கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது பதற்றம்

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று (18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதுடன் காவல்துறையினரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் நேற்று (18) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெள்ளவத்தை கடற்கரையில் மாலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் எனக் கூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தையும் தீயிட்டு எரித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மேலதிக பொலிஸ் மற்றும் கலகத்தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

அமைதியான முறையில் நினைவேந்தல் உரிமையைப் பயன்படுத்தி நிகழ்வை நடத்திய சிவில் சமூகத்தினருக்கு இடையூறு விளைவித்தலையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் தடுக்கும் பொருட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்களை அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.

பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் சில மணித்தியாலங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.