடத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பண்ணை சீனர்களினால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மீனவர் சங்க தலைவர் முறைப்பாடு செய்துள்ளார். இது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று பல்வேறு புலனாய்வுத் துறையினர் கூறுகின்றனர்.

சீனர்களின் கடலட்டை பண்ணைகளுக்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள். கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சர் இந்தியா தமிழ்நாடு முதலீட்டார்களை அழைத்து வந்து அவர்கள் ஊடாக கடலட்டை பண்ணைகளை அமைத்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் தற்போது அனுமதி இன்றி சீனர்கள் அங்கு நிறைந்துள்ளதாகவும் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த பொருளாதார நெருக்கடிகளின் போது இந்தியா எங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளது. அவ்வாறானவர்களை பகைத்துக்கொள்ளக் கூடாது. இந்திய முதலிட்டாளர்களை அங்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம்” என்றார்.

அதே நேரம், வடக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாக இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தி  தொடர்பில் அரசாங்கம் தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இது இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமாகும் என எதிர்க்கட்சி  உறுப்பினர் எம்.வேலுக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply