இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்தின் வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு வரிச்சலுகைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் பல சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாய்லாந்தின் தொழில் கூட்டமைப்பு, தாய்லாந்தின் சுற்றுலா கவுன்சில், தாய்லாந்தின் முதலீட்டு சபை, தாய்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்டவற்றின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் வலுவான மத கலாசார மற்றும் சமூக பிணைப்புக்கள் காணப்படுகின்றமையால் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக உயர்மட்ட வர்த்தகம் செய்யும் முதலீட்டு நட்பு நாடாக இலங்கை மாறுவதற்கு அரசாங்கம் முன்னுரிமையை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் , தாய்லாந்தின் முதலீட்டு சமூகத்தை இந்த திறனைப் பயன்படுத்திக் கொள்ள வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ஜித் விஜயதிலக மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் ரேவன் விக்கிரமசூரிய ஆகியோர் இலங்கை முதலீட்டு சபையினால் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் குறித்து இதன் போது தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.