பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்-எம்.ஏ.சுமந்திரன்

IMG 0061 பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்-எம்.ஏ.சுமந்திரன்

‘இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானால்,இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும்’ என  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்ட   நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பற்றி தமிழ் சமூகத்திற்கு எவரும் எதுவும் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக கஸ்டங்களை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள்.சிங்கள இளைஞர்களும் 1988,89ஆம்ஆண்டுகளில் இந்த சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.நான் சட்டத்தரணியாக தொழில்செய்த காலத்தில் அவர்கள் சார்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று இருந்தாலே ஒருவர் தனக்கு எதிரான சாட்சியமாக அதனை கொடுத்துவிடமுடியும். இந்த சட்டத்தில் உள்ள பிரதான ஆட்சேபனைக்குரிய விடயம் அதுதான்.காவல்துறையினர் எந்தவித விசாரணையும் செய்யவேண்டிய அவசியம் கிடையாது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து நாடு பூராகவும் அதற்கான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டமானது இன்று நாட்டில் சகல மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, இன, மத, பேதம் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சகலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்னைய ஆட்சியில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்குப் பொது இணக்கம் காணப்பட்ட போதலும் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இன்று நிலைமைகள் சுமுகமாக உள்ள காரணத்தால் இதனை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளன.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்” – என்றார்